"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு. புல்லாங்குழல் மெல்ல மெல்லத் தனியாவர்த்தனம் கொடுத்துப் பாடலைக் கேட்கத் தயார்படுத்த ஒரு சில வயலின்கள் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு தொடர பின்னணியில் கீபோர்ட் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும். பாட்டு முழுக்க ஒற்றை நோட்டிலேயே பயணிக்கிறது.ஜானகியின் குரல் தனக்கு மட்டுமே கேட்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாடுமாற்போல கீழ்ஸ்தாயில் ஆரம்பித்து அதே அலைவரிசையில் 4.34 நிமிடங்களையும் தொட்டுச் செல்வார். மேற்கத்தேய வாத்தியங்களோடு கிராமியத்தனமே சுத்தமாக இல்லாமல் ஒரு நகர்ப்புற மங்கையின் உணர்வுகளாகப் பிரதிபலிக்கும் இந்தப் பாடலுக்கு வயசு 31. ஆனால் இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு. இந்தப் பாடலுக்கு இன்னார் தான் என்று இறைவன் எழுதி வைத்திருப்பான் போல, எஸ்.ஜானகியைத் தவிர்த்து மற்றைய பாடகிகள் பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் எல்லாரையும் ஓரங்கட்டி விட்டுக் கடைசிச்சுற்றிலும் ஜானகி தான் பொருந்துகிற அற்புதம். மேல்ஸ்தாயில் ஆர்ப்பாட்டம் பண்ணும் பாட்டுக்களாகட்டும் இம்மாதிரிக் காதுக்குள் கிசுகிசுக்கின்ற கீழ்ஸ்தாயி ஆகட்டும் எஸ்.ஜானகி தான் சூப்பர் ஸ்டாரிணி போல.
சில பாடல்களை இந்த நேரத்தில் தான் கேட்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வதுண்டு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் சுதந்திரமாக என் செவிகளுக்குள் நடமாடிச் செல்லும் சுதந்திரத்தைக் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
இயக்குனர் பாரதிராஜாவுக்கும் சில பாடல்களுக்கும் அப்படி என்ன பெரும் பகையோ தெரியவில்லை. இவரின் இசையில் வந்த படங்களில் கிழக்கே போகும் ரயில் படத்திற்காக "மலர்களே நாதஸ்வரங்கள்", நிழல்கள் படத்திற்காக "தூரத்தில் நான் கண்ட உன் முகம்", வேதம் புதிது படத்திற்காக "சந்திக்கத் துடித்தேன் பொன்மானே" என்று மெட்டுப் போட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாடல்களைத் திரையில் வராமல் கட் போட்டு விடுவார். அந்த வரிசையில் அலைகள் ஓய்வதில்லை திரைக்காக இசையமைத்த "புத்தம் புதுக்காலை" பாடலும் சேர்ந்து விடுகின்றது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியில் (ராதா அறிமுகக் காட்சி என்று நினைக்கிறேன்) கடற்கரை மணற்பரப்பில் டேப் ரெக்கார்டர் சகிதம் ராதா இருக்கும் வேளை இந்தப் பாடலின் மெலிதான இசை வந்து போகிறது அனேகமாக அந்தக் காட்சியில் தான் "புத்தம் புதுக்காலை" ஆரம்பத்தில் ஒட்டியிருக்கலாம்.
இந்த அதியற்புதமான பாடலைக் கழற்றி விட்டு "வாடி என் கப்பக்கிழங்கே" சேர்த்த பாரதிராஜாவை என்ன செய்யலாம்? பாரதிராஜா ