தமிழ் சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.
இராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில், பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள்.
உலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி, தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சிறுவர், குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது.
எண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக, சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி, இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின், ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை, சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.
முன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது
மணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.
என்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர். ஆனால் இராம நாராயணன், விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.
சங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.
"தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்?
முன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார், பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார்" என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும், கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும்.
முன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும்
ஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா, தைப்பூசம், செந்தூரதேவி, ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு
ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது.
கலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன.
இவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன்
திரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை". இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம்.
" நாயகன் அவன் ஒரு புறம்", "விடுகதை ஒன்று" போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.
பின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும், மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில, தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த், எஸ்.வி.சேகர், மோகன், நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.
ராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.
கடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.
திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை, வசனம்.
2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை, கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்டியின் சுட்டி இது.
http://www.radiospathy.com/2008/04/blog-post_05.html
ஒருவன் தான் சார்ந்த துறையில், தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன், இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது.
இராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.
4 comments:
அருமை பிரபா
மிக்க நன்றி நேசா
அருமையான பதிவு. நல்ல சமர்ப்பணம்..
ராமநாரயணனும் ma காஜா அவர்களும் இணைந்து ராம் ரஹீம் என்ற பெயரில் துரை இயக்கத்தில்சில படங்களுக்கு கதைகள் எழுதினார்கள் என்று நினைவு . ரகுபதி ராகவா ராஜாராம் என்ற படம் என் நினைவில் உண்டு
நான் சொல்லும் தகவல் சரியா தவறா என்று தெரியவில்லை
நினைவில் இருந்து எழுதும் தகவல் நீங்கள் உறுதி செய்தால் நன்று
Post a Comment