Pages

Wednesday, April 27, 2022

கனவு ஒன்று தோன்றுதே.... இதை யாரோடு சொல்ல.....

இசைஞானி இளையராஜாவின் அசாத்தியமான படைப்புகளில் ஒன்றாக இந்தப் பாடலைக் கொண்டாடும் என் மனம்.
முகப்பு இசையே அந்தக் கனவுச் சுழலுக்குள் இழுத்து போக,
“கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக”
துள்ளிசைக்கும் ஜானகி. “இதை யாரோடு சொல்ல” வில் ஒரு கிசுகிசுப்பும், இலேசான பதட்டமும் ஒட்டியிருக்கும். பூசப்பட்ட இசையும் துள்ளலோடு அதைத் தாங்கிப் பிடிக்கும்.
ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல் அப்படியே
பூமகள் மேலாடை…
நெளியுமோ…
நகர்ந்திடுமோ....
நழுவிடுமோ.....ஓஓஓஓ
காமனே வாராதே…ஏஏஏ
காமனே வாராதே
மனமே பகையா
மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க.......
என்று ஒரு கஸல் இசைப் பிரவாகத்தில் மூழ்கி எழ முடியாமல் அதில் இருந்து கொண்டே எழுப்பும் சாதகமாகக் கொடுப்பாரே?
அசாத்தியம்....அசாத்தியமே தான். அது ஜானகிக்கே உரித்தானது. அதனால் வேறு யாருக்கும் வேண்டாமல் ராஜா அவருக்கே அளித்திருப்பார்.
இதைக் கேட்கும் தோறும் P.B.ஶ்ரீநிவாஸ் அவர்கள் பிறப்பித்து எஸ்.ஜானகி பாடும் “Tu Nahin Jaan Saki”
ஐ மெல்ல ஞாபகப்படுத்தும். சரணத்தில் கொடுக்கும் இந்த ஜாலம் தான் பாடலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும்.
ஆனால் இந்தப் பாடல் உயர வேண்டிய எல்லைக்குப் போய்ச் சேரவில்லை. இந்தப் பாடலின் அடி நாதமாக இருக்கும் ராகமான ரேவதியைக் கூட ஏனைய கூட்டாளி ராகங்கள் அளவுக்கு மெச்சி நான் கண்டதில்லை என்ற ஏமாற்றம் அடி மனதில் இருக்கின்றது.
இந்த இரண்டு சரணங்களின் முடிவிடத்தை நெருங்க நெருங்க அப்படியே ஸ்ருதி குறைந்தும் கூடியும் எழும் மன ஆர்ப்பரிப்பின் இசை வெளிப்பாடு அப்படியே
“ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ
பாடிடுமோ...
இடம் சேர்ப்பித்து விடும். இரண்டு பாடல்களுமே ரேவதி ராகம் என்ற அணிகலன் வேறு.

இந்த மாதிரியானதொரு பாடலைக் காட்சியமைப்பிலும் கொண்டு வருவது மகா கஷ்டம். ஒரு படத்தை எடுத்து முடிக்கக் கூடிய நுட்பத்தை முழுப்பாடலையும் உருவாக்கும் போது செதுக்க வேண்டும். ஆனால் எந்தவித சிரத்தையும் இல்லாமல் ஏனோதானோவென்ற போக்கில் படமாக்கப்பட்டுப் பத்தோடு பதினொன்றாகி விட்டது. இம்மட்டுக்கும் படத்தின் இயக்குநர் ஶ்ரீதர் அவர்கள் உச்சபட்ச பாடல் ரசனை கொண்டவர். அதனால் தானோ என்னமோ ராஜாவும் இழைத்து இழைத்து ஒரு தனித்துவப் படைப்பாக உருவாக்கியிருப்பார்.

காட்சியில் வந்தது போலல்லாமல் அந்த ஒற்றைப் பெண்ணின் உணர்வலைகளை மட்டுமே ஒளிப்பதிவாளரின் கண்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

“ஒரு ஓடை நதியாகிறது" ஒரு அசாதாரண சூழலில் ஒருவனின் பாலியல் இச்சைக்கு ஆளானவளின் கதையாகித் தொடங்கி முடிக்க வழியின்றி ஒப்பேற்றி விட்டது போன்ற கதைப் போக்கைக் கொண்டது. சுமலதா தவிர யாருக்குமே இந்தக் கதையின் கனத்தைத் தாங்கும் சக்தி அப்போது இருக்கவில்லை என்பது இந்தப் படத்தை மீளவும் பார்த்த போது புரிந்தது.
“தலையைக் குனியும் தாமரையே”, “தென்றல் என்னை முத்தமிட்டது” போன்ற பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இப்போதெல்லாம் இசைஞானியின் கொண்டாடப்படாத பாடல்களை அகழ்ந்தெடுத்துக் கொண்டாடும் இளைய தலைமுறையின் கண் பட்டு இந்தப் பாடல் இன்னும் ஒளிரும். அந்தக் கையளிப்பு நிகழும் வரை ராஜா ரசிகர்கள் இதைக் கொண்டாடி மகிழ்வோம்.
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
லலல லால லால்லலா
ல லாலால லாலா
லலல லால லால்லா ல லாலால லாலா

கானா பிரபா

1 comments:

Anonymous said...

Cute song