Pages

Saturday, October 10, 2015

எட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்

B

"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.
வடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.

"கருப்பு நாகேஷ்" என்றும் "வைகைப் புயல்" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.

டி.ராஜேந்தரின் "என் தங்கை கல்யாணி" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த "என் ராசாவின் மனசிலே" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். "சின்னக் கவுண்டர்" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.
"தேவர் மகன்" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.
பாரதிராஜா "கிழக்குச் சீமையிலே" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும். 
சுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் "வின்னர்" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.

வெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் "அரண்மனைக் கிளி"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch?feature=youtu.be&v=1wWfZL9rVxo

வடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத "இளையராஜாவின் மோதிரம்" என்றொரு படம்  வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன்னோடி ஆகியிருக்கும்.

இசைஞானி இளையராஜா இசையில் "எல்லாமே என் ராசா தான்" படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில்  வடிவேலு முதன்முதலில் பாடிய முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். "எட்டணா இருந்தா" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.
 http://www.youtube.com/watch?v=7LTrDF-S0Kk&sns=tw


அது சரி, "எட்டணா இருந்தா" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்




1 comments:

Anonymous said...

ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் முன்பு தானே வலிய வம்பை விலைகொடுத்து வாங்கி, இன்று வலியோடு நிற்கிறார். இப்போது நடிகர் சங்கத் தேர்தலில் அவர் கொடுத்த 'பேட்டி' மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சிதான். முடிவு, நமக்கு மீண்டும் வடிவேலு கிடைக்கமாட்டார் என்பதுதான்.

கோ. மதிவாணன்.