மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே "சீனி கம்" (ஹிந்தி), "ரசதந்திரம்", "பாக்யதேவதா" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.
இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.
அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.
படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.
இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.
இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.
ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).
பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.
சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.
என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.
ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அருமை ! உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு!
ஈ ராமராஜ்யம் காதண்டி!
ஈ மூவிலோ, அந்தே சீத ராஜ்யம்! இசை ஞானி ராஜா ராஜ்யம்!!
எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு.
படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. /
அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ஜகதானந்த காரகா - தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்தனையின் முதல் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா - சீதை வெறும் உடல்! அவள் உயிரே இராகவன் தான்!
= அதை அழகாக எடுத்து, ஊர் திரும்பும் இராமன்-சீதைக்குப் போட்டிருப்பது...ராஜா-வின் நுண்ணிய மரபிசைப் புலமை!!
-----------
* பட்டாபிஷேக Symphony...
* சீதா சீமந்தம்
* காட்டுக்குப் போகச் சொல்லும் போது வரும் இசை
* தன்னையே சிலையாய்ப் பார்க்கும் போது எழும் இசைத் துடிப்பு
--------
* பட்டதெல்லாம் போதும்-ன்னு பூமி தேவிக்குள் அடங்கிப் போகும் இசைப் பேரதிர்ச்சி
எத்தனை முறை அந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆண் சமூகம் திருந்துமோ???
இல்லை....தொடர்ந்து காவியங்கள் மட்டுமே எழுதுமோ?
வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் கம்பன்!
அதை இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் இளையராஜா!!
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்
எல்லாரையும் சொன்ன நீங்கள், SPB-யை விட்டு விட்டீர்களே கா.பி?
சங்கராபரண SPBயை, ஜகதானந்த-விலும் காணலாம்!
காலி நிங்கி நீரு-ன்னு பாடும் போது, SPB அழுவது அப்பட்டமாத் தெரியும்!
அதே போல் எவடுன்னாடு? பாட்டிலும்!
வாத்திய இசையைக் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு?
யப்பா.....ஒரு புராணப் படம் வந்து தான், அசல் வாத்தியத்தை, ரெண்டு காதாலயும் கேக்கணும்-ன்னு இருக்கா???
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு செவி" மீதிலும் பகர்-என்ற இன்பம் அடைந்தேன், ராஜா வாத்திய இசையில்!
இந்த இராகவப் பய இருக்கானே.....சரியான பயந்தாங்கொள்ளி! இவனா இராவணனை எதிர்த்த "வீரன்"?
ஊர் என்ன சொல்லுமோ, ஊர் என்ன சொல்லுமோ-ன்னே...
ஒரு சின்ன ஊருக்காக.....இவனே மொத்த உலகம் என்று வாழ்பவளை...அடக் கொடுமையே!
அப்படி ஊர்பக்தி தான் முக்கியம்-ன்னா, தானும் பதவி விலகிட்டு, இவளோட, இவனும் போய் இருக்கலாமே?
தம்பிமார்கள் அரசாள ஒத்துக்க மாட்டாங்க-ன்னா, யானை யாரு கழுத்தில் மாலை போடுதோ, அந்த வேற ஒருத்தன் கிட்ட ஆட்சியைக் குடுத்திட்டு...தம்பிகளோடும், இவளோடுமே போய் இருக்கலாமே?
முருகா...என்னமோ போங்க! பட்டு அழிய வேண்டியவள் இவள் ஒருத்தி தானோ என்னமோ!:((
---------------
இவளுக்கு அவன் மேல சந்தேகமே இருந்ததில்ல!
அவன் மனம் இவளுக்குத் தெரியும்!
ஆனா "ஊருக்காக, இன்னொரு பெண்ணை"-ன்னு யாராச்சும் ஆரம்பிச்சி இருப்பாங்களோ?-ன்னு படபடப்பு! எந்தவொருத்திக்கும் இருக்கத் தான் செய்யும்! காலம் முழுதும் கரைந்தே போன இவளுக்கு, இன்னமும் இருப்பதில் தப்பேயில்ல!
அதான் ஆவியா பாக்க வராப் போல! அங்கே அவளுக்குப் போட்டியா...
அவன் - அவள் சிலையைக் கண்டதும்...
யப்பா......உணர்ச்சி என்பதற்கு இசை =ராஜா!!!
ஒவ்வொரு காதலிலும், ஒரு நெஞ்சு எப்படி வாடுது-ன்னு, இன்னொரு நெஞ்சு ஒளிஞ்சி இருந்துப் பார்த்தாத் தான் தெரியும்....
பகிர்வுக்கு மிக்க நன்றி தல..நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர் !
விரைவில் onlineல தேடி எடுக்கனும் ;-)
நேனு இன்கா ஈ சலனசித்திரம் சூட லேதண்டி. ஆனால் உங்கள் பதிவு அதற்கான ஆர்வத்தை தூண்டி உள்ளது.எவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்துளீர்கள்! ராஜா பற்றிய உங்கள் கருத்துகளுக்காகவே இதை இருமுறை படித்தேன்!
படத்தின் முக்கிய பலமே இளையராஜாதான். என்ன அருமையான பாடல்கள். பாடல்களைப் பற்றி ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருக்கலாம் என்றால் இன்றைக்கு பின்னணியிசைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற கூற்றை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். ராமன் தன் காதல் மனைவி இல்லாமல் பிரிந்து வாடும் துயரையும், காதல் மனைவி அருபமாய் வந்து தான் இல்லாமல் ராமன் எப்படி அஸ்வமேதயாகம் செய்ய முடியும் என்ற யோசித்து வேறு யாரையாவது திருமணம் செய்துவிடுவானோ என்ற அச்சத்தில் அரண்மைக்குள் வந்து தன் சிலையை தானே ரசித்து நின்று விட்டு, தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை, அன்பை, காதலை கண்டு உருகும் காட்சியில் ராஜா.. கடவுளின் கிருபை முழுக்க உள்ளவனய்யா அவன்.. என்னா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கோர் உருக்கி எடுக்கிறார். சில பல பாடல்கள் ஏற்கனவே கேட்ட தொனியில் இருந்தாலும் முழுக்க, முழுக்க, இளையராஜாவின் இசை மழையில், ஆன்மிக, கிளாசிக்கல் இசையில் S.p.bயின் கந்தர்வ குரலில் நினைய வேண்டுமா.. இதோ. மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.
பாடல்களை கேட்கும் போதே படம் பார்க்க வேண்டும் என தோன்றியது. உங்கள் பதிவு மேலும் ஆசையை கூட்டுகிறது.ராஜா ராஜா தான்.
வருகைக்கு மிக்க நன்றி மாரிமுத்து
அன்பின் KRS
இந்தப் படத்துக்கு மீண்டும் பின்னணி இசையில் நாம் இணையணும் :) .
தல கோபி
தியேட்டருக்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கவும்
மிக்க நன்றி அறிவுக்கரசு சார்
அருமையான விமர்சனம். ஆனால் நாம் இங்கு பார்க்க முடியாதே :-(
கேபிள் சங்கர்
ராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் மிகை இல்லை,
வருகைக்கு நன்றி மின்மலர்
சண்முகன்
தமிழில் மொழிமாற்றப்படலாம், அப்போது பார்க்கும் வாய்ப்புக் கிட்டலாம்
///மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.///
நானுமே அப்படித்தான் பகிர்தல் சுகமானது:)
//இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.//
கதை மற்றும் நன்றாக அமைந்து விட்டால் இசை ஞானியின் இசையும் மிகப் பெரும் பலமாகவே அமைந்துவிடும்.
உங்கள் விமர்சனம் உடனே படத்தைப் பார்க்கத் தூண்டும் ஆவலை அதிகப் படுத்தியே இருக்கு.நானும் பார்த்துட்டு சொல்றேன் :)
ungal pathivirku nandri. ippadathai tamilil veliyanal kandippaga parkka thondiviteerkal
தேர்ந்தெடுத்த இசைஞானியின் பாடல்கள்,இசை போல உங்கள் இந்தப்பதிவும் அருமை! ஆளாளுக்கு விமர்சனம் செய்யிறதை பாத்தா இப்பவே எங்கயாவது தேடிப்பிடிச்சு இந்த படத்தை பாத்திடோணும் போல இருக்கு..:) பகிர்வுக்கு நன்றி அண்ணா.
உமாகிருஷ்
தேடி எடுத்துப்பாருங்க, பிடிக்கும்
ரவி
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
தாருகாசினி
பாடல்கள் எல்லாமே அற்புதம் கேட்டுப்பாருங்கள்
நயந்தாராவை ஓவர் மேக்கப்பில் சீதையாக பார்க்க முடியுமா என்று யோசித்தே டிக்கெட் புக் செய்யாமல் இருந்தேன். பாஸ் சொன்னதக்கப்புறம் புக் செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.
:))
உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாடல்களை கேட்டபடி தான் படித்தேன்.. படத்தின் காட்சிகளை பார்த்தது போன்ற உணர்வை தந்தது.. நன்றி.
Post a Comment