“தம்தன நம்தன தாளம் வரும்” பாட்டைத் தெரியாதவர்கள் யாருமுண்டோ? அந்தப் பாடலில் ஜென்ஸியோடு கூடப் பாடியவர் B.வசந்தா. இவர் தமனின் தாயாரின் சகோதரி தான். “ஆசை வந்த பின்னே” (கொஞ்சும் குமரி) பாடல் வழியாகத் தமிழில் அறிமுகமாகி
“திருவளர்ச் செல்வியே” (ராமன் தேடிய சீதை), “பொட்டு வைத்த முகமோ” (சுமதி என் சுந்தரி) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்களைப் பாடியவர் வசந்தா.
தமனின் தாய் சாவித்திரி கூட ஒரு பாடகியே.
தமனின் சகோதரி யாமினி கூட ஒரு பின்னணிப் பாடகியாக இயங்கி வருகிறார். எனிமி படத்தில் Tum Tum பாட்டு பாடியது யாராம்?
இன்னொரு முக்கிய விஷயம் தமனின் மனைவி ஶ்ரீவர்த்தினி தமிழில் புகழ் பூத்த பல பாடல்களைப் பாடி வருவதும் இசைஞானி இளையராஜாவின் மேடை நிகழ்வுகளிலும் பங்கேற்று வருவது நீங்கள் அறிந்ததே.
சக்கரவர்த்தி போன்ற இசையமைப்பாளர்களிடம் ட்ரம்மராகப் பணியாற்றிய தமனின் அப்பா சிவகுமார் 1995 இல் திடீரென்று இதயவலி கண்டு இறந்து விட (அதாவது தமனின் 13 வது வயதில்)
தன் இள வயதிலேயே குடும்பப் பாரம் ஏற்க இசைக் கலைஞராக மேடையேறுகிறார். கிட்டத்தட்ட ஏ.ஆ.ரஹ்மான் கதை போல் இருக்கிறதல்லவா?
சத்யசாயி பாபாவின் அருட்கடாட்சமும் இந்தக் குடும்பத்தில் மேல் இருக்க, புட்டபர்த்தியிலேயே தமனின் தங்கையும் படித்து ஆளாகின்றார். (தகவல் நன்றி https://sathyasaiyugam.blogspot.com/ )
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு ஆயிரத்துக்குமேற்பட்ட இசைக் கச்சேரிகளில் இயங்கிய தமன், ட்ரம்ஸ் சிவமணி, மணிஷர்மா, கங்கை அமரன் போன்றோரின் இசை மேடைகளிலும், வெங்கட் பிரபு & சரண் போன்ற இளவல்களோடும் இயங்கி வந்திருக்கின்றார்.
ராஜ் – கோட்டி, கீரவாணி போன்றோருக்கு வாத்தியக்காராக இருந்தவர் மணிஷர்மாவிடம் 94 படங்களில் கூடவே இயங்கி அவரையே குருவாக வரித்துக் கொண்டவர். மணிஷர்மா கூட உமா ரமணன் & ரமணன் இசைமேடைகளில் தன் ஆரம்ப காலத்தை வளர்த்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய ட்ரம்ஸ் உடனேயே நடித்தும் விட்டார் தமன்.
தெலுங்கில் “கிக்” படம் தான் தமனைப் பெரு உயரத்துக்கு இட்டுச் சென்ற படம். 2009 இல் தொடங்கிய அந்த எவரெஸ்ட் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
2020 இந்தியத் தேசிய விருதுப் பட்டியலில் நமக்கு நெருக்கமான தமிழ்ப் படைப்பாளிகளை அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை இன்னொரு பெருமிதமான அங்கீகாரத்தையும் கொண்டாட வேண்டும். அந்த வெற்றியாளர், இசையமைப்பாளர் தமன் சிறந்த பாடல்களுக்காக “Ala Vaikunthapurramuloo” என்ற தெலுங்குப் படத்துக்காகத் தேசிய விருதைப் பெற்றிருக்கின்றார்.
வலிகள் இல்லாமல் விருதுகள் இல்லை
வாருங்கள் நாமும் தமனைக் கொண்டாடி வாழ்த்துவோம்.
கானா பிரபா
23.07.2022
0 comments:
Post a Comment