Pages

Monday, January 12, 2015

பாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு

பாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு.

ஒரு படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் முகப்புப் பாடல் என்ற வகையில் இந்தப் பாடல் போல ஒப்பீட்டளவில் வேறொன்றும் அதிகம் ஈர்த்ததில்லை. இம்மட்டுக்கும் இந்தப் பாடல் உயர்ந்த கவித்திறன் கொண்ட காதல் ரசம் பொழியும் பாடல் அன்று. 
வெறும் வசனங்களின் கோப்பாகப் பிணைந்த வரிகளும் அவற்றைத் தன் வாத்தியக் கருவிகளில் சுமந்து பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிக்கு ஒப்பானது இந்தப் பாடல்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தின் முகப்புப் பாடலாக அமையும் இந்தப் பாடலின் வரிகளை படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலம் எழுத, பாடி இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப் பாடல் காட்சியின் ஆரம்பத்தில் படச்சுருள் பெட்டியோடு சந்து படம் காட்டும் மனிதராக நடித்திருப்பவர் இப் படத்தின் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ். 
பாடலைக் கேட்கும் போது ஒரு கதாசிரியர், ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தின் மெத்தையில் அமர்ந்து படக்கதையின் ஓட்டத்தை ஆரம்பிப்பது போல இருக்கும். 

பொதுவாக இப்படியான சம்பவச் சுருக்கங்களின் முன்னோட்டத்தை (flashback) எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சிகளாகவோ அன்றி நிழல் படங்களின் தொகுப்புகளாகவோ அமைத்துக் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் பாருங்கள் காட்சி வடிவம் நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்துக் கதையோட்டத்துக்குப் போகும் போது அந்தக் காலத்து வேகப் பட நகர்வும், கருப்பு வெள்ளை ஒளிப்பதிவுமாக அமைக்கப்பட்டிருக்கும். மூன்று நிமிடம் 51 விநாடிகள் அமைந்த இந்த முன் கதைச் சுருக்கத்துக்கு எத்தனை மினக்கெடல்? அதுதான் கமல்ஹாசனின் தொழில் ஈடுபாடு. இல்லாவிட்டால் 25 வருடங்கள் கழித்து இந்தப் புதுமையான உத்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமா? இல்லாவிட்டால் இதற்குப் பின் இதே போல கன கச்சிதமான பாடலோடு கூடிய முன் கதைச் சுருக்கமும் காட்சி வடிவமும் அமைந்த பாடலைக் கடந்த 25 வருடங்களில் பார்த்திருப்போமா? எனக்கு நினைவில்லை,

ஒரு படத்தின் ஆரம்பப் பாடலை இளையராஜா பாடினால் படம் வசூலை வாரி இறைக்கும் என்பது எண்பதுகளில் சாதித்துக் காட்டிய நம்பிக்கை. "அட கத கேளு கதை கேளு கருவாயன் கதை கேளு" என்று இதே ஆரம்ப அடிகளோடு கரிமேடு கருவாயன் படப் பாடலும், "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே" என்ற மலையூர் மம்பட்டியான் படப்பாடலும் அந்தந்தப் படங்களின் நாயகனின் குணவியல்பைக் காட்டும் பாடல்களுக்கு உதாரணமாகின்றன.

"மானினமே" என்று முள்ளும் மலரும் படத்திலும், "ஜாக்கிரத ஜாக்கிரத தாய்க்குலமே ஜாக்கிரத"என்று சின்ன வீடு படப்பாடலும் அந்தந்தப் படங்களின் தன்மையைச் சுட்டுவனவாகவும், "அம்மன் கோயில் கிழக்காலே" (சகல கலா வல்லவன்) பொதுவான முகப்புப் பாடல்களாகவும், அப்பனென்றும் அம்மையென்றும் (குணா) போன்ற பாடல்கள் அந்தப் படத்தின் கதைக்களனையும், "குயில் பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே) போன்ற உதாரணங்கள் அந்தந்தப் படங்களில் இடம்பிடித்த பிரபலமான பாடல்களின் இன்னொரு வடிவமாகவும் என்று இளையராஜா இந்த முகப்புப் பாடல்களைக் கையாண்டார். இது பற்றி நீண்ட பட்டியல் போடுமளவுக்குப் பாடல்கள் உண்டு. 

இவை தவிர இளையராஜா ஒரு படத்தின் முகப்பு இசைக்குக் கொடுக்கும் மினக்கெடல் சொல்லித் தெரிவதில்லை.

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது "கதை கேளு கதை கேளு" பாடல் துள்ளிக் குதிப்பது போலக் காதில் அசரீரியாகக் கேட்பது போலப் பிரமை. அந்தளவுக்கு மனதில் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணும் இசையும், கட்டுக்கோப்பான நறுக்கென்ற, அலுப்படிக்காத வரிகளினூடே கதை சொல்லலுமாகப் பயணிக்கும் பாட்டு இது.


6 comments:

Balaji Sankara Saravanan said...

தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில, விதி போடும் கோலங்கள் யாருக்கும் புரியாது - கலங்க வைக்கும் வரிகள் மற்றும் எளிமையான இசை - மீண்டும் இது போல ஒரு பாட்டு வருமா ?

குட்டிபிசாசு said...

பிரபா,

மேலும் சில முகப்புப்பாடல்கள் தங்கள் பார்வைக்கு...
தாலாட்டு பாடவா - சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
சென்பகமே செண்பகமே - வெளுத்துக்கட்டிக்கடா என் தம்பி
என் பொம்முகுட்டி அம்மாவுக்கு - கண்ணே நவமணியே
நான் சிகப்பு மனிதன் - எல்லாருமே திருடங்க தான்

கானா பிரபா said...

Balaji Sankara Saravanan

நினைத்தே பார்க்க் முடியாது ;)

கானா பிரபா said...

வாங்க குட்டிப்பிசாசு

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு ;)

பகிர்வுக்கும் நன்றி

Unknown said...

Another title song, paatale buthi sonnan - karagattakarn,

கானா பிரபா said...

ஆனந்த்

அதுவும் கலக்கல்