Pages

Thursday, March 17, 2011

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...




"ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா"

இன்றைக்கு எத்தனை முறை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்....?
கணக்கில்லை,
ஏன் இந்தப் பாட்டை இன்று கேட்கவேண்டும் என்று மனம் உந்தியது...?
தெரியவில்லை
ஆனால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், கைகள் தானாகத் தட்டச்சும் போதும் காதுகளை நிறைக்கின்றது இந்தப் பாடல்.

மணக்கோலத்தில் கோட் சூட் அணிந்த ஆண்மகனும், பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளுடைத் தேவதையாகப் பெண்மகளின் வெண் கையுறையில் கரம்பதித்து நிலம் நோகாமல் மெல்லக் கால் பதித்து வந்து யாருமில்லாத அந்த அமைதி கும்மிய அறையின் மேசையில் மெழுகுதிரி மெல்ல அலுங்காமல் குலுங்காமல் மெல்ல ஆடி ஒளிபரப்ப வேறெந்த வெளிச்சமோ, ஓசைகளோ இல்லாத அந்த வேளை ஒலிக்க வேண்டும் இந்தப் பாடல் என்று கற்பனை செய்து திருப்தி கொள்கிறது என் மனம்.

"மெல்லினமே மெல்லினமே" என்ற ஷாஜகான் படப் பாடலில் மெட்டை இலேசாக நினைவுபடுத்தும் பாட்டு இது, இரண்டுக்குமே இசை மணிஷர்மா தான். தெலுங்கில் ஆர்ப்பாட்டமான துள்ளிசை இசையமைப்பாளராக இனங்காணப்பட்ட மணிஷர்மாவின் மென்மையான பாடல்களில் தான் எனக்குக் காதல் அதிகம். அதில் மெல்ல மெல்ல நெருங்கி முதல் இடத்தைப் பிடித்து விட்டது "ஜில்லென வீசும் பூங்காற்று" என்ற திருதிரு துறு துறு படப்பாடல். பொதுவாகவே புதிய பாடகர்களில் ஆண் பெண் குரல்கள் இணைந்த பாடல்களில் இப்போதெல்லாம் ஒரே அலைவரிசையில் இயங்கும் குரலிசையைக் காண்பதரிது. ஆனால் இந்தப் பாடலில் சேர்ந்த ஹரிச்சரண், சைந்தவி குரல்கள் இரண்டும் ஒத்திசைக்கின்றன மெல்லிசையாக. அதிலேயே பாடலின் முதல் வெற்றி நிரூபணமாகிவிட்டது. குறிப்பாக இருவருமே தமது வழக்கமான குரலில் இருந்து இறங்கி கீழ்ஸ்தாயியில் பாடும் பாங்கு. சாக்சபோனை கஞ்சத்தனமாக உபயோகித்துக் கம்பீரமாக முத்திரை பதிக்கும் இசையில் கிட்டாரோடு மேலும் இசைந்த மேற்கத்தேய வாத்தியக் கருவிகள் எல்லாமே பாடலின் தாற்பரியம் உணர்ந்து தாழ்வுமனப்பான்மையோடு உழைத்திருக்கின்றன.

இந்தப் பாடலை கல்யாண ரிஸப்ஷன் வீடியோவில் இணைத்துப் பாருங்கள் ஒரு புது அர்த்தம் கிட்டும்.

திருதிரு துறுதுறு படத்தை இன்னும் பார்க்கவில்லை, படத்தின் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் என்ற பெண்ணாம். இந்தப் பாடல் கொடுத்த சுகந்தத்தில் பாடலாசிரியர் முத்துக்குமாராகத் தான் இருக்கும் என்ற ஆவலில் தேடினால் எழுதியவர் லலிதா ஆனந்த் என்ற புதுமுகக் கவிஞராம். கவிஞரே உங்களின் பாடல்வரிகளின் பொருளுணர்ந்து உயிர்கொடுத்த மணிஷர்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



எப்போது என்னில் கலந்தாய் நீ.....
ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்
ஓவியமானது அப்போதுதானா

விண்மீன்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி
நமை உற்றுப்பார்த்த போது தானா

நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டுக் கொண்ட போது தானா

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா

உலர்த்திய போது அன்று என் உடைகளின்
உந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா

மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்க்கும் போதா

எப்போது என்னில் கலந்தாய் நீ.....

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா

மழைத்துளி எல்லாம் அன்று பல நிறங்களில்
உந்தன் மீது விழுந்த பொழுதா

பனித்துளி உள்ளே அன்று ஓரழகிய
வானம் கண்டு ரசித்த பொழுதா

குளிரிரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்து போனாய்

எப்போது என்னில் கலந்தாய் நீ.....

3 comments:

கோபிநாத் said...

நல்ல பாடல் தல..;)

MyFriend said...

Oorule ills Ella songsum podureengga. Naan kettathai mattum vanjanai pandreengga. Naan ingge kiddie 'kaa'

Anonymous said...

super Kana anna