Pages

Tuesday, August 14, 2018

சிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை

Attachment.png

"ஐயா! ராஜா சார் வச்சு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை சிட்னியில் நடத்தத் திட்டம் போட்டிருக்கிறன். சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா தான் இசை. எல்லாம் பேசியாச்சு. ராஜா சாரும் ஒத்துக் கொண்டுட்டார். அடுத்த வருஷம் நடக்கப் போகுது"

2008 ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பர் கதிரிடமிருந்து எனக்கு வந்த தொலை பேசிச் சம்பாஷணை அது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தோடு இந்த இசை நிகழ்ச்சியும் புதைந்து போனது. தொடர்ந்த இளையராஜாவின் உலக இசைச் சுற்றுலாக்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டதோடு அப்போது அது ஓய்ந்து விட்டது.

கதிர் வானொலி நேயராகவும், இளையராஜாவின் வெறி பிடித்த ரசிகராகத் தான் எனக்கு அறிமுகமானார்.

2013 ஆம் ஆண்டு மீண்டும் பழைய பல்லவியோடு இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மீண்டும் அச்சாரம் போட்டார். அதற்குள் தொலைக்காட்சி ஆதிக்கம் புலம்பெயர் சூழலில் வந்ததால் மக்கள் இசை நிகழ்ச்சி போய்ப் பார்க்கும் எண்ணிக்கை குறைய ஆரம்பிப்பதை எச்சரிக்கையோடு சொல்லி வைத்தேன். ஆனால் இம்முறை ராஜாவின் இசைக்குழுவை அழைப்பதாகவும் மெல்பர்னிலும் நிகழ்ச்சிக்கு ஒழுங்கமைப்பதாகவும் சொன்னார்.

"ராஜா சார் இங்கு வந்ததும் அவரை நீங்கள் தான்

கொண்டு திரியோணும்" என்பார்.

அவரின் நோய் ஒருபக்கம், நிதி நெருக்கடி இன்னொரு பக்கம் என்று ஏகப்பட்ட சவால்கள். நிகழ்ச்சி இன்னொரு தடவை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இம்முறை மெல்பர்னில் மட்டும் என்ற நிலை வந்தது. MKS நிறுவனம் ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்ததை மறக்க முடியாது.

நான் தனியாக மெல்பர்ன் பயணித்து ஹோட்டலில் தங்கி ராஜாவின் இசை நிகழ்ச்சி பார்த்து முடித்து விட்டுத் திரும்பினால் நண்பர் ரோனியோடு கதிர். ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு என்னவெல்லாம் சவால்கள் வந்தனவோ அவற்றையெல்லாம் முறியடித்தும் சிட்னியில் நிகழ்ச்சி நடத்த முடியாத கவலையே அவரின் முற்றிய நோயைத் தாண்டித் தெரிந்தது. MKS உரிமையாளரின் மகன் கதிரிடம் அன்பாகப் பேசியது மன நிறைவாக இருந்தது அப்போது.

"ஐயா நான் வெளிக்கிடப் போறேன்"

என்று கதிர், ரோனியிடம் விடை பெற்ற போது

"எப்பிடி ஐயா போகப் போறீங்கள்?" - கதிர்

"Taxi போறன்"- நான்

"சும்மா விசர்க்கதை கதையாமல் எங்கட காரிலை வாங்கோ"

என்று சொல்லி விட்டுத் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் எதிர்த்திசையில் இருந்த என் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். கார் ஓடிக் கொண்டிருக்கும் போது வழியில் அவருக்கு மூச்சு முட்டியது. ஓரமாகக் காரை நிறுத்தினார்.

"ஐயா கும்பிட்டுக் கேக்கிறன் நீங்கள் ரெண்டு பேரும் ஹொஸ்பிட்டலுக்கு உடனை போங்கோ"

என்ற எனக்குக் கை காட்டி அமைதியாக இருக்க வைத்து விட்டு கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு என்னை என் ஹோட்டலில் விட்டுவிட்டுத்தான் தன் இருப்பிடம் போனார். அடுத்த நாள் அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருந்து தான் சிட்னி திரும்பினார். நண்பர் ரோனி உடனிருந்து உதவினார்.

