Pages

Saturday, October 15, 2022

ஆயிரம் மலர்களே மலருங்கள் ❤️🌷


இக்கட்டான நேரத்தில் தான் அற்புதமான படைப்புகள் பிறக்கின்றன.
அப்படிப் பிறந்தது தான் இந்தப் பாட்டுமாம். ஒரு பின்னணி இசை வேலை நெருக்கடியில், பாரதிராஜா இடையில் வந்து ஒரு காதல் பாட்டுக் கேட்கவும், கவிஞர் கண்ணதாசனிடம் அந்த நேரத்தில் தோன்றிய மெட்டை வரிக்கு வரி சொல்லச் சொல்ல அவர் ஒவ்வொன்றையுன் தன் வரிகளால் உயிர்ப்பித்துக் கொண்டு போன அந்த கதையை இளையராஜாவே சொல்லக் கேட்போம்.
அதை இன்னும் விலாவாரியாகப் பேசியது இங்கே
இன்று காலை இந்தப் பாடல் எதேச்சையாகக் காரின் இசை வட்டு வழியே பிரவாகிக்கும் போது தோன்றிய எண்ண அலைகளுக்கு அளவு கணக்கே இல்லை.
அந்தக் காலத்து இலங்கை வானொலியின்
“திரைய்ய்ய்ய்ய்ய் விருந்த்த்த்த்து”
என்று எங்கள் கே.எஸ்.ராஜா கொடுத்த “நிறம் மாறாத பூக்கள்” ஐச் சொல்லவா?
இல்லை இந்தப் படத்தை “நியூ விக்டர்ஸ்” வீடியோ கடையில் வாடகைக்கு எடுத்து அண்ணன்மார் போட்டுக் காட்டிய கதை சொல்லவா?
அதையும் தாண்டி
“ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று வரும் போது அந்த இசைத் துள்ளல் நாயகி ரத்தியின் துள்ளலாகவே மனப் பிரமை எழுப்புவதையா?
பாடலின் ரிதத்திலேயே ரத்தியின் துள்ளலைக் காட்சிப்படுத்தி விடும் இசை.
இரண்டு காதல் கதைகளும் சங்கமமாகும் “கதா சங்கமத்தின்” அற்புதமான விளைச்சல் இந்த நிறம் மாறாத பூக்கள். கே.பாக்யராஜ் கதையை மீண்டும் பாரதிராஜா படமாக்கிய காதல் காவியம்.
தன்னை ஒரு கிராமியப் படைப்பாளி என்ற முத்திரையை நீக்க முதலில் “சிகப்பு ரோஜாக்கள்” இப்போது “நிறம் மாறாத பூக்கள்”. இதில் கமலுக்குப் பதில் சுதாகர், ரஜினிக்குப் பதில் விஜயன். அதுவும் அந்த விஜயனுக்கு பாரதிராஜாவின் குரல். அதை அந்தக் காலத்தில் ஒலிச்சித்திரமாகக் கேட்கும் போதெல்லாம் அது கொடுத்த அதிர்வு அப்பப்பா இப்போதும் அதிரும்.
இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கே பிறப்பெடுத்தது போலவே ஜென்ஸிம்மா பாடும் போது கொஞ்சம் துள்ளலுமாக.
அந்த ஆரம்பக் குரலோசை மலை முகடு எங்கெணும் தொட்டுத் தொட்டுப் போவது போல. இதையே நிறம் மாறாத பூக்கள் பட விளம்பரத்தின் ஆரம்பத்திலும் சேர்த்திருப்பார் கே.எஸ்.ராஜா.
அந்த இரண்டு பேரச் சுற்றியும் காட்சியைப் பாருங்கள். இயற்கையோடே உலாவ விட்டிருக்கிறார். ஆனால் கண் வெட்டாது பார்க்க முடியும் ஒரு பிரமாண்ட உணர்வு. அதுதான் பாரதிராஜா.
“பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே…,”
மலேசியா வாசுதேவன் வந்து கலக்கும் இடத்தை ஆரம்ப மெட்டிலேயே போட்டாலும் அதுவும் தொடக்கம் போலவிருக்கும். மலேசியா அண்ணனுக்கு இந்தப் பாடல் எல்லாம் மணி மகுடம். பாத்திரமாகவே ஆகி உருகித் தள்ளியிருப்பார் மனுஷர்.
காட்சிப் பொருத்தத்துக்கு ஏதுவாக சைஜலாவும் வந்து முடித்து வைப்பார். படத்தின் தலையெழுத்தே இந்தப் பாடல் தான்.
ஒரு பக்கம் பாடகர்களின் அந்த வசியத்துக்குக் கட்டுப்படுவதா இல்லை அதைச் சுற்றிப் பரவிய இசைத் துணுக்குகள் ஒவ்வொன்றாக மகரந்தத்தை நக்கும் தேனீ போல ஒன்று விடாமல் ஒற்றி ஒற்றிக் கேட்பதா என்ற இரு தலை மனது.
அதுவும் “குபுக் குபுக்” என்று நுரை தள்ளும் புல்லாங்குழல் பிரவாகத்தில் தேன் உண்ட களிப்பில் பூவை வட்டமிடும் வண்டாக மனசு.
“ராகங்கள் நூறு
பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும்
ஒன்றல்லவோ”
போகிற போக்கில் தமக்குத்தாமே வாழ்த்தி மகிழ்வது போல் கவியரசரும் இசைஞானியும்.
ராஜா அந்தக் காணொளியில் கவியரசர் பற்றிச் சொன்னதை மெய்ப்படுத்துவார் தன் வரிகளில்.
“பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி
உலாவும் நேரமே…..
சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல்
தாயாகுமோ…..”

0 comments: