இலங்கை வானொலியில் ஒரு காலகட்டத்தில் ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் பிரபல படங்களின் கதையோட்டத்தைச் சுருக்கி, பாடல்கள் தவிர்த்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அமைத்துக் கொடுத்ததைக் கேட்டிருக்கிறேன். இந்திய வானொலியிலும் கூட இதே பாங்கான நிகழ்ச்சியைக் கேட்ட ஞாபகமுண்டு. அந்தக் காலத்தில் சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து விதி படம் வரை இவ்வாறான ஒலிச்சித்திரங்களும் பாடல்களுக்கு நிகராக, உள்ளூர் ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒலி நாடாக்களில் பதிவு பண்ணி விற்றது ஒரு காலம்.
எங்களூரில் சில வீடுகளில் விதி பட சுஜாதா நீதிமன்றக் காட்சியில் பரபரப்பாக வாதிடுவதை சத்தமாக ஒலிபரப்பிக் கேட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக வரும். அப்போதெல்லாம் இவ்வாறான ஒலிச்சித்திரங்களைக் கேட்கும் போது இந்த வசனத்தை இன்னார் பேசுகின்றார் என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.
எண்பதுகளில் இந்த நிலை பெரும் மாற்றம் கண்டது கதாநாயகிகள் விஷயத்தில் தான். ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் ஒரே நாயகி பேசுமாற்போல இருக்கும். அதற்குக் காரணம் ஒரு சில முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் பேசுபவர்களின் குரலே பெரும்பாலான நாயகிகளுக்குப் பயன்பட்டது. தமிழ் சினிமாவில் பிற மொழி பேசும் நாயகிகள் சரோஜாதேவி காலத்தில் இருந்தாலும் கூட, அந்தக் காலத்தில் எண்பதுகளில் நிலவியது போன்ற பரவலான நாயகிகளின் அறிமுகம் அதிலும் குறிப்பாக மொழி வளம் அற்ற நாயகிகள் மிகுதியாய் வந்த காரணத்தால் தயாரிப்பாளர்களுக்கும் இந்த பின்னணிக் குரல் பேசுபவர்களால் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்து பின்னணி பேச் வைத்து முடிக்க இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் இந்தக் கலைஞர்கள் யாரென்று ஒரு சினிமாப் பத்திரிகை தானும் சிரத்தையெடுத்து அதிகம் வெளிக்கொண்டு வந்ததில்லை. படங்களின் எழுத்தோட்டத்தில் மட்டும் இவர்களின் பெயர் பொறிக்கப்படுவதோடு நின்றுவிடும்.
குணா படம் வெளிவரவிருந்தப்காலத்தில் கமல்ஹாசன் ஆனந்த விகடன் பேட்டியில் இந்தப் படத்தின் கலை இயக்குனரைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் மிகப்படுத்திப் பேசி, அடுத்த இதழில் கலை இயக்குனர் சங்கத்தின் எரிச்சலை வாங்கிக் கட்டி பின்னர் தன்னுடைய கருத்தை மீண்டும் தெளிவாக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எது எப்படியிருப்பினும் என்னுடைய பார்வையில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்துக்குப் பின்னால் தான் சினிமாவின் இயக்கத்துக்கு உறுதுணையாகவிருக்கும் இசை மட்டுமன்றி ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்ன பிற சமாச்சாரங்களும் அதிக கவனத்தைப் பெற்றன. குறிப்பாக கமல்ஹாசன் இவ்வாறான சக தொழில் நுட்பக் கலைஞர்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறார்.
அண்மையில் சன் டிவியின் விருந்தினர் பக்கம் பேட்டியில் டப்பிங் கலைஞர் அனுராதாவின் பேட்டியைக் கேட்டபோது இந்தத் துறை குறித்து இன்னும் பல நுட்பமான கருத்துகளை வெளிப்படுத்தினார். நடிகை ஜெயப்பிரதாவில் ஆரம்பித்து ராதா, அம்பிகா, குஷ்பு, கெளதமி என்று அன்றைய நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்தவர் இவர்.
ஜனனி படத்தின் டப்பிங் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளை இவருக்குப் பிரசவ வலி ஏற்படவே ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு குழந்தையைப் பிரசவித்துவிட்டுக் களைப்போடு கண்ணயர்ந்தாராம். விழித்துப் பார்த்தால் அந்தப் படத்தின் திரைப்படக்குழுவினர் சூழ நின்று ஒலிப்பதிவுக் கருவிகளோடு படத்தின் விட்ட இடத்திலிருந்து டப்பிங் பேசச் சொன்னார்களாம்.
இங்கே தான் கமல்ஹாசன் மீண்டும் வருகின்றார். தான் இயங்கும் சினிமா ஊடகத்தில் தொழில் நுட்ப ரீதியாக புதுமைகளையும், மேம்படுத்தல்களையும் செய்யும் முனைப்போடு இருக்கும் கமல் வழியாக ராஜபார்வை திரைப்படத்தின் வழியாக டப்பிங் கலைஞர்களுக்கும் பேருதவி கிட்டியது. அது நாள் வரை ஒரு காட்சியின் வசன ஒலிப்பதிவு நடக்கும் போது சிறு பிசிறு ஏற்பட்டால் அந்தக் காட்சி முழுமைக்குமான ஒலிப்பதிவு செய்யும் நிலை மாறி, பகுதி பகுதியாக ஒலிப்பதிவு செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியவர் கமல் என்று நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார் அனுராதா.
மூன்றாம் பிறை படத்திற்காக சில்க் இற்கு அனுராதா குரல் கொடுத்தபோது ஒவ்வொரு வரியாக எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்று பக்கத்தில் நின்று பயிற்சி கொடுத்தாராம் பாலுமகேந்திரா. ஆனால் வீடு படத்துக்கு நடிகை அர்ச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, பாலுமகேந்திராவைச் சந்தித்து "இந்த நடிகைக்குக் குரல் கொடுத்த என் பெயர் எடுபடாமல் போய்விட்டதே" என்று அழுதிருக்கிறாராம் அனுராதா. உண்மையில் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் நடிகர் கண்டிப்பாகச் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். இதன் காரணமாகவே பலருக்கு தேசிய விருது வாய்ப்பு கை நழுவியிருக்கிறது. வீடு படத்தில் அர்ச்சனாவே சொந்தக் குரலில் பேசியதாக நம்ப வைத்திருக்கலாம்.
தமிழ், தெலுங்கு உட்பட ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்த பின்னணிக்குரல் கலைஞர்
அனுராதா கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு மேல் ஒரே படத்திலேயே வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டை வேடம் போன்றவற்றுக்குக் குரலை வேறுபடுத்தியும் கொடுத்திருக்கிறாராம். அனுராதாவிப் குரல் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகைகளாக கெளதமி, குஷ்பு ஆகியோரை அடையாளம் காட்டுவேன். கெளதமிக்கு ஒரு தேவர் மகன் என்றால் குஷ்புவுக்கு சின்னத்தம்பி.
முன்னர் பிரதாப் போத்தன், கார்த்திக் பின்னர் நடிகர் மோகனுக்கு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து அவரின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்கெடுத்தவர், பின்னாளில் மோகன் தன்னை உதாசீனம் செய்ததாகப் பேட்டி கொடுத்தார் பாடகர் சுரேந்தர்.
சுரேந்தரை விட்டு விலகிய மோகனின் மெல்லத்திறந்தது கதவு இறுதிக் காட்சியில் சொந்தக் குரல் கொடுத்தார். பின்னர் அதைத்தொடர்ந்து வந்த ஜெகதலப் பிரதாபனில் இருந்து அன்புள்ள காதலுக்கு, சுட்ட பழம் உட்பட எல்லாமே மோகனின் இறங்குமுகத்தின் முக்கிய காரணியாக அமையுமளவுக்கு பின்னணிக் குரல் செல்வாக்குப் பெற்றது.
நடிகர் விக்ரம் கூட அஜித்குமார் உள்ளிட்ட கலைஞர்களுக்குப் பின்னணி பேசியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் சகோதரி ஹேமமாலினியைப் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் அவரின் கவர்ச்சி மிக்க குரல் நடிகை சில்க் இன் உருவத்தோடு பொருந்திப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.
பின்னணிக் குரல்கள் என்னும் போது அவை படத்தின் கதையோட்டத்தில் மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களில் இடம்பெறும் சேர்ந்திசைக் குரல்களுக்கும் இதே நிலை தான். எண்பதுகள் தொண்ணூறுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் ஒரு சில வரிகளைப் பாடிய பாடகர்கள் பலரைக் கூடத் தெரியாது இசைத்தட்டுகளும் ஓரவஞ்சனை செய்துவிடும்.
எண்ணற்ற பாடல்களில் ஆலாபனை பாடும் பாடகர்களுக்கும் இதே நிலை தான். இவர்களின் எண்ணற்ற அனுபவங்களை எடுத்தாலே ஒவ்வொரு பாடல்களும் தோன் றிய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிட்டும் இல்லையா?
