Pages

Saturday, June 7, 2014

பாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை


பல நாட் கழித்து ஒரு பாடலை யதேச்சையாகக் கேட்க நேரிட்டால் அது நம்மைச் சுற்றிக் கொண்டே வருமாற்போல இருக்கும். சில வேளை அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பாடல் ஏதாவது ஒரு வானொலி வழியாகத் தானும் கேட்க நேரும் போது ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல இருக்கும். அப்படித்தான் இந்தப் பாடலும். சற்று முன்னர் சிங்கப்பூர் ஒலி வானொலியின் "எண்பதுகளின் தொண்ணூறுகளின் இசைச் சங்கமம்" நிகழ்ச்சித் தொகுப்பை காரில் பயணிக்கும் போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் வீடு திரும்பியதும் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பாட்டு வானலை வழியே வருகின்றதே.

"சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை" பாடல் இந்த வார சூப்பர் சிங்கர் ஜூனியரில் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் சுற்றுப் பகிர்வில் வந்திருந்தது. எனக்கு நினைவு தெரிந்து இந்தப் பாடல் போட்டி இசைமேடையில் பாடப்படுவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். அதையே சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியின் நடுவராக அமர்ந்திருந்த பாடகி சித்ரா அவர்களும் உறுதிப்ப்படுத்தியிருந்தார். கூடவே இதே பாடலில் பங்கெடுத்துப் பாடிய மனோ அவர்களும், சித்ரா அவர்களும் வீற்றிருக்க, அவர்கள் முன்னால் 25 வருடங்களுக்கு முந்திய பாடலைப் பாடுவது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பசுமை நினைவுகளைக் கிளப்பியிருக்குமோ அது போலவே இந்தப் பாடல் இசைத்தட்டு வந்த காலத்தில் என்னைப் போலப் பதின்ம வயதுகளில் இருந்த ராஜாவின் வெறிபிடித்த ரசிகர்களுக்கும் இன்பமான கணங்களாக இருந்திருக்கும்.

"பாண்டி நாட்டுத் தங்கம்" படப்பாடல்கள் அப்போது எல்.பி ரெக்கார்டில் வந்தபோது எங்களூரில் திவா அண்ணர் வழியாகத் தான் இந்தப் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அப்போது நமக்கெல்லாம் முன்னோடியாக, ராஜாவின் பாடல்கள் வரும்போது அவற்றை ஒலி நாடாவில் பதிந்து வைத்து சுடச் சுடப் போட்டுக் காட்டி "எப்பிடி மொட்டைச்சாமி பின்னியிருக்கிறார் இல்லையா" என்று கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு சொல்லிக் கொண்டே பாடல்கள் ஒவ்வொன்றாகப் போட்டுக் காட்டும் போது ஏதோ தானே அந்தப் பாடல்களை இசையமைத்த பெருமை அவருக்கு இருக்கும்.

இயக்குனர் விசுவின் பட்டறையில் இருந்து வந்த டி.பி.கஜேந்திரன் எப்படி சங்கிலி முருகனின் அலைவரிசையில் சிக்கினாரோ தெரியவில்லை. கங்கை அமரன் "எங்க ஊரு பாட்டுக்காரன்" என்ற பெரு வெற்றிப் படத்தை இயக்கிக் கொடுத்தாலும், சங்கிலி முருகனின் "எங்க ஊரு காவக்காரன்" படத்திற்கும் அதனைத் தொடர்ந்த "பாண்டி நாட்டுத் தங்கம்" படத்துக்கும் டி.பி.கஜேந்திரன் தான் இயக்குனர்.
அதன் பின்னர் "எங்க ஊரு மாப்பிள்ளை" என்ற இன்னொரு படத்தையும் டி.பி.கஜேந்திரன் வெளியார் தயாரிப்பில் இயக்கினார். ஆனால் பாண்டி நாட்டுத் தங்கம் படத்தைக் கங்கை அமரன் இயக்கவில்லையே தவிர இந்தப் படத்தின் முத்தான ஆறு பாடல்களையும் எழுதியது அவர் தான். 
எண்பதுகளில் இம்மாதிரிப் படங்கள் வந்தபோது அது கங்கை அமரனாகட்டும், டி.பி.கஜேந்திரனாகட்டும் இயக்குனர் யாரென்ற அடையாளம் தெரியாது ஆனால் இசைஞானி இளையராஜாவின் முத்திரை கண்டிப்பாக இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் பாடலாசிரியராக கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் உழைத்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலம் தொட்டு கங்கை அமரனை மட்டுமே வைத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்திருந்தாலும் நின்று பிடித்திருக்கும் பாடல் வரிகளைக் கொடுக்கும் ஆளுமை படைத்தவர் கங்கை. ஆனாலும்...

"சிறு கூட்டுல உள்ள குருவிக்கு" பாடல் அனுபவத்தைப் பற்றிப் பாடகி சித்ரா சொல்லும் போது "இந்தப் பாடல் அப்போது மனோ, சித்ரா இருவரும் ஒரே சமயத்தில் பாட, இசைக்கருவிகள் இசை மீட்ட லைவ் ரெக்கார்டிங் முறையில் எடுக்கப்பட்டதாம். அப்போது ராஜா சார் ஒவ்வொரு வரிகளுக்கும் பாடும் பாங்கில் திருத்தம் சொல்லிக் கொண்டே பாடவைப்பார் என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்தார் சித்ரா. . ஒரு பாடல் வரியை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் செல்லும் பாடகனுக்கு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை ராஜா அடிக்கடி உணர வைப்பதாகவும், ராஜாங்கிற யுனிவர்சிட்டியில் நாம படிச்சதால தான் மற்ற இசையமைப்பாளர்களும் துணிஞ்சு நமக்கெல்லாம் வாய்ப்புக் குடுத்தாங்க என்றார்.

உண்மையில் எனக்கு பாண்டி நாட்டுத் தங்கம் படப்பாடல்கள் வந்த போது "உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது" என்ற பாடலில் தான் மோகம் அதிகமாக இருந்தது. 
வயசும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)
அந்தப் பாடலைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன்.  ஆனால் நாளாக நாளாகத் தான்"சிறு கூட்டுல உள்ள குருவிக்கு" பாடல் மீது இன்னும் மோகம் வளர்ந்தது. இந்தப் பாடல் ஒரு இசை கற்கும் மாணவி பாடும் தொனியில் இருக்கும் சூழல் என்பதால் உன்னிப்பாகக் கேட்கும் போது சங்கதிகளில் அழுத்தமும் ஒரு சங்கீதத் தனமும் தெரியும் ஆனால் மேலோட்டமாகக் கேட்டால் அக்மார்க் மசாலாப் பாடலாக இருக்கும். அதுதான் ராஜா. பாடலின் இடையிசையில் வளர்ந்து மேலெழும் வாத்திய இசை இந்தப் பாடலுக்கு அளவான சட்டை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து பழைய டயரியைப் படிக்கும் போதோ, பால்ய நண்பனை வெகு காலம் கழித்துச் சந்திக்கும் போதோ தரும் உணர்வை ராஜாவின் பாடல்கள் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்று ஆசையோடு என் இசைப் பெட்டகத்தில் இருந்து "பாண்டி நாட்டுத் தங்கம்" இசைவட்டை எடுக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தூளியில் இருந்து எடுத்து உச்சி மோந்து மகிழும் தாய்க்கு ஒப்பான மன நிலையில் இருக்கும்.

"பாட்டால தான் பரலோகமே
உன்னோட இடம் தேடி வரலாகுமே
பாட்டால தான் மனம் மாறுமே
உன்னோட மனந்தேடி உறவாடுமே
இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்"


0 comments: