எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் அவரின் தற்கொலையோடு முடிவுக்கு வருகின்றது அந்த நடிகையின் பயணம். சினிமா ஆசை என்ற பெருங்கனவில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வரும் ரேஷ்மா ஒரு வறிய குடும்பத்துப் பெண் தன் முன் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எல்லாம் தொலைத்துத் தன்னையும் தொலைத்த கதைதான் இந்தப் படத்தின் கரு.
"அவளோட புகழ் சோளப்பொரி போல, மேலே போனது கீழே வரத்தான் செய்யும்" சூர்ய காந்த் என்ற உச்ச நடிகர் ஒரு இடத்தில் பேசுவார், சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவர் எப்போது கீழே விழவேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. வித்யாபாலன் என்ற நடிகைக்கு ரேஷ்மா என்ற அபலைப்பெண்ணில் இருந்து சில்க் என்ற உச்ச நடிகையாக மாறி அந்தப் பாத்திரமாகவே வாழவைத்திருக்கின்றது இந்தப் படம். வித்யாபாலனுக்கும் சில்க் இற்குமான தோற்ற நிலையில் ஏற்கமுடியாது ஆரம்பிக்கும் படம் முடியும் போது வித்யாபாலனின் உழைப்புக்கு சபாஷ் போட வைக்கின்றது.
சினிமா என்ற கனவுலகத்தைத் தேடிப் போய் அவமானங்கள் பட்டு ஜெயிக்கும் ரேஷ்மா என்ற சில்க், ரசனை மாறும் போது தனக்குப் போட்டியாக வரும் நாயகியை ஏற்றுக் கொள்ளா முடியாத ஒரு சராசரி மனித மனம் என்ற அளவுக்கு இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கனவுத்தொழிற்சாலை ஆக்கியபோது விகடனில் நடிகை லட்சுமியின் கண்டனத்தோடு கூடிய சந்திப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நடிகையின் கதை என்ற தோரணையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடி நடிகை சுஹாசினி தலைமையில் அவருக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடந்தது வரலாறு. ஆனால் உண்மையில் ஒரு நடிகையாக வாழ்க்கைப்பட்டவளைச் சுற்றி சூழலில் எந்தப் பெண்ணுமே உடல் அல்லது உணர்வு ரீதியான காயத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்பது கேள்விக்குறி. அதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது இந்தப் படம்.
ஏப்ரஹாம் என்ற தலைசிறந்த இயக்குனர்(இம்ரான் ஹசானி) சினிமாவில் கவர்ச்சி மாயை வெறுத்து நல்ல கதை தான் ஜெயிக்கும் என்ற உணர்வோடு இருப்பவர். அவரின் அசரீரிக் குரலாகத் தான் சில்க் என்ற நடிகையின் வாழ்க்கை இந்தப் படத்தோடு பயணிக்கின்றது. ஏப்ரஹாம் வெறுத்து ஒதுக்கும் சில்க், தயாரிப்பாளர் செல்வ கணேஷ் இன் பார்வை பட்டு சினிமாவில் நுழையவும், கூடவே சூர்யகாந்த் என்ற முது வயது சூப்பர் ஹீரோவின் அரவணைப்புக் கிட்டி மெல்ல மெல்ல அவள் பெரும் புகழ் என்ற உச்சாணிக்கொம்பை அடைவதும், கூடவே அவளின் தோல்விக்காகவும் தன் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஏப்ரஹாம் என்ற இயக்குனரும் என்று இந்த முக்கிய புள்ளிகளே கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
ஒரு நடிகையை ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் ஏற்காத வெளிச்சமூகம் மட்டுமல்ல திரையுலகத்துக்குள்ளும் அதே நிலை என்பதையும் வெறும் பாலியல் ரீதியான பந்தத்தை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களிடமிருந்து உண்மையான அன்பைத் தேடும் சில்க் ஆகவும் இந்த நடிகையின் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.
பரபரப்புப் பத்திரிகையாளர் பாத்திரத்தை நாம் வழக்கமான வாராந்த சஞ்சிகையின் எழுத்தில் தரிசிக்க முடிந்ததைத் திரையில் காணமுடிகின்றது.
வேலையிடத்தில் சந்திக்கும் சவால்கள் என்பது பொதுவான ஒரு விடயம். ஆனால் கலை என்று வரும் போது அங்கே உணர்வு ரீதியான பல சவால்களைச் சந்திக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குதிரை சட்டென்று தாமதித்தால் கூடவரும் குதிரைகள் முன்னே ஓடிவிடும் அல்லது இடறித்தள்ளிவிடும். என் ஊடகத்துறையில் கடந்த பதினோரு ஆண்டுகளில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த காழ்ப்புணர்வுகளைத் திரையில் ரேஷ்மா என்ற சில்க் பாத்திரத்தோடு பொருத்திப் பார்க்க முடிகின்றது. உன்னால் ஏராளமான வெற்றிகளைக் கொடுத்து ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றதே அதே வெற்றி உன் ஒரு படத்தின் தோல்வியால் அழிக்கப்பட்டு விடும் என்று ஏப்ரகாம் சொல்லும் உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.
சில்க் என்ற நடிகையின் கதை என்ற மையத்தை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிக் கோர்வை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று போவதால் படத்தை ரசிக்க முடிகின்ற அதே சமயம் இயக்குனர் எப்ரகாம் , சில்க் காதலும் கூடவே வரும் பாடலும் ஸ்பீட் ப்ரேக்கர்.
இளமையாகக் காட்டிக் கொண்டு தொப்பை மறைத்து ஹீரோயிசம் காட்டும் நஸ்ருதின் ஷா கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் "சத்யா மூவீஸ்" தங்க மகன் போஸ்டரில் இருந்து ப்ளஸ் டூ பாஸ் ஆகித் தன் தாய் மடியில் செல்லம் கொட்டும் காட்சியிலும், தொய்ந்து விழும் திறந்த உடம்போடு அவர் போடும் ஆட்டமும் ரஜினியில் இருந்து தென்னக மூத்த நடிகர்கள் எல்லோரையும் பதம் பார்க்கின்றது. முழுமையாகக் கோடம்பாக்கத்தின் சூழலும் வருவதால் படத்தின் முகப்பில் இருந்து ஒரு சில காட்சிகள் வரை "அட்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க" பாடலும் தமிழ்ப் பேசுவதோடு பாத்திரங்கள் எல்லாமே தென்னிந்திய வாடையோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
என்னடா இது, பகையாளி கூட என்னை எதிர்க்கமுடியாத நிலை என் நிலை என்று மருகுவதாகட்டும், அப்பாவிப்பெண்ணில் இருந்து படிப்படியாகச் செல்வாக்கு மிக்க நடிகையாக மாறுவதும் தேய்வதும் அவரது நடிப்பின் வாயிலாகவே காட்டிச் சிறப்பிக்கின்றார். தன் கனவைத் தொட்டுவிடத் துடிக்கும் ஏழைப்பெண், சாதித்துக்காட்ட முனையும் வெறி, சவால்களை எதிர்கொள்ளும் விதம், எல்லாம் தொலைந்து நிர்க்கதியான நிலை எல்லாவற்றையும் தாங்கி வெளிப்படுத்துகின்றார் வித்யா பாலன். கவர்ச்சி நடிகையின் படம் என்பதால் இந்திய சினிமா தொடமுடியாத உச்சங்களையும் தொடுகின்றார்.
இப்படியான உணர்வுபூர்வமான கதையை வைத்து கோடம்பாக்கத்து பாபுகணேஷ் போன்ற மொக்கைகள் கைமா பண்ணிக் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நேர்த்தியான திரைக்கதை, வசனம், தேர்ந்த நடிகர்கள், புத்திசாலித்தனமான இயக்கம் (Milan Luthria) என்று இந்தப் படம் சிறப்பானதொரு படைப்பாக வந்திருக்கின்றது.
எண்பதுக்கே உரிய மண்ணிறச் சாயம் கொண்ட ஒளிப்பதிவின் சொந்தக்காரர் Bobby Singh.
புகழ் என்ற நட்சத்திரத்தை அடைய நினைப்பவர்கள் அந்த எல்லையைத் தொட்டதும் தடுமாறாமல் பயணிக்க வேண்டிய சதுரங்க ஆட்டத்தில் நின்று நிலைப்பதென்பது எவ்வளவு சவாலானதொரு நிலை என்பதோடு, காலவோட்டத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பிக்காதவன் ஓரம் கட்டப்பட்டு விடுவான் என்பதை மறைமுகமாகச் சொல்லிவைப்பதில்
The Dirty Picture, a neat film
பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அருமையான விமர்சனம். படம் வந்தவுடன் பார்த்துவிடவேண்டும்.
Neat - Review!
//பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது//
அடப்பாவி கா.பி...how did u go then? with ottu meesai?:)
தெளிவான அருமையான விமர்சனம்
Crisp comments....very nice.
வருகைக்கு நன்றி சண்முகன்
வாங்க கண்ணபிரான்
இன்னும் படம் பார்க்கவில்லைப் போலும் :)
மீசை மரு எல்லாம் ஒட்டி வச்சுப் பார்த்தோம் :))
இன்னைக்கு மும்பை வந்தடைந்தேன்.. என்னவளின் முதல் கோரிக்கை Dirty Picture தான்.. உங்க விமர்சனம் பாத்தாச் ... அருமையாக படம் பார்த்த சூட்டோடு எழுதிவிட்டீர்கள் போலும்.. அந்த வாசனை இருக்கே...!! ;-)) போகலாம்னு முடிவு..!
மிக்க நன்றி செளமியா
விமர்சனம் தூள் ;-)
தல..இந்தியா இல்லை தமிழில் பார்த்திங்களா!?
வருகைக்கு நன்றி அறிவுக்கரசு சார்
ஆனந்தராஜ்
குடும்பத்தோடு பார்க்கவேண்டாம் :0
தல கோபி
வருகைக்கு நன்றி ;)
விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.
//வாங்க கண்ணபிரான்
இன்னும் படம் பார்க்கவில்லைப் போலும் :)
மீசை மரு எல்லாம் ஒட்டி வச்சுப் பார்த்தோம் :))//
KRS, ஒட்டு மீசை எங்கு கிடைக்கும் என்று தான் விசாரிக்கிறாரோ என்னவோ ?
neat விமர்சனம்..படத்திலுள்ள அத்தனை செய்திகளையும் தொட்டு செல்கிறது விமர்சனத்தின் வார்த்தைகள்.. #நான் எனது ப்ளாக்கில் விமர்சனம் எழுதியிருக்கேன் நேரம் இருப்பின் படித்து பார்க்கவும்
Post a Comment