1993 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இசைஞானி இளையராஜாவின் ஐந்து படங்கள் (கோயில் காளை, மறுபடியும், வால்டர் வெற்றிவேல், மாமியார் வீடு, சின்ன மாப்ளே) வெளியாகின்றன.
இவற்றில் வால்டர் வெற்றிவேல் மற்றும் மாமியார் வீடு ஆகிய படங்களில் ஒரு குறும்பு விளையாட்டைக் காட்டுகிறார் ராஜா.
லதாங்கி ராகத்தை அடிப்படையாக வைத்து இரண்டு பாடல்கள்.
ஒன்று மெல்லிசையாய் வரும்
“என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது நந்தவனமா?”
https://www.youtube.com/watch?v=MoF5p8fP5C0
என்ற “மாமியார் வீடு” படப் பாடல். (வானொலியில் திருமண நாள் வாழ்த்து நிகழ்ச்சிக்கு என் கை கொடுப்பான் தோழன் இந்தப் பாட்டு)
இன்னொன்று அதற்கு முற்றிலும் மாறுபட்ட அதிரடியான துள்ளிசைப் பாட்டு (குத்துப் பாட்டு என்று சொல்லப் பிடிக்காது எனக்கு)
“சின்ன ராசாவே
சித்தெறும்பு என்னைக் கடிக்குது"
https://www.youtube.com/watch?v=aDVtHmOXm28
இந்தச் சின்ன ராசாவே பாடல் வெளியான நாளில் ஒரு யுகப்புரட்சியே செய்தது எனலாம் 🙂
கலியாணவீடு, கோயில் திருவிழா எல்லாம் பாட்டுப் பெட்டிகளில் மட்டுமல்ல நாகசுர, மேள தாளக் கலைஞர்கள் கூட விட்டு வைக்காமல் துள்ளிசைத்தார்கள்.
என் நினைவுக் கிளப்பிகளில் ஒன்று இந்தப் பாட்டு.
அப்போது உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலமது, கடும் யுத்த ஒரு பக்கம், ஆனாலும் இளைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் கிட்டிய ஒரே ஆறுதல் சினிமாப்பாட்டு. புதுசா ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் வந்து கொம்ப்யூட்டர்ல மியூசிக் போடுறார். இளையராஜாவின் அணியில் இருந்த சந்தர்ப்பவாதிகள் எதிரணி அமைத்துக் கொண்டு விட்டார்கள். நமக்கோ ஏகப்பட்ட கடுப்பு.
ஆனாலும் ராஜா அந்த நேரத்தில் மானாவாரியாக இசையமைத்த படங்கள் உப்புமா கம்பெனியில் இருந்து பி.வாசு படங்கள் வரை எமக்குப் பக்கபலமாக இருந்து எதிர்க்கட்சிக்காரரைச் சமாளிக்கக் கைகொடுத்தன.
யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் பக்கமா இருக்கிற ஒரு மரப்பெட்டி மேல் மாடியில் சண் றெக்கோடிங் பார், ஷண் தான் எனக்கு ஆஸ்தான பாடல் ஒலிப்பதிவாளர்.
"என்னண்ணை படப்பாட்டு வந்திருக்கு"
என்று கேட்டால் என்றால் நோட்டுப் புத்தகத்தில் புதுசா வந்த படத்தின் தலைப்பைப் போடு இரண்டு கீறு அதுக்குக் கீழே இழுத்து விட்டு, பாடல்களையும் பாடியவர்களின் விபரங்களைப் போட்ட நோட்டுப் புத்தகத்தைக் காட்டுவார். இதெல்லாம் சம்பிரதாயபூர்வமான விஷயம் என்றாலும் அவருக்குத் தெரியும் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று.
"இந்தப் படம் இளையராஜா இசையமைச்சதெல்லோ,
முழுக்க றெக்கோர்ட் பண்ணுங்கோ" என்று விட்டு ஒரு நைந்து போன ஒலிநாடாவைக் கொடுத்து விட்டு வருவேன். அந்தக் காலத்தில் கசெட் இற்கும் தடை என்பதால் பாடல் பதிவு செய்யப்பட்டு அலுத்துப் போன கசெட்டில் மீளவும் வேறு பாடல்களைப் பதிப்பித்துக் கேட்கும் காலம். ஷண் ரெக்கோர்டிங் பார் குறித்து எழுத வேண்டியது நிறைய, அதைப் பிறகு பார்ப்போம்.
ஒருநாள் டியூசன் முடிந்து திருநெல்வேலிச் சந்தியால் நாலைந்து பெடியளுடன் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கிறோம், ஒரு முடக்கில் இருந்த ரெக்கோர்ட்ங் பார் இல் இருந்து வருகிறது பாட்டு,
"சின்னராசாவே சித்தெறும்பு
என்னைக் கடிக்குது".
அப்போதுதான் அந்தப் பாட்டைக் கேட்கிறோம், ஆளையாள் பார்த்துச் சிரிக்கிறோம்,
"என்னடா இது சித்தெறும்பு கடிக்குதாம்
எப்பிடியெல்லாம் எழுதுறாங்கள்"
ஆனால் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்திலேயே ராஜாவின் பாடல் என்பதால் எதிரணிக்கு இடம் கொடுக்காமல் "அருமையான ரியூன் மச்சான், ஜானகி பின்னுறா" என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் வெட்கம். ஏனென்றால் மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பாடல் கேட்பதென்றால் வீட்டு முற்றத்தில் சைக்கிளைக் கிடத்தி, பெடலை உருட்டும் போதுஅதில் உள்ள டைனமோவில் இருந்து மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சித் தான் பாடலைக் கேட்கவேண்டும். சுற்றும் முற்றும் உள்ள வீட்டுக்காரருக்கும் பாடல் அலறும் அளவுக்குச் சத்தமாக இருக்கும்.
அடுத்த நாளே ஷண் ரெக்கோர்டிங் பார் சென்று இல் வால்டர் வெற்றிவேல் பாட்டு முழுக்க அடிச்சாச்சு, எல்லாப்பாட்டிலும் இந்தப் பாட்டுத் தான் கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்றென்றால் ஷண் ரெக்கோர்டிங் பார் காரனும் இந்தப் பாட்டை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்பப் போட்டு மனசில் இந்தப் பாடலை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார். நண்பன் சுதா வீட்டுக்குக் பாடல் கசெட் ஐ எடுத்து செல்கிறேன். புதுசா "வால்டர் வெற்றிவேல்" எண்டு ஒரு படப்பாட்டு வந்திருக்கு. ஒரு பாட்டு இருக்கு கேளும் முசுப்பாத்தியா இருக்கும் என்று நைசாகக் கதையளக்கிறேன். சில சமயம் எதிராளி எங்களை அவமானப்படுத்த முன்னர் நாங்களே சரண்டர் ஆகி விட்டால் பிரச்சனை பாதி முடிந்த மாதிரித்தான். அப்படித்தான் இங்கேயும். 'கட்டெறும்பு என்னைக் கடிக்குது எண்டெல்லாம் பாட்டு எழுதினம் கேட்டுப் பாருங்கோ" என்று நைச்சியமாகப் பேச, சுதாவும் சிரித்துக் கொண்டே சைக்கிளைக் கிடத்திவிட்டு பெடலை சுழற்றுகிறார். எடுத்த எடுப்பில் முதல் பாட்டே "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது" ஒரு கையால் பெடலைச் சுத்திக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார் கூட்டாளி சுதா.
அந்தப் பக்கமாகப் போன சுப்பையாண்ணை, வயசு எழுபதுக்கு மேல் இருக்கும்
"உதென்னடா பாட்டுப் போடுறியள்
கட்டெறும்பு கடிக்குது எண்டு, அந்த நாளேலை நாங்கள் கேட்ட பாட்டும், இப்ப வாற பாட்டுக்களைக் கேட்டால் சீவன் போகுது"
என்று புறுபுறுத்துக் கொண்டு நகர்கிறார். கொஞ்ச நாளில் ஊரெல்லாம் பரவுகிறது "சித்தெறும்பு" பாட்டு. எங்களுக்கும் வலு சந்தோசம், எதிர்க்கட்சிப் பாட்டுக்காரரும் விரும்பிக் கேட்கினம்.
படம் வந்த நேரம் பிரபு தேவா போட்ட தொள தொள ஜீன்ஸ் உம் பிரபலம். அதை பகி ஜீன்ஸ் என்று சொல்லி, "அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாகசுரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும்
"சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது"
கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.
கானா பிரபா
0 comments:
Post a Comment