Pages

Monday, December 27, 2021

விடை கொடுத்த பாடகர் மாணிக்க விநாயகம் ❤️



“வீழ மாட்டோம்

நாம் வீழ மாட்டோம்

எங்கள் விரல்கள் யாவும் 

விழுதுகள் ஆனதால்

ஆழி திரண்டு அலைகடல் எம்மைத் தின்றாலும்

ஊழி திரண்டு உயிர்களைத் தின்றாலும்......”

சுனாமிப் பேரலை அனர்த்தத்தை நினைவு கூர்ந்து வெளிவந்த “வீழ மாட்டோம்” இசைவட்டு வெளிவந்து 17 ஆண்டுகள் மிதக்கும் நேரம் அந்தப் பாடல் தொகுப்பில் உரப்போடு அந்த முன் பத்தி வரிகளைப் பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களும் விடைபெற்று விட்டார்.

“அத்த மக நெனப்பு

வெத்தலைக்கு சிவப்பு ஓ…..

ஓ...

கொத்தமல்லி

சிரிப்பு பத்திக்குச்சு நெருப்பு

ஓ....”

அட ! ஒரு துள்ளிசைப் பாடலிலும் கூட இலாகவமாக ஒரு சங்கதியைத் தொட்டும் தொடாமாலும் போகிறாரே என்று பிரமிக்க வைத்தவர். அன்று தொடங்கிய திரையிசை இயக்கம் “கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி” பாடலும் வந்து இந்த ஆண்டோடு 20 ஐத் தொடுகிறது. 

மரபு ரீதியான திரையிசைப் பாடகர்களைத் தவிர்த்து, சாஸ்திரிய இசை உலகில் கோலோச்சியவர்கள், நாட்டுப் பண் பாடவல்லோரையும் தமிழ்த் திரையிசை உள்வாங்கியிருக்கிறது.

தன் முன்னோர்கள் வழியிலேயே இசையமைப்பாளர் வித்யாசாகர் கன்ஷியாம்வாஸ்வாணி ( நதி எங்கே என்ற உயிரோடு உயிராக படப் பாடல்) கஸல் பாடகரையும், புஷ்பவனம் குப்புசாமி என்ற கிராமிய பண் வித்தகரையும் (தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா – எதிரும் புதிரும்) பாட வைத்த போதும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் இன்றித் திரையிசைக்கான மாறுபட்ட சட்டையை அணிவித்து அழகு பார்த்தவர். 

மாணிக்க விநாயகம் அவர்கள் “கண்ணுக்குள்ள கெளுத்தி” பாட வருவதற்கு முன்பே ஆயிரக் கணக்கில் பக்தி இலக்கியங்கள் சமைத்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவரைக் கூடத் தன்னிசையில் பாட வைத்த போது வித்யாசாகர் கொடுத்த இந்தத் துள்ளிசை தான் ஜனரஞ்சக உலகில் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. எப்படி ஒரு சிறுபத்திரிகையில் கோலோச்சும் இலக்கியக்காரன் விகடன் போன்ற வணிக சஞ்சிகையின் வழி அடையாளம் பெறுவது போன்றதொரு பாங்கு.

ஆனால் தனக்குக் கொடுத்ததை அவர் செம்மையாகவே செய்து காட்டினார் என்பதை மாணிக்க விநாயகம் அவர்கள் தொடந்து பாடிக் குவித்த ஏராளம் இதே மாதிரியான பாடல்கள் உதாரணம் பறையும்.

வித்யா சாகரும் தன்னகத்தே வைத்துக் கொண்டு “கொடுவா மீசை” (தூள்), தீராத தம்மு வேணும் (பார்த்திபன் கனவு) வரிசையில்  ஏராளம் பாடல்களைக் கொடுத்தாலும், பல்வேறு இசையமைப்பாளர்கள் கூட மாணிக்க விநாயகம் அவர்களது திறன் அறிந்து உள்வாங்கிப் பல் பரிமாணங்களில் அவரைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அவரின் பக்தி இலக்கிய அடையாளத்தைத் தழுவிய பாடல்களைக் கொடுத்ததில்லை. கானா பிரபா

ஈராயிரத்தின் முற்பகுதியில் திரையிசை சாராத தனிப்பாடல்களை வைத்து “நாத விநோதங்கள்” என்றொரு வானொலி நிகழ்ச்சியை நடத்தினேன். எந்தவித முன்னேற்பாடுமின்றி வானொலிக் கலையகத்தில் நுழைந்து, ஏதோவொரு நம்பிக்கையில் அடுக்கியிருந்த இசைவட்டுகளில் ஒன்றை எழுமாற்றாக எடுத்தால் அங்கே மாணிக்க விநாயகம் அவர்கள் பாடிய சாஸ்திரிய இசைத் தொகுப்பு இருந்தது. “தில்” பாடலைக் கேட்டுக் களி கொண்டிருந்த மனதுக்கு அதுவொரு முற்றிலும் புதிய அனுபவமாகத் தொனித்தது. 

புதிய தலைமுறைப் பாடகர்களோடும் தன்னால் ஈடுகொடுத்துப் பாடி, ரசிகர்களைக் கவர முடியும் என்பதற்கு “தேரடி வீதியில் தேவதை வந்தா” பாடல் கச்சிதமான உதாரணம். அங்கே கார்த்திக்கோடு ஈடு கொடுத்துக் கலக்கியிருப்பார்.

“ஏலேலோஓஓஓஓ

எலெலேலேஓஓஓஓஓ”

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

https://www.youtube.com/watch?v=OyC30xjyQ_Y

திப்புவுக்கு அணி சேர்க்கும் இயற்கையின் பாடலுக்கு வள்ளக்காரரின் ஆலாபனையாக மட்டுமே வந்து சேரும் “மாணிக்க” விநாயகம்.

அந்த மாதிரி ஆலாபனையைக் கொஞ்சம் விரித்து நீட்டி அனுபல்லவியாக மாணிக்க வி நாயகம் அவர்களை இருத்தி யுவன் ஷங்கர் ராஜா செய்த கெளரவம் இப்படி விரியும்,

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

ஒத்த பனை மரத்துல 

செத்த நேரம் உம்மடியில் 

தல வச்சி சாஞ்சிக்கிறேன் 

சங்கதியை சொல்லி தாரேன்.. 

வாடி... நீ வாடி... 

பத்து கண்ணு பாலத்துல 

மேய்ச்சலுக்கு காத்திருப்பேன் 

பாய்ச்சலோடு வாடி புள்ள 

கூச்ச நச்சம் தேவையில்லை.. 

வாடி.. நீ வாடி.. 

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

“ஏலே... ஏ.. ஏலேலேலே...

செவ்விளனி சின்ன கனி..

உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..”

“ஐயய்யோ என் உசுருக்குள்ள

தீயை வச்சான் ஐயய்யோ.....” 

https://www.youtube.com/watch?v=INo1LHK8GVM

அப்படி ஒரு கிராமிய சங்கீத வித்தகராகவும் மாணிக்க விநாயகத்தையும் அடையாளப்படுத்திய அற்புதம் அது.

கானா பிரபா

“இசைப் பேரறிஞர்” வழுவூர் இராமையாப்பிள்ளை என்ற புகழ்பூத்த பரத நாட்டிய மேதையின் மகனாகப் பிறந்தாலும், தனி அடையாளத்தோடே தன்னை வளர்த்து இசையுலகில் ஆண்டு விட்டுப் போயிருக்கிறார். தன்னுடைய மாமனாராகவும், இசைக் குருவாகவும் “தமிழ் இசைச் சித்தர்” சி.எஸ்.ஜெயராமனைப் பெற்று அவர் வழியே பன்முகப் பாடகராகவும் இன்றைய தலைமுறைக்குத் திகழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.

“தாய் சொல்லும்

உறவை வைத்தே உலகம் சொந்தம் 

தாய் உள்ள

வரையில் தானே கிராமம்

சொந்தம்......

17 வயசு

வரைக்கும் நீ வாழும்

வாழ்க்கை தானே

பாலூட்டும் காலம்

வரைக்கும் கூட வரும்....”

https://www.youtube.com/watch?v=UrVHmZh-B4k

என்று தன்னையும் உருக்கிக் கேட்பவனையும் உருக்கும் வல்லமை மிகுந்த பாடகர் இவர்.

“கையோடு அள்ளிய

தண்ணி விரலோடு கசிவது

போல கண்ணோடு நினைவுகள்

எல்லாம் கசிகிறதே……”

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றே அசரீரிப் பாடல்களுக்குக் கச்சிதமாக அமைந்த குரல் மாணிக்க விநாயகம் அவர்களுடையது. அப்படியே புரட்டிப் போட்டது போல “விடை கொடு எங்கள் நாடே” பாடலில் அந்தப் பாடகர் கூட்டணியில் கலந்து போகும் மாணிக்க விநாயகம் அவர்களது குரல் குடத்தில் இருந்து வழியும் நீர் நேர் கோடாய்ச் சீமெந்துத் தரையில் இழுத்துப் போவது போலக் வழிந்துருகும். 

"பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்

கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை

கடைசியாக பார்க்கின்றோம்........

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மரக் காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா...."

ஆழ்ந்த இரங்கல்கள் மாணிக்க விநாயகம் ஐயா !


கானா பிரபா

27.12.2021


0 comments: