இந்த மார்கழி மாதத்து விடியலில் இன்றைய காலை உடற்பயிற்சியில் என் வேக ஓட்டத்தோடு மெதுவாக ஆமை நடை போட்டுக் கொண்டு வந்தது காதுக்குள் இந்தப் பாட்டும்.
ஆனால் “ஆமையும் முயலும்” கதை போல உடற்பயிற்சி முடிந்த பின்னரும் இந்த ஆமை தான் வெற்றி வாகை சூடி என்னை ஆக்கிரமித்திருக்கிறது.
“நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை....”
https://www.youtube.com/watch?v=XVtRj1KDXV8
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இளையராஜா இசையில் முதன் முதலில் பாடிய பாட்டு. எஸ்பிபியும், எஸ்.ஜானகியும் அடுத்த தசாப்தத்தை மெல்லிசையாலும், துள்ளிசையாலும் தன்னிசையில் கலக்கப் போகிறார்கள் என்று அறிந்தோ அறியாமலோ கொடுத்த “மெது நடைப் பாட்டு”. காதுக்குள் கிசுகிசுக்கும் தாழ் ஒலியில் பாட வேண்டும். வரிகளில் ஆழம் நிறைந்தாலும், ஒரு மாயக் கயிறு கட்டி அதற்குக் கீழே இருந்து பாடுமாற் போல பாட வேண்டும் என்று பயணிக்கும்.
“மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” என்று இந்தப் பாட்டைச் சொல்லி விடலாம்.
“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னது போல, இங்கே “திருவாய்மொழியையும்’,
நிகழ்ந்து கொண்டிருக்கும் திருவெம்பாவைக் காலத்தில்
“திருவாசகத்தையும்” இணைத்து ஒரு சைவ, வைணவக் கலவை ஒப்பீட்டோடு
“திருவாய் மொழி, திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்...”
அப்படியே அவற்றை இணைத்து அடுத்த சங்கதியில்
“உன் வாய் மொழி, மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை….”
இப்படி காதல் பாட்டுகளில் தன் “கண்ணனை” அதிகம் அழைத்து வருவார் கவிஞர் வாலியார். “கிருஷ்ண கானம்” படைத்த “கண்ணதாசனும்” என்ன சளைத்தவரா என்னுமாற்போல அந்தத் திருவாய்மொழிப் பிரயோகம்.
இந்தப் பாடலின் காட்சியமைப்பிலேயே புறச்சூழல் சப்தங்கள், அந்த சுவர்க்கடிகாரத்தின் பெண்டுலத்தில் தொடங்கி இயற்கையின் ஓசைகளும் கலந்து வரும். இந்த மாதிரியான செயற்கை ஒலி இணைப்பின் ஆதிக்கத்தை ராஜா பின்னாளில் கை விட்டுவிட்டார். தான் கொடுக்கும் வாத்திய இசையிலேயே அந்த உணர்வைக் கடத்தும் உத்தியைக் கைக்கொண்டு விட்டார்.
அந்த கிட்டார் ஓசை ஆகா, இந்த வாத்தியத்தைப் படிப்போருக்கு ஒரு பால பாட இசைக் குறிப்பைக் கொடுக்கும். அப்படியே
“ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள்”
தொடங்கும் மிதப்பில் அந்த கிட்டார் முன்னே வந்து வாசித்து விட்டுப் போகும் ஜாலம் ஆகா. இந்தாருங்கள் கைதட்டுகள்.
“இடையில் தீராத போதை...... “
சொல்லி விட்டுத் தன் அக்மார்க் சங்கதியைப் போடுவார் பாருங்கள்
“ஹா...ஆஆஆ....”
என்னடா இது ஒத்திகையில் வராத சங்கதியை சுப்பிரமணி பாடுறானே என்று எஸ்,ஜானகி திகைத்து விட்டு இருடா தம்பி கவனிக்கிறேன் என்பதைப் போல அடக்கியே வாசித்து ,
அடுத்த சரணத்தில்
சிறுகதை ஒருநாள் தொடர்கதை
ஆனால் அது தான் ஆனந்த எல்லை.ஈஈஈ.... .
இதே மாதிரியான இடத்தில் தானே கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போட்டாய் தம்பி?” என்று தானும் பதிலுக்கு இழுத்து விட்டு இன்னும் முடியவில்லை கணக்கு என்று எஸ்பிபியைப் பாட வைப்பார்
அவரும்
“நான் பேச வந்தேன்”
ஜானகி “ஹாஆஆஆஆ”
“சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை”
ஜானகி “ஆஆஆ….”
ஆஹா இந்த மாதிரியான ஒலிப்பதிவுக்கூடக் காட்சியை அப்படியே ஒற்றினால் போலக் காட்சிப்படுத்தினாலேயே அது காலாகாலத்துக்கும் ஒரு ரசனைப் பொக்கிஷமாக இருக்குமே?
அன்று தொடங்கிய இந்த"ஆரோக்கியச் சோட்டை" அடுத்த தசாப்தம் கடந்தும் பயணித்தது.
பாடல் இடம்பெறும் “பாலூட்டி வளர்த்த கிளி” படத்தின் காட்சியமைப்பிலும் இந்தப் பாடலில் அந்த “நான் சொல்ல வந்தேன்” போலவே பேசுவதற்கு முயற்சித்து அடங்குவார்கள் விஜயகுமாரும், ஶ்ரீப்ரியாவும்.
“ஏதோ பேச உன்னினேன் பேச்சு வரவில்லை” என்று பேச்சுவழக்கில் சொல்லும் உன்னல் அது.
அழகான ஜோடி, காட்சி அமைப்பும் திறமாக இருக்கும். அந்த ஜோடியைச் சற்றே தள்ளி நிறுத்தி எடுத்திருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும். கொஞ்சம் நாடகத்தனமாகவும் அமைந்து விட்டது.
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது….
ஒரு கிளி ஊமை
ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை......ஹாஆஆஆ
நான் பேச வந்தேன்
சொல்லத் தான்
ஓர் வார்த்தை இல்லை......
1 comments:
என்ன ஒரு அருமையான பாடல் இது..மிக அழகாக எழுதி உள்ளீர்கள்
Post a Comment