Pages

Saturday, June 14, 2014

பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ


இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் தொடர் போட்டி ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு விசேஷமாகப்படுவதாக எண்ணுகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னரே பகுத்து வைத்திருந்த பாடல்கள் என் மனமாற்றம் காரணமாக கடைசி நிமிடத்தில் மாற்றம் காண்பதுண்டு.
அப்படித்தான் கடந்த வியாழன் இரவு 10 மணியைக் கடந்தவேளை கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதோச்சையாக என் மூளைக்குள் மணி அடித்த பாட்டு இந்த "மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதோ" பாடல்.

சிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த "மன்னன் கூரைச்சோலை" பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை எனக்குண்டு. வானொலியில் நேயர் விருப்பத்தில் கூட "சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே" மற்றும் "செம்பூவே செம்பூவே" பாடல்கள் தான் நேயர்களின் பெருவிருப்பாய் அமைந்திருக்கின்றன.

"காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணி
சிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.

மோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.

இப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையை ஆறு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2008/09/blog-post.html


"மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை" பாடலின் மூலப் பாடல் மலையாளத்தில் வந்த போது பாடல் வரிகளை எழுதியவர் இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பணியாற்றிய க்ரிஷ் புத்தன்சேரி, எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர். இவரைப் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும் என்பது என் நீண்ட நாள் அவா.
இந்தப் பாடலின் தமிழ் வடிவத்தின் வரிகளுக்குச் சொந்தக்காரர் பெருமதிப்புக்குரிய அன்பின் அறிவுமதி அண்ணர். இருவரும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.
பொதுவாக ஒரு பாடல் மொழிமாற்றம் காணும் போது இன்னொரு மொழியில் வேறொரு பாடகி பாடியிருப்பார். ஆனால் குறித்த இந்தப் பாடல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழிகளுக்குப் போன போது நான்கு மொழிகளிலும் சித்ராவே பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே பாடலை இம்மாதிரி ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ஒரே பாடகி பாடுவது இதுதான் முதன்முறை. எந்த மொழியில் கேட்டாலும் சித்ராவுக்கு மாற்றீடு தேவை இல்லாமல் அத்துணை கனிவாகப் பாடியிருக்கிறார்.
சித்ராவுக்கு இந்தப் பாடல் இன்னொரு "வந்ததே குங்குமம்" (கிழக்கு வாசல்) பாடல் என்று எனக்குத் தோன்றுகின்றது.

கோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார், தமிழுக்கு கங்கை அமரன், ஹிந்தி, தெலுங்கில் வெவ்வேறு பாடகர்கள். இங்கேயும் அண்ணன், தம்பி மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டுப் புதுமை விளைவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. கோரஸ் குரல்களின் ஸ்வரஆலாபனையே அந்தப் பெண்ணோடு சேர்ந்து ஆமோதிக்குமாற் போல அமைந்த புதுமையில் இசைஞானியின் முத்திரை அழுத்தமாகப் பதிகின்றது. இடையிசையில் கூட இவ்வளவு சிரத்தையா என்று பெருமையோடு பார்க்க வைக்கிறார் ராஜா.
மலையாளம் (இளையராஜா), தமிழ் (கங்கை அமரன்), ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்த இடைக்குரல்களோடு காலாபாணி படத்தின் பாடலின் அறிமுகத்தில் க்ரிஷ் புத்தன்சேரி கொடுக்கும் பகிர்வும், தமிழ்ப்பாடலும் சேர்த்து மொத்தம் 14 நிமிட இசைக்குளிகையாக இங்கே பகிர்கின்றேன்.

இப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்களில் ஒன்று மீண்டும் கேட்கும் போது உங்களுக்கும் அதை மெய்ப்பிக்கலாம்.



http://soundcloud.com/kanapraba/mannankoorai

6 comments:

Kasthuri Rengan said...

நல்ல சுகம்
வாழ்த்துக்கள்
நீண்ட ரசனைமிகு கட்டுரை வாழ்த்துக்கள்
http://www.malartharu.org/2014/01/gold-vein.html

Kasthuri Rengan said...

பாசு பதிவு எழுதுரதொடு சரியா
தமிழ்மணத்தில் சமர்பிப்பது கூட நாங்க தான் பண்ணனுமா?
த. ம ஒன்று
http://www.malartharu.org/2014/01/gold-vein.html

தனிமரம் said...

அருமையான பாடல் எனக்கும் பிடித்தது நீண்டநாட்களின் பின் உங்கள் பகிர்வு மூலம் மீண்டும் கேட்டேன்.

கானா பிரபா said...

மது

மிக்க நன்றி பாஸ் :-) தமிழ்மணத்தில் கொடுத்ததற்கும்

கானா பிரபா said...

மிக்க நன்றி தனிமரம்

Unknown said...

மிக மிக அருமை