Pages

Sunday, February 20, 2011

மலேசியா வாசுதேவன் - "பூங்காற்று இனித் திரும்பாது"

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் இன்று தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார். இவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார். மலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். குறிப்பாக முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(

நண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் "அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா" என்னும் அற்புதக் குரல்



மலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக்கலைஞன்

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"



சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து "சிந்து மணி புன்னகையில்" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.



நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.



சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.



சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.



மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார்.



அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்



நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது




நிறம் மாறாத பூக்கள் பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவனின் பாடல்கள்

ராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,"ஆயிரம் மலர்களே" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.


ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.


முதல் மரியாதை பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவன் குரல்கள்


பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு



"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி




மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது



ஒட்டுப்போட்ட சினிமாப்பாட்டுக்கள் தொகுப்பில் இருந்து

சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.



என்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்


"அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் "இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா...." இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.


25 comments:

pudugaithendral said...

நிச்சயமாய் பூங்காற்று திரும்பாது பாஸ் :(( இது சத்தியமா எனக்கு ஷாக்கிங் ந்யூஸ்

எல் கே said...

annarathu kudumbathirkku aaruthalgal

ராமலக்ஷ்மி said...

அஞ்சலி பதிவு நெகிழ வைத்து விட்டது.

ஆம்,
பூங்காற்று இனி திரும்பாது:(!
ஆனால்
"அவர் பாட்டை விரும்பும்"
என்றென்றும் தமிழ் நெஞ்சங்களும்
இனிவரும் தலைமுறைகளும்.

அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

S Maharajan said...

இதயம் தொட்ட பாடகர்.
அன்னாருக்கு என் இதய அஞ்சலியை
காணிக்கையாக்குகிறேன்

Anonymous said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள்

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

ஆட்டுகுட்டி முட்டையிட்டு என்று பாடி என்னை போன்ற பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளையும் மகிழவைத்த மாபெரும் கலைஞர், பாடகர், நடிகர் அதற்கும் மேலாக ஒரு நல்ல மனிதநேயம் மிக்க ஒருவர் மறைந்துவிட்டதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை.. திரைத்துறைக்கு வெகு அப்பால் நாம் இருந்தாலும் இவருடைய குரலில் எத்தனையோ பாடல்கள்..மறக்க முடியாமல்..நானும்... இளங்கோவன், சென்னை.

Unknown said...

அன்னாரது ஆத்மா
அமைதி கொள்ளட்டும்...

PRABHU RAJADURAI said...

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்...சிதம்பரம் ஜெயராமனின் குரலில் அப்படியே அச்சுக்கு அச்சாக பாடிய ‘ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!’ தவிர்த்து மலேசியா வாசுதேவனுக்கு அஞ்சலியா? பொதுவாக ம்ற்றவர் குரலில் பாடுவது சோபிக்காது என்றாலும், மலேசியா வாசுதேவன் சிதம்பரம் ஜெயராமனின் குரலில் பாடியது பெரிய ஹிட்...என்று கேட்டாலும் நம்மை தாலாட்டும் பாடல்

Anonymous said...

பிரபா அண்ணா, நடடா ராஜா மயில காளை ய விட்டுடிங்கள் !

அலாவுதீன்.எஸ் said...

இன்று ஞாயிற்று கிழமை ஓய்வாக ஒரு பழைய படம் பார்க்க மனசு கேட்டது.....
என் home theater ல "முதல் மரியாதை" dvd வாங்கி ரசிச்சேன்..... அந்த இசையில்....மலேஷியா வாசுதேவன் குரல்ல உண்மையா இதமா feel பண்ணுனேன்..... மாலையில் அவரின் மரண செய்தி என்னை மிகவும் பாதித்தது.... என் அஞ்சலியை செலுத்துகிறேன் கண்ணீருடன்......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அஞ்சலிகள்

அம்பிகா said...

அஞ்சலிகள்....
அருமையான பாடல்களின் தொகுப்பு, அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடடல்லாமல், அவரது அழகான பாடல்களையும் தந்திருக்கிறீர்கள்.
மாலைவேளை...பாடல், சிலோன் ரேடியோவில் கேட்டது தான். மறுபடியும் உங்கள் பதிவில் தான் கேட்கிறேன்.

ஆம்,
பூங்காற்று இனி திரும்பாது:(!

யோ வொய்ஸ் (யோகா) said...

RIP Malaisya Vasudevan....

துவாரகன் said...

மிக நல்ல பாடகர். பல சோதனைகளைத் தாண்டி சாதித்தவர். மலோசியா வாசுதேவன் பற்றி ஷாயி உயிர்மையில் எழுதிய கட்டுரையும் இப்போது ஞாபகம் வருகிறது.

shabi said...

ADUTHATTHU ALBERT PADATHIL VARUM ILAMAYE NALUM NALUM KADHAL PESAVA PADAL (S.J.)NALLA FAST PADAL

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தெங்கிழக்குச் சீமையிலே பாடலின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொள்கிறேன் இன்றிரவு.

இன்றிலிருந்து அவர் விட்டுச் சென்ற குரலில் பிறப்புக் கொள்கிறது வாசுதேவனின் இறவாப் புகழ்.

மலரின் நினைவுகள் said...

இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக கீழ்வரும் இந்தப் பாடல்களைப் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது..


அடி ஆடு பூங்கொடியே - காளி
ஆகாய கங்கை - தர்ம யுத்தம்
ஆகாயம் பூமி - சாமந்தி பூ
ஆனந்த தேன் சிந்தும் - மண்வாசனை
ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள்
என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள்
எழுதுகிறாள் ஒரு - சரணாலயம்
ஹே மைனா - மாவீரன்
இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்
கட்டி வெச்சுக்கோ எந்தன் - என் ஜீவன் பாடுது
கோடைகால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு - நெற்றிகண்
நீலவேணி அம்மா நீலவேணி - சாமி போட்ட முடிச்சு
பாட்டு இங்கே - பூவிழி வாசலிலே
பனிவிழும் பூ நிலவில் -
பருவ காலங்களின் - மூடு பனி
பட்டுவண்ண ரோசாவாம் - கன்னி பருவத்திலே
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல்
பேர் வெச்சாலும் - மைகேல் மதன காம ராஜன்
பூவே இளைய பூவே (எனக்குத்தானே) - கோழி கூவுது
பொத்துகிட்டு ஊத்துதடி - பாயும் புலி
சரியோ சரியோ நான் காதல் - என் கிட்ட மோதாதே
சிங்காரி ப்யாரி - அதிசய பிறவி
தண்ணி கருத்திருக்கு - இளமை ஊஞ்சலாடுகிறது
வா வா வசந்தமே - புது கவிதை
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்
ஏ ராசாத்தி ரோசா பூ - என் உயிர் தோழன்
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள்
பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை

மா சிவகுமார் said...

மலேசியா வாசுதேவனுக்கு சிறப்பான இசை அஞ்சலியை! தொகுப்பின் பாடல்கள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவரது நினைவுகளை மீட்டின.

பல்லாயிரக் கணக்கான உள்ளங்களை மகிழ்வித்த அவரது நினைவு என்றென்றும் நம்மிடையே வாழும்.

எம்.எம்.அப்துல்லா said...

:((


(அண்ணா, வாசு சாரின் வயது 67.இதை மட்டும் திருத்திக்கங்க)

geethappriyan said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு கூட சிறந்த பிண்ணணி பாடகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இவருக்கு தேசிய விருது கிடைக்காதது கீழ்தரமான அரசியல் கூட்டுச்சதியே. தமிழ் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரும் இழப்பு, நல்ல குணச்சித்திர நடிகரையும் நாம் இழந்துவிட்டோம்.

கானா பிரபா said...

Prabhu Rajadurai said...

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்...சிதம்பரம் ஜெயராமனின் குரலில் அப்படியே அச்சுக்கு அச்சாக பாடிய ‘ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!’ தவிர்த்து மலேசியா வாசுதேவனுக்கு அஞ்சலியா? //

அந்தப் பாடலை இப்போது இணைத்திருக்கிறேன்


Anonymous said...

பிரபா அண்ணா, நடடா ராஜா மயில காளை ய விட்டுடிங்கள் !//

அந்தப் பாடல் முன்னர் என்னிடம் இருந்தது இப்போது தேடினேன் கிட்டவில்லை :(

gopalv1958 said...

Poongaaththu thirumbaadhu dhaan. Aanaal Pudhukkavidhaiyum ezhudha mudiyaadhey !. Aam, enakku migavum pidiththa M.V. paattu: "Ezhudhugiraal oru pudhukkavidhai vanna iru vizhiyaal indha poonkodhai".
Negizhchiyudan,
V. Gopalakrishnan, Coimbatore.

ம.சங்கர் said...

"ஒரு மூடன் கதை சொன்னால் என் கதையும் அதுதான் இது காதல் தெய்வீகம் அட போடா" இந்த பாடலையும் சேர்த்துகொள்ளவும்.

ம.சங்கர் திருனெல்வேலி

anna said...

மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்களை கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் ரசித்து..சிலாகித்த நாட்கள் பல..ஆனால் அவரது மறைவைப்பற்றி நண்பர்களுடன் பேச...நினைவுகூற... இசைஅஞ்சலி செலுத்த முடியவில்லையே எனும் தீராத ஆதங்கத்தை தீர்த்தது தங்கள் நினைவஞ்சலி! 'இதயத்தில் ஒரு இடம்' என்ற படத்திலிருந்து' காலங்கள் மழைக்காலங்கள்' என்ற பாடலை இந்த இசை அஞ்சலியில் இணைப்பீர்களா?

அ. சாதிக் அலி said...

மலேசியா வாசுதேவனுடைய நினைவு பதிவு என்னை மனம் நெகிழ வைத்து விட்டது... அவருக்கென்று தனி ஸ்டைல், தனி குரல்.... மிக்க நன்றி ரேடியோஸ்பதி...