ஏ.ஆர்.ரஹ்மான் தலையெடுத்த பின்னர் சேர்ந்திசைக் குரல்களும் இசைவட்டில் இடம்பெறும் அளவுக்கு மகத்துவம் பெற்றனர். அப்படி வந்தவர்களில் பின்னாளில் முன்னணிப் பாடகியாகவும் விளங்கிய கங்கா, பெஃபி மணியைக் குறிப்பிடலாம்.
எனக்கு அனுராதா என்ற பின்னணிக் குரலை அடையாளப்படுத்தியது செந்தமிழ்ப் பாட்டு படத்தில் வரும் "சின்னச் சின்னத் தூறல் என்ன" மற்றும் ரிக்ஷா மாமா படத்தில் வரும் தங்க நிலவுக்குள் ஆகிய இரு பாடல்களிலும் வரும் அவரின் குரல் மற்றும் சிரிப்புப் பகிர்வு. அந்த இரண்டு பாடல்களோடு நிறைவாக்குகிறேன்.
11 comments:
பொது நினைவில் இல்லாதவர்களுக்கு மரியாதை செய்யும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
இலங்கை வானொலியின் ஒலிச்சித்திரம் மதியம் மூன்று மணிக்கு ஒலி பரப்பாகும். தூக்குத் தூக்கி போன்ற படங்களின் ஒலிச்சித்திரங்களைக் கேட்டு மனப்பாடமாகிவிட்டது. இன்றைக்கும் கூட அந்தப் படங்களின் வசனங்கள் நினைவில்!ஒலிப்பதிவு பற்றிய செய்திகளுக்கு நன்றி.
படிக்காத மேதை நான், இப்போ தான் படித்தேன் :-) நடித்தக் காட்சிகளுக்கு நடிகர்களுக்குப் பின்னணி குரல் கொடுப்பது ரொம்பக் கஷ்டம். சரியான நேரத்தில் வசனம் பேசுவது மட்டுமல்ல, உணர்ச்சிகரமாக பேசுவதும் எளிதல்ல. அப்படி பார்க்கும்போது சுரேந்தர் அனுராதா போன்றோர் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள். ஆனால் அவ்வாறு செய்தால் ஹீரோ ஹீரோயின் value குறைந்துவிடும் என்று பாராட்டாமல் மறைக்கப் படுகிறார்கள்.
நல்ல பதிவு.
amas32
பல அருமையான தரவுகள் நிறைந்த அருமையான பதிவு அண்ணா நன்றிகள்.....
நான் இதுவரை விதி திரைப்படம் பார்க்கிவல்லை தெரியுமா ஆனால் அதன் கதையை இப்பவும் கேட்டப் பாருங்கள் படம் பார்க்கும் உணர்வை வர வைக்கும் அளவுக்கு சொல்ல முடியும்....
நடிகர் விக்ரம் தான் அண்ணா மின்சாரக்கனவில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்தவர்...
பல படங்களில் நாயகியா உணர்ந்த அந்த குரல் , இவரே துணை கதாபாத்திரத்தில் கோலங்கள் தொடர்ல நடிச்சப்போ பொருந்தாம இருந்துச்சு
இன்றைய படங்களுக்கு ஒலிச் சித்திரமா?? வேண்டவே வேண்டாம்.
அன்றைய வீரபாண்டிய கட்ட பொம்மன், பின் திருவிளையாடல் வெகுவாக ரசித்துள்ளேன்.
அன்றைய ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவமான குரல்....இன்று -எல்லோருக்கும் ஏதோ ஒன்று,இரண்டு....
இன்றைய படங்களின் குறிப்பாக நடிகைகளை, அவர்கள் திரைக்குரலுடன் பார்த்துவிட்டு, பின் தொகா பேட்டிகளில் காய்கா-பீய்கா என உளறும் போது, வெறுப்பாக வரும்.
ஆனாலும் இந்த நடிகைகளைக் குரலால் வாழவைத்தோர் பாராட்டுக்குரியோரே!
வருகைக்கு நன்றி காரிகன்
மிக்க நன்றி கமலா, அமாஸ் அம்மா, ம.தி.சுதா
ஐக்கிருஷ்
சுரேந்தருக்கும் இதே நிலை தான் :)
யோகன் அண்ணா
:-) அதே தான்
மிக அருமையான பதிவு
வாழ்க உங்கள் பணி
எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றல் உங்கள் துணை இருக்க வேண்டுகிறேன்
Post a Comment