2015 ஜனவரியில் நோயின் பிடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற முடியாமல் காலமாகிப் போனார் அன்பு நண்பர் கதிர்.

இப்படியாக இரண்டு முறை கலைந்து மூன்றாவது முறையாகத் தான் முதன்முறையாகச் சாத்தியப்பட்டிருக்கிறது இன்று நிகழ்ந்த சிட்னியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.

உங்க பாட்டைக் கேட்டு வளர்ந்தவங்க நாங்க,

இன்று கன்பெராவில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக

சிட்னிக்குக் காரில் வருமபோது என் மகன்

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு பாடிக்கிட்டே

வந்தான். அவன் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த

பாட்டைக் கூட அவனைப் போல குழந்தைகளையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு நீங்க கொடுத்த இசை அமைஞ்சிருக்குஎன்று நேற்று இளையராஜாவோடு ரசிகர்களின் சந்திப்பில் ஒரு அன்பர் நெகிழ்ந்து பேசிய போது

உங்க குழந்தை கருவில் இருந்தே என் பாட்டைக் கேட்டிருக்குஎன்று இசைஞானி இளையராஜா முறுவலோடு பேசினார்.

சிட்னியில் இசை நிகழ்ச்சி நடந்தாலும் அவுஸ்திரேலியாவின் மற்றைய பாகங்களில் இருந்தும் இசைஞானியின் ரசிகர்கள் வந்திருந்தார்கள். அடலெய்டில் இருந்து என் சென்னை நண்பர் பிரசன்னாவின் நண்பர் கூட ராஜா சந்திப்பில் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திப் பேசினார்.

சிட்னியின் நவீன அரங்கு Hillsong Convention Centre இல் அரங்கம் திரண்ட கூட்டத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது.

இசைஞானியின் வேண்டுகோளுக்கிணங்க கலைஞர் கருணாநிதிக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துவோம், ஒரு நூற்றாண்டு வாழ்ந்தவர் நம்ம கலைஞர் இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படுவார்என்ற உரையோடு நடிகர் பிரகாஷ்ராஜ் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் சக அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்

விடுமுறைக்காக மகனுடன் வந்தேன் இன்று இந்தியா கிளம்ப இருந்தது ஆனால்

என்னுடைய வாழ்க்கையில் ஒன்று கலந்த இசைஞானி இளையராஜாவின் இசையை உங்களோடு ஒருவனாக இருந்து பார்க்கப் போகிறேன்என்று சொன்னவர்

அந்த உரையோடு அப்படியே போய் விட்டார்.

இந்த இசை நிகழ்ச்சிக்காக வர இருந்த கார்த்திக் ராஜா மட்டுமன்றி கடந்த முறை மெல்பர்னில் 70 க்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களின் அணிவகுப்போடு நடந்தது இம்முறை கால்வாசிக்கும் குறைவான வாத்தியக்கார்களோடே நிகழ்ச்சி நடந்தேறியது.

நெப்போலியன் () அருண்மொழின் புல்லாங்குழல், பிரபாகரின் வயலின், தபேலா சுந்தர், இவர்களோடு செல்லோவுடன் குன்னக்குடி வைத்திய நாதனின் மகன் என்று ஒரு சில அறியப்பட்ட முகங்கள் தான்.

இசைஞானி இளையராஜா தன் முத்திரைப் பாடலானஜனனி ஜனனிபாடலோடு ஆரம்பித்து வைக்க, ஓம் சிவோஹம் பாடலோடு களத்தில் இறங்கினார் மது பாலகிருஷ்ணன். விஜய் பிரகாஷுக்கு மாற்றுக் குறையாதவராக மதுவும் தன் மதுக்குரலால் கட்டி வைத்தார்.

கடந்த 2013 மெல்பர்ன் இசை நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைத் தவிர்த்துப் பாட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்பார்கள் போல, ஒரு சில பாடல்களைத் தவிர்த்து மீதி எல்லாம் சிட்னி மேடைக்கு மட்டுமல்ல ஆஸி மேடைக்கும் புதிதாக எடுத்து வந்திருந்தார்கள்.

மனோ, சித்ரா இருவரும் இளையராஜா மேடைகளில் தவறாது இடம்பெறும் நட்சத்திரப் பாடகர்கள். ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை மனோவுக்கு வாரி வழங்கியதால் மனோவுக்கான தனித்துவமான பாடல்கள் மட்டுமல்ல மனோ & சித்ரா இருவரும் ஜோடி கட்டிய பாடல்களில் ஒன்றிரண்டைக் கொடுத்திருந்தால் கலக்கியிருக்கும். உதாரணத்துக்கு செண்பகமே செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம், ஒரு மைனா மைனாக் குருவி இதையெல்லாம் எதிர்பார்த்தேன்.

தமிழ் ரசிகர்களோடு தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களும் சேர்ந்து கொண்டதால்

தெலுங்கு வேணும் என்று கத்திய கூக்குரலளார்களுக்காக ப்ரியா ப்ரியாபாட்டைப் பாதியாகப் பிரித்துத் தெலுங்கு, தமிழ் என்று மனோ, சித்ரா பாடிய போது கிட்டிய அரங்கில் கெலித்த கரகோஷமே இவ்விருவர் கூட்டணிப் பாடல்களை என்னைப் போலவே பலரும் எதிர்பார்த்தது போல அசரீரியாகக் கொட்டியது.

ஓகோ மேகம் வந்ததோபாடலைக் கூட்டுக் குரல்களுடன் பாடிய சித்ரா ஒரு ஜீவன் அழைத்தது, பூமாலையே தோள் சேரவா போன்ற பாடல்களை ராஜாவோடும்

மனோவோடு ராத்திரியில் பூத்திருக்கும், சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகியவற்றையும் பாடியவர் மது பாலகிருஷ்ணனோடு சேர்ந்துகல்யாணத் தேனிலாபாடலையும் கொடுத்திருக்கலாமே என்று வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி ஏங்கியது😃

மடை திறந்து தாவும் நதியலை நான்என்று கூட்டுக் குரல்கள், பக்கவாத்தியத்தோடு

தனித்துப் பாடிய மனோவுக்குக் கிட்டிய இன்னொரு தனிப்பாட்டு வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள். ஏஞ்சோடி மஞ்சக்குருவி பாடல் மனோவுக்கு அச்சொட்டாகப் பொருந்தி அவரின் குரல் ஜாலத்தைக் காட்டியது.

மனோவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் என்றால் மது பாலகிருஷ்ணனுக்கு ஜேசுதாஸ் என்று கணக்குப் போட்டு ஒலித்ததுபூவே செம்பூவேபாட்டு. இந்தப் பாட்டை நேரே மேடையில் பார்க்கும் போது அந்த வயலின்களின் ஜாலத்தையும், அருண்மொழி அவர்கள் மாறி மாறி வெவ்வேறு ஒலியெழுப்பும் புல்லாங்குழல்களையும் பயன்படுத்துவதைப் பார்ப்பதே உன்னதமானதொரு அனுபவம்.

இதோ எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கணக்கில் மலேசியா வாசுதேவனுக்காகப் பாடகர் முகேஷ் ஐயும் சேர்த்தாச்சு. “நீயும் சிட்னியை விடுறதாயில்ல சிட்னியும் உன்னை விடுறதா இல்லைஎன்று ராஜாவின் கிண்டலுக்கு ஆளானார் அடிக்கடி சிட்னி வந்து இசை நிகழ்வில் பங்கேற்கும் பாடகர் முகேஷ். “பூவே இளைய பூவேஉடன் தொடங்கினார். கட்டவண்டி கட்டவண்டி பாடலில் மீண்டும் மலேசியா வாசுதேவன் ஆனார் முகேஷ்.

சுர்முகி என்றால் ஸ்வரத்தை அழகாகப் பிரதிபலிப்பவள்என்று ராஜாவால் புகழப்பட்ட

பாடகி சுர்முகிகுயில் பாட்டு வந்ததென்ன இளமானேபாடிய போது அந்த வேகப்பாட்டு படத்தின் இன்னொரு வடிவமான மெதுவாக நகரும் பாட்டையே நினைவுபடுத்தியது.

தான் பாடிய பாடல்களை இன்னொருவர் நகலெடுத்துக் கூடப் பாட முடியாத அளவுக்குப்

பாடி விட்டுச் சென்றிருக்கிறார் ஸ்வர்ணலதா என்று மனதுக்குள் அந்தக் குயிலை நினைத்து ஏங்க வைத்தது.

குயில் பாட்டில் விட்டதைப் பிடித்து ராஜாவின் ஸ்பெஷல் பாராட்டையும் பெற்றார்இதயம் ஒரு கோவில்பாடலின் ஆரம்ப எஸ்.ஜானகி ஆலாபனையிலும், சின்னப்பூ சின்னப்பூ (ஜப்பானில் கல்யாணராமன்) பாட்டிலும் பாடகி சுர்முகி.

இளம்பனி துளிர் விடும் நேரம்” (ஆராதனை) பாடலை சூப்பர் சிங்கர் ஶ்ரீஷா பாடிய போது இந்தப் பாட்டை முன்னர் கேட்டதில்லையே என்று காதில் கிசுகிசுத்தார் ராஜாவின் தீவிர இசை வெறியர் என் நண்பர். “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுதுஶ்ரீஷா சக சூப்பர் சிங்கர் கூட்டாளி உருக வைத்தார்கள்.

சூப்பர் சிங்கர் கெளசிக், மது ஐயரோடு வசந்த ராஜாபாடினார்.

பாடகர் நாராயணன் கூட்டாகராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லேஎன்று தனித்தும், “அட மச்சமுள்ள மச்சான்பாடலுக்கெல்லாம் சிறப்புக் குரலாகவும் கலந்து கட்டினார்.

ஆசை அதிகம் வச்சுபாடலின் இடையிசையில் ஒலிவாங்கி கோளறு பதிகம் பாடவே ராஜாவோ விடாப்பிடியாக மூன்று சுற்றுத் திருத்தி, திருந்திய ஒலியமைப்போடு நெப்போலியனின் வாத்தியப் பகிர்விலிருந்து தொடர வைத்தார். அதுதான் ராஜா.

பூங்கதவே தாழ் திறவாய்” (சாய் விக்னேஷ் & மது ஐயர்) பாடலில் வரும் நாதஸ்வர ஒலியை இப்போ கீபோர்டில் வாசித்தவர் மேனுவேல் என்று அறிமுகப்படுத்திய ராஜா, இந்தப் பாடலில் வரும் கிட்டார் இசையை கீபோர்ட்டில் இப்ப வாசித்தவர் பரணி என்று இன்னொன்றிலுமாக இருவரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் கீபோர்காரர் இருந்த பக்கம் வாஸ்து சரியில்லைப் போல ஒலி வாங்கிகள் அடிக்கடி குழம்பிப் போய் ராஜாவையும், நெப்போலியனையும், பிரபாகரையும் நகம் கடிக்காத குறையாக டென்ஷன் படுத்தியது. இசைஞானியின் பாடல்கள் வாத்தியப் பங்களிப்போடு அதிகமிருப்பதால் சென்னையில் பழக்கப்படுவது போல மற்றைய இடங்களில் இசை நிகழ்ச்சி படைக்கும் போது ஒலி அமைப்பு செய்வது பெரும் சவால். அதைச் சமாளித்து அதிக நெருடல் இல்லாமல் தொடர்ந்தது சிறப்பு.

எதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேபாடலுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கு சொல்லவா? என்று ராஜா கேட்க கூட்டமும் ஆமாம் வேண்டும் என்று கொட்டியது.

நான் மூன்றாவது வகுப்பில் படிக்கும் போது அண்ணன் பாஸ்கர் நாலாவது படிச்சிட்டிருந்தான். இருவரும் சேர்ந்து அப்போலைலா மஜ்னுபடம் பார்த்துட்டு மறுநாள் பள்ளிக்கூடம் போய்

லைலா, லைலா, லைலா என்று அண்ணன் பாஸ்கர் தன் நோட்டுப் புத்தகத்திலும், நான் என் நோட்டுப் புத்தகத்திலும் எழுதித் தள்ளி வாத்தியார்கிட்ட அடி வாங்கினோம். அப்போ நான் மஜ்னுவை விட லைலாவை அதிகம் காதலித்தேன். அதற்குக் காரணம் அந்தப் படத்துக்கு இசையமைச்ச சி.ஆர்.சுப்புராமன். தொடர்ந்து ராஜா பாடுகிறார்

எனது உயிர் உருகும் நிலைஎன்ற லைலா மஜ்னு படப் பாடலை. லைலா மஜ்னு மாதிரி எனக்கு ஒரு படம் வாய்க்காதா என்ற ஏக்கத்தில் கொடுத்த பாட்டுத்தான்ஏதோ நினைவுகள்பாட்டு. அதுக்காக அது காப்பி அல்ல, அந்த ஜீவனைப் பிரதிபலித்தது என் பாட்டு என்றவர் தொடர்ந்து

ஏதோ நினைவுகள்பாட்டை அப்போ சின்னப்பையனா இருக்கும் போது இசைமைச்சேன் இப்பவும் நான் சின்னப் பையன் தான் இளையராஜா ஆச்சே என்று குறும்பாகப் பேசியவர் இதே மாதிரி நிறைய அனுபவங்களோடு ஒரு ஆர்மோனியம், ராஜாங்கிற பையன், சிட்னி சிம்பனி, நம்ம குழுவினரோடு சிட்னி ஒபரா ஹவுசில் எதிர்காலத்தில் இன்னொரு நிகழ்ச்சியும் நடத்திட்டாப் போச்சு என்று ஆசையைத் தூண்டி விட

நாராயணன் வந்துராஜா கைய அது ராங்கா போனதில்லேஎன்று பாட ஆரம்பித்தார்.

இதற்கு முன்னரும் இசைஞானியின் இசை நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு நேற்றைய ரசிகர் சந்திப்பிலும் இன்றைய இசை நிகழ்ச்சியிலும் அவர் வழக்கத்துக்கு மாறாகக் கிண்டல், ஜாலி, குதூகலத்தோடு மனம் விட்டுப் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கும் போதேநீங்க எங்களைப் பார்க்கிறது மாதிரி நாங்களும் ஒருவாட்டியாவது உங்களைப் பார்க்கணுமே லைட்டப் போடுங்கஎன்று கட்டளை இட்டு விட்டு அரங்கத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

அவதாரம் அவதாரம்என்று கேட்ட கூக்குரல்களுக்கு

என்னது நான் அவதாரமா ஆமா அவதாரம் தான்என்று எள்ளல் வைத்து விட்டு

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோஎன்று ஒரு சில வரிகளைப் பாடினார்.

கன்னடா, தெலுங்கு தெலுங்கு என்று கத்திக் கொண்டிருந்தவர்களுக்கு

நீங்க McDonald’s போன்ற Fast food கடைகளுக்குப் போனா அங்க சமைச்சு வச்சதைத் தானே கொடுப்பாங்க அது மாதிரித் தான். நான் நீங்க கேட்கிறதைக் கொடுக்க மாட்டேன் நான் சமைச்சு வச்சிருக்கிறதைத் தான் கொடுப்பேன்என்று கிண்டலடிக்க அரங்கம் கொல்லென்று சிரித்தது.

