Pages

Wednesday, October 12, 2022

ஒனக்காகப் பொறந்தேனே எனதழகா 💚💛♥️


ஒரு பாடல் தொடங்கும் போதே மெலிதான புன்முறுவல் வந்து விடும். அப்படியாகப்பட்ட பாட்டு இது.


“உனக்காக” என்ற சொல்லை “ஒனக்காக” ஆக்கி விடும் அந்தக் காலத்து சுசீலாம்மாவைப் பிரதியெடுத்த சந்தியாவின் குரலோடு, 

P.B.ஶ்ரீனிவாஸ் இன்றிருந்தால் “இங்கே வா பைய்யா” என்றழைத்து இவர் கைகளைப் பிடித்து இறுக்குவாரோ எனத் தோன்றும் பால்ராம் என்று அப்படியே ஐம்பது வருடம் முன்னகர்த்தி விடும் பிரமை அல்லது பிரமிப்பான குரல்கள்.


இந்தப் பாடலை எழுதும் போது என்ன தோன்றியது என்று கேட்டால் கதை கதையாகச் சொல்வாரோ வாலி ஐயா என்று காலம் கடந்த ஞானத்தால் மனம் நொந்து கொள்கிறது.


திரையிசையில் தொன்மம் தழுவிய சம காலத்துப் பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கிறோம்.

இந்தப் பாடலில் ஜோடி சேர்ந்த சந்தியா (சுசீலாம்மா மருமகள்) கூட 

“பூங்கொடியின் புன்னகை” ( இருவர்)


https://youtu.be/Jb4S3MCRt7Y


சற்று முன்னோக்கினால் சுரேந்தர் & சித்ரா “பாரிஜாதப் பூவே”


https://youtu.be/-m-M6yTaolI


ஜிக்கியம்மா தொண்ணூறுகளில் பாடியவை அதே பழைய பிரதிபலிப்பில் அதுவும் குறிப்பாக அபூர்வ சக்தி 369 இல் “இள வாலிபனே”


https://youtu.be/4sM5qDFoPRs


இன்னும் கொஞ்சம் பத்தாண்டுகள் முன்னோக்கினால் C.S.ஜெயராமனை அடியொற்றி மலேசியா வாசு தேவன் பாடிய


“இந்த அழகு தீபம்” (திறமை) உமா ரமணனுடன்,


https://youtu.be/NYe-8gNGQMI


சைலஜாவுடன் “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே” (மணிப்பூர் மாமியார்) 


https://youtu.be/eEqNxMvBfM8


என்றெல்லாம் கொட்டும்.


முன் சொன்ன பாடல்கள் எல்லாம் இனிமை சொட்டும். அதில் சந்தேகமென்ன. ஆனால் அவற்றின் காட்சி வடிவத்தில் ஒரு பொய்மை இருக்கும், இருவர் நீங்கலாக. (மணிப்பூர் மாமியார் வரவில்லை).


இவற்றைத் தாண்டி “உனக்காகப் பிறந்தேனே” பாடலின் இசையின்பம், குரலின்பம், போடப்பட்ட வரிகளின்பம், இவை எல்லாமும் பிரதிபலிக்கும் காட்சி இன்பம். ஆகா 😍


இந்தப் பாடல் வெளிவந்து சில நூறு முறை கேட்டிருப்பேன். அவற்றில் பாதிக்கு மேல் காட்சியோடு ரசித்தது தான்.

ஒருமுறை கேட்க வேண்டும் என்று மனம் உந்திக் கேட்டால் விடாது நாலைந்து தடவையாவது கேட்க வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும்.


“ஒருவாட்டி என்னை

ஓரசாட்டி உன்னை

உறுத்தும் பஞ்சன மெத்தையும்

ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில…”


காட்சிக்கு என்ன தேவையோ அதை ஏற்கனவே வரிகளில் வடித்திருப்பார் வாலியார்.

மின் வெட்டு நாளில் “வெளிச்சப் பூ” என்றவர் இங்கே கை விளக்கை “பூத்திரி” என்கிறார். என்னவொரு உவமை 😍


இந்தப் பாட்டு முழுக்க தன்னுடைய இயல்பில் இருந்து விலகிய கரிசக்காட்டுக் கவிஞர் ஆகி விடுவார் வாலி.


குறும்புக்காரக் கணவர் ஜெயபிரகாஷ், வெட்கப் புன்னகை துளசி இவர்களுக்குள் இருக்கும் அழகான தாம்பத்ய பந்தத்தை ஒரு மூன்று நிமிடப் பாடல் முன்னூறு பக்க நாவலாக்கி விடுகிறது.

பாட்டு அது பாட்டுக்குப் பயணிக்க, அதன் சின்னச் சின்ன அசைவுகளிலும் இவர்களின் ஹைக்கூ காதல் ❤️


இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்ற பொய்க்கோபம் இலக்கியா அம்மாவுக்கு 😀

இந்தப் பாடலே பெரு நிறைவு கொடுக்கிறது எனக்கு.


❤️


“ஒனக்கு வாக்கபட்டு வருசங்கள் போனா என்ன

போகாது உன்னோட பாசம்

என் உச்சி முத பாதம் வரை

என் புருஷன் ஆட்சி

ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த

முத்தாலம்மன் சாட்சி”


இந்தப் பாட்டைக் கேட்டுக் கேட்டு ஆனந்தக்  கண்ணீர் வந்ததுமுண்டு. என்னவொரு இசை வார்ப்பு ஜஸ்டின் பிரபாகரா 😍


ஒரு சுவையான உணவைச் சாப்பிட்ட பின் சப்புக் கொட்டும் நாக்குப் போல கேட்ட பின்னும் மனமும், நாவும் அசையும்.


ஒனக்காக பொறந்தேனே 

எனதழகா

பிரியாம இருப்பேனே 

பகலிரவா 


❤️

இறுக அணைத்துக் கொள்ளும்

பாட்டு


https://youtu.be/FEd-cRfygIk


கானா பிரபா

0 comments: