பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வெறும் பன்னிரண்டு ஆண்டுகள் தான் திரையிசை உலகத்தில் இயங்கிவர். அதிலும் அவரின் ஆரம்ப கால முயற்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் ஒரு தசாப்தமே தேறக் கூடியவர் ஆனால் அவரின் திடீர் இழப்பில் மனம் துவண்ட கூட்டத்தைக் கண்டு உள்ளூரப் பிரமிப்பும் எழுந்தது.
ஒரு கண்ணதாசனையோ, ஒரு வாலியையோ. ஒரு வைரமுத்துவையோ கொண்டாடக் கூடிய எல்லை வரை முத்துக்குமாரைக் கொண்டாடினார்கள் இந்த இளையோர். அதன் பின்னணியில் ஒரு உண்மை இருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளைப் பார்த்தால் அவர்கள் அந்தந்தக் காலப் பகுதியில் மையம் கொண்டிருக்கும் இளையோரின் நாடித்துடிப்பைச் சரியாக அறிந்து வைத்தவர்களாகத் தான் அடையாளப்படுவார்கள்.
“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்”
என்று வைரமுத்துவின் வரிகள் எப்படி அந்தக் காலத்து இளையோரை ஈர்த்ததோ அது போலவே முத்துக்குமாரின் பாடல்களில் அந்நியோன்யம் இருக்கும். எப்படி எண்பதுகளில் வைரத்துவை மீறிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் இருந்தார்களோ அது போலவே முத்துக்குமாரை வெல்லும் எழுத்தாளுமைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் வெற்றிக்குப் பின்னால் தம்காலத்து ரசிகனின் உணர்வை மொழி பெயர்க்கும் வித்தை அவர்களுக்குக் கிட்டியது. எந்த இசையமைப்பாளர் என்றாலும் முத்துக்குமார் தன் வரிகளுக்காகவே பாடல் கேட்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்.
காலா காலமாகப் பெண்ணை வர்ணித்தே பழகிப் போன கவிஞர்களில் இருந்து விலகி, முதல் அடிகளிலேயே
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்று கொடுத்தவர் முத்துக்குமார். பாடல் முழுக்க இல்லை இல்லை என்று எதிர்மறையோடு பயணிக்கும்.
ஆனால் அந்த “இல்லை” ஐத்தான் இருப்பின் அடையாளமாக நிறுவுவார் முத்துக்குமார்.
பொதுவாக எல்லோருமே பெற்ற தாயைக் கொண்டாடும் போது இங்கேயும் விலகி நின்று தன் தந்தை புராணத்தை முத்துக்குமார் “அணிலாடும் முன்றல்” இல் எழுதும் போது என்னைப் போலவே பலரும் இருந்திருப்பர், இதயத்தின் ஒரு கரையில் நம் தந்தையை நினைவுபடுத்திக் கொண்டே அந்தத் தொடரைப் படித்த போது.
“வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புள்ளு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்”
இதெல்லாம் நாம் வாழ்ந்து கழித்த வாழ்க்கை, இதையெல்லாம் அப்படியே ஒளிக்கருவியில் படம் பிடித்ததைப் போலக் கொடுத்திருப்பார் முத்துக்குமார்
“வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே”
பாடலில்.
“அன்று பார்த்தது.....
அந்த பார்வை வேறடி...
இந்த பார்வை வேறடி....”
சமந்தா வயதில் பள்ளிச்சீருடையில் பள்ளிக்காதலி நினைவுக்கு வந்து போவாள்,
“வானம் மெல்ல கீழிறங்கி
மண்ணில் வந்து ஆடுதே....
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே....”
கேட்கும் போதெல்லாம்.
“பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே”
இந்த வரிகளைக் கேட்கத் தேவையில்லை நினைத்தாலேயே அடி மனதைக் கவ்வும் ஒரு சோகம் பீடிக்கும், அங்கும் முத்துக்குமார் நிற்பார்.
நா.முத்துக்குமாரின் எழுத்து "காதல் கொண்டேன்" படத்தில் வந்த "தேவதையைக் கண்டேன்" பாடல் மூலமாகத் தான் வெகுஜன அந்தஸ்தை எட்டிப் பிடிக்க மூல காரணியாக் இருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகளை நா.முத்துக்குமார் எழுதித் தன் நண்பர் அஜயன் பாலாவுக்குப் பகிர்ந்த போது "இதென்ன வார்த்தை ஜாலமில்லாத வெகு இயல்பான வரிகளாக இருக்கிறதே" என்று சங்கோஜப்பட்டாராம் அஜயன் பாலா. ஆனால் இந்த வரிகள் தான் குறித்த பாத்திரப் படைப்புக்கு, அந்த எளிமை நிறைந்த வாலிபனுக்குப் பயன்படும் என்று சொன்ன முத்துக்குமாரின் வாக்குத்தான் பலித்தது. இன்றைய இளைஞரின் நாடித் துடிப்பை உணர்ந்த அந்தப் படைப்பாளி அந்தப் பாதையிலேயே வெற்றிகரமாக நடைபோட்டார்.
எழுத்தாளர் சுஜாதாவின் கவனத்தை ஈர்த்து அடையாளப்படுத்தப்பட்ட நா.முத்துக்குமார்,
இயக்குநர் சீமானின் "வீர நடை" படத்திற்காக முதன் முதலில் பாடலை எழுதியவர். திரையிசைப் பாடலாசிரியராகக் கிட்டிய அறிமுகத்தை நிரூபிக்கக் "காதல் கொண்டேன்" படத்தின் வெற்றி உறுதுணை புரிந்தது. தொடர்ந்து அதே வெற்றிக் கூட்டணி இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார்கொடுத்த "7G ரெயின்போ காலனி" பாடல்கள் மேலும் அவரின் புகழுக்கு மகுடம் வைத்தது.
ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் பாடலாசிரியர், ஒரே படத்தில் எல்லாப் பாடல்களையும் அதிகம் எழுதிய பாடலாசிரியர் போன்ற சிறப்பு கண்ணதாசன், வாலி, வைரமுத்து காலத்துக்குப் பின் இவருக்கே கிட்டியது.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் போய்ச் சேர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்பின்னர் பாடலாசிரியராகத் தன்னை நிலை நிறுத்திய பின்னர் அதிலேயே மிகுந்த கவனமெடுத்தார். பொது வாழ்வில் தூய இலக்கியத்தை நேசிக்கும் படைப்பாளியாகப் புத்தக விழாக்களிலும், வெகுஜனப் பத்திரிகைகளில் தன் சுய வரலாறோடு இலக்கியம் சமைத்தார்.
புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் பலரின் முக்கியமான பாடல்களில் நா.முத்துக்குமார்இருக்கிறார். "உனக்கென இருப்பேன்" என்று காதல் படத்தில் ஜோஷ்வா ஶ்ரீதர் இசையிலும், "சுட்டும் விழிச் சுடரே" என்று கஜினியில் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையிலும் என்று சில சோறு பதம், இன்னும் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரின் எண்ணற்ற படங்களின் வெற்றிப்பாடல்களில் இவரின் பங்கைக் காணலாம். கடந்த தசாப்தத்தின் தலை சிறந்த திரையிசைப் பாடல்களைப் பட்டியலிட்டால் கை கொள்ளாத அளவுக்கு நிரம்பவும் பாடல்களைக் கொடுத்த சிறப்பைப் பெற்ற நா.முத்துக்குமார் வெறுமனே இளைய சமுதாயத்தின் காதலுணர்வின் வெளிப்பாடுகளை மட்டும் கொடுத்தாரில்லை. "கற்றது தமிழ்", "தங்க மீன்கள்" போன்ற கருத்தாழம் மிக்க படைப்புகளையும் தன் பாடல் வரிகளால் சுமந்தார்.
"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற "தங்க மீன்கள்” படப் பாடலுக்கும், "அழகே அழகே" என்ற "சைவம்" படப் பாடலுக்கும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (தங்க மீன்கள்), "நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ மனதின் ஓரத்தில் இருந்து "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருந்தது.
அது "சத்தம் போடாதே" படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு. நா.முத்துக்குமாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட இயக்குநர் வஸந்த்
"அண்ணா! இந்தப் பாட்டைக் கேட்ட ஒரு பெண் தன் தற்கொலை எண்ணத்தைக் கை விட்டுவிட்டாள்" என்று நா.முத்துக்குமார் மகிழ்ச்சியோடு சொன்னதைச் சொல்லி நெகிழ்ந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.
ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். இப்படியாக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார்
"பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை ஆறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.
நாற்பதோடு தன் காலக் கணக்கு முடியுமென்றே நினைத்து எழுதிக் குவித்து விட்டானோ இவன் எனுமளவுக்கு கொடுத்து விட்டுப் போய் விட்டார் முத்துக்குமார்.
அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும்
எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா.....?
கானா பிரபா
14.08.2018
0 comments:
Post a Comment