ஒரு மேல் (male) பாட்டை நாங்க பாடப் போறோம் என்று பாடகிகள் சொல்ல

நான் போட்டதெல்லாம் மேல் தான்என்று கிடுக்குப் பிடியோடு உரையாடல்,

தொடர்ந்துபொதுவாக என் மனசு தங்கம்பெண்கள் குரலில்.

எத்தனை கேரட்?” மீண்டும் ராஜா 😃

பூமாலையே தோள் சேரவாபாடலைப் படித்து விட்டுச் சிரித்தவர்

சில பாடல்களைப் பாடும் போது சிரிப்பா இருக்கும் என்ன ஒரு அர்த்தமும் இல்லாம எழுதி வச்சிருக்காங்களேன்னு. இதிலும் கூடகன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்அப்படின்னு வரும். எழுதினது என் தம்பி தான். இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன், “அது இசையோட பாடிப் பாருங்க அர்த்தம் வரும்என்று மழுப்பிட்டான்.

டைரக்டர் வந்து பாடல் பதிவுக்கு மூணு நாளைக்கு முன்பே டியூன் வாங்கிடுவாங்க அப்பதான் பாடலாசிரியர் பாட்டு எழுத வசதின்னு. ஆனா இவங்க என்னடான்னா ஜீவானந்தம் பார்க்ல இருந்து ஊர்ல இருக்குற எல்லா பார்க்கும் தேயத் தேய நடந்து நடந்து யோசிச்சு, பிரசாத் ஸ்டூடியோ எல்லாம் நடந்து இப்பிடியாகப்பட்ட வரிகளைக் குடுப்பாங்க என்று சொல்லி விட்டு இதை நான் தப்பாகச் சொல்லல நான் ஓகே பண்றதுக்காக அவங்க எடுத்துக்கிற முயற்சி என்று முத்தாய்ப்பு வைத்தவர், வாலி ஒருத்தர் தான் அரை மணி நேரத்துல தன் வேலையை முடிச்சுக் குடுத்துட்டுக் கிளம்பிடுவார் என்றும் மெச்சினார்.

ஒரு ரஜினி ரசிகனோ கமல் ரசிகனோ அல்லது விஜய், அஜித் என்று தலைமுறை தாண்டி அவரவர்க்கு ஒரு ரசிகர் வட்டமிருக்கும். ஆனால் என் போன்றவர்களுக்கு இவர்கள் எல்லோருமே பொது, ராஜா என்பதே மையம். அதனால் தான் இந்த இசை நிகழ்ச்சியை என்னால் அணு அணுவாக ரசிக்க முடிந்தது.

நேற்றுக்காலை ஒன்பது மணிக்குப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தவர் மாலை ஏழரை தாண்டித் தான் ரசிகர்களைச் சந்தித்தார். அதுவரை ஒத்திகை தான்.

இன்றைய இசை நிகழ்ச்சியிலும் நான்கு மணி நேரங்கள் கடந்து தொடர்ந்து ஒரு சொட்டு நீர் அருந்தாது நின்று கொண்டே தன் ஆர்மோனியத்தருகே கண்டிப்பான வாத்தியாராக, அரங்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அறுசுவை படைத்தார் இந்த எழுபத்தைந்தைத் தொட்ட முது பெரும் ஆளுமை.

இவருக்குப் பின் இப்படியொரு கடின உழைப்பாளியை நாம் காணப் போவதில்லை என்றே நிகழ்ச்சி முடியும் வரை என் மனது சொல்லிக் கொண்டிருந்தது.

இசைஞானி இளையராஜாவை பிரமிப்போடு இன்னொரு முறை நேரில் கண்டு தரிசித்ததே என் வாழ்நாள் தவம்.

கானா பிரபா

11.08.2018


0 comments: