Thursday, March 10, 2011
கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா
படத்தின் காட்சியோட்டத்திற்கு அமைய குறித்த கதாபாத்திரத்தை ஆறுதற்படுத்துமாற்போல அமையும் அசரீரிப் பாடலைக் காட்சியின் பின்புலத்தில் அமைத்து விடுவது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துச் சங்கதி. இப்படியாக அமையும் பாடலின் தொனி குறித்த கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் தொனிக்கும் விதத்தில் ரசிகன் கொடுக்கும் ஒத்தடமாகக் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படி அமைந்த ஒரு பாடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேட்டபோது சங்கிலிக் கோர்வையாக இப்பாடலை ரசித்த காலங்களும் நினைவுக்கு வந்தது.
தென்றல் சுடும் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ராதிகா, நிழல்கள் ரவி நடிப்பில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த படம். இந்தப் படம் ஹிந்தி நடிகை ரேகா நடித்த ஒரு ஹிந்திப்படத்தின் தழுவல் கூட. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் "தூரி தூரி துமக்க தூரி" என்ற வாலி எழுதிய பாடலை முணுமுணுக்காத ஆட்களே கிடையாது. நிழல்கள் ரவியால் ஏமாற்றப்படும் ராதிகாவின் போராட்டங்களும், பழிவாங்குதலையும் கதைக்கருவாகக் கொண்டது இப்படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் தான் முக்கியமாக இங்கு பேசப்படப்போகிறது. அதுதான்
"கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா" என்ற இளையராஜா எழுதி இசையமைத்த பாடல். பதிவின் முதற்பந்தியில் சொன்ன விஷயங்களைத் தான் இப்பாடல் தொனிக்கிறது.
போராட்டங்களைச் சந்திக்கும் அந்த அபலைப்பெண்ணுக்கு ஆறுதல் கூற வருகின்றது இசைஞானி இளையராஜாவின் குரல். சோகம் இழையோடும் இசை அந்தப் பெண்ணின் மன உணர்வுகளின் வடிகாலாக வரும் போது அதனோடு இழையும் பாடலின் வரிகள் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான பாடலை அதிமேதாவித்தனமான பாடகர் யாராவது பாடியிருந்தால் அது வெறும் உபதேசமாகத் தான் வந்து விழுந்திருக்கும். ஆனால் பாமரத்தனமாக தொனிக்கும் எளிமையான வரிகள் இசைஞானியின் குரலில் அவளுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையைப் போதிக்கும் வண்ணமாகவும் அமைந்து விடுகின்றது. பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியக்கருவிகள் குறிப்பாக ஆர்ப்பரிக்கும் வயலின் இசை அவளின் மனப்போராட்டத்தினைத் தொனிக்க, மெல்லென மிதந்து வரும் புல்லாங்குழல் இசை ராஜாவின் அந்த உபதேசங்களுக்குத் தலையாட்டுமாற்போல அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக "கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கொம்பு தான் உள்ளதா இல்லையா சொல்" போன்ற அடிகளைக் கேட்டுப்பாருங்கள் உணர்ந்து கொள்வீர்கள். காட்சிப்புலத்தை உணர்ந்து தக்கவேளை அசரீரியாக அமைந்துவிடும் ராஜாவின் பாடல்களில் இந்தப் பாடலுக்குத் தனி முத்திரை உண்டு.
இப்படியான அசரீரி போலத் தொனிக்கும் பாடல்களை ராஜாவுக்கு முன்னோடியாகக் கொடுத்தவகையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் "எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்ற சிவகாமியின் செல்வன் திரைப்படப்பாடலை முன் சொன்ன பாடலோடு பொருத்திப் பார்த்து ஒப்பு நோக்க முடிகின்றது. கிட்டத்தட்ட இரண்டு சூழ்நிலைகளிலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட அபலை ஒருத்தியை ஆற்றுப்படுத்தும் பாடலாக அமைகின்றது
மீண்டும் ராஜாவுக்கே வருகின்றேன். என் உயிர்க்கண்ணம்மா என்றதொரு படத்தில் வரும் "பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி" என்ற பாடலும் இந்த சூழ்நிலைப் பாடல்களோடு மூன்றாவதாக வைத்துப் பார்க்க வேண்டிய பாடல். ஆனால் இந்தப் பாடல் குறித்த பாத்திரத்திரத்தை நோக்கிப் பாடும் வண்ணம் அமையாமல் பொதுவான காட்சிப் பின்புலத்துக்கான பாடலாக அமைகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமையான பாடல்கள் - மீண்டும் உங்க பதிவுடன் கேட்கும் போது கூடுதல் சுகம் ;)
\\பூம்பாறையில் பொட்டு வச்ச \\
முன்பு அறையில் இருந்த நண்பன் (பாக்கியராஜ் உங்களுக்கு தெரியும்) கேட்டு கேட்டு சிடியவே காலி பண்ணிட்டான் ;)
கண்ணம்மா பாடலே எனக்கு மிகவும் பிடிக்கிறது..
துப்பாக்கி கையிலெடுத்து [கோடை மழை] பாடலிலும் இதன் சாயல் தெரிவது போல் ஒரு பிரமை ...ஒரே ராகமோ?
ஆணுக்கும் அறுதல் சொல்லி இருக்கிறார் ராஜா :
பணம் மட்டும் வாழ்கையா [சொல்ல மறந்த கதை]
அருமையான பாடல்வரிகள் உன்னைப்போல பெண்களை எல்லாம் குற்றம் சொன்னால் என்ற இடத்தில் நம்ராஜாவின் அந்த குரலுக்கு மாற்றீடு ஏது இன்றும் மனச்சுமை ஏறபடும் போது இப்படியானபாடல்தான் உற்சாகம்தருகிறது.என்னுயிர் கண்ணம்மா பாடலில் லக்சுமியின் நடிப்பு பிரமாதம் அது ஓரு மலையாலப்பட தளுவல் என்பது என் ஊகம் நீங்கள்தான் கூறனும் சகோதரனே.மீண்டும் நல்லபாடல்களை ஞாபகம் ஊட்டி இலங்கை வர்தகசேவை வானொலியை அசைபோடவிட்டதற்கு நண்றி பிரபா,முடிந்தால் ரோசாப்பு சின்ன ரோசாப்பூ படத்தில் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ரபாடலை பதிவு செய்யுங்கள்( படம் வெளியாகவில்லை சாத்தியராஜ்+தேவயானி)
வருகைக்கு நன்றி தல கோபி, ஆகா அந்தாள் இப்படிப்பண்ணிட்டாரா ;)
கிருஷ்குமார்
இரண்டும் ஒரே மாதிரித்தான் தெரிகிறது. ஆணுக்கு ஆறுதல் சொன்ன பாட்டுக்களை தனித்தொகுப்பா போட்டுடுவோமே ;)
வாங்கோ நேசன்
ஒரே அலைவரிசையில் நாம் இருவரும் இருக்கிரோம் ;). ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாட்டு கண்டிப்பாகத் தருகிறேன்
"தூரி தூரி துமக்க தூரி"
பி. சுசீலா பாடின பாட்டு.. நான் சின்ன வயசா இருக்கும் போது
அடிக்கடி கேப்பேன்.. எனக்கு ரொம்ப புடிக்கும்..
வளந்ததுக்கப்புறம், அப்படியே ஒரு கட்டத்துல முழுசா மறந்தே போயிட்டேன்.. இப்போ, உங்க பதிவுல இந்த பாட்ட பத்தி படிச்சதும் அப்படியே நெறைய பழைய ஞாபகங்கள் வர ஆரம்பிச்சிருச்சு .. . :-)
"கண்ணம்மா கண்ணம்மா" - இந்த பாட்ட கேக்கும்போது, (ஆரம்பத்துல பாடுற ஆலா முதற்கொண்டு) அப்படியே "கடலுல எழுகிற அலைகளை கேளடி ஒமானே" பாட்ட கேக்குற மாதிரியே இருக்கு..
அதும் இளையராஜா பாடின பாட்டுதான்.. என்ன படம்னு ஞாபகம் இல்ல.. ஆவாரம்பூ?? அல்லது செம்பருத்தி??
வாங்க பிரசன்னா
தூரி தூரி பாட்டு இரண்டு வகை, சந்தோஷ மெட்டு ஜானகி, சோக மெட்டு சுசீலா இல்லையா
கடலில எழும்புற அலைகளை பாட்டு செம்பருத்தி படத்தில் வருது
Post a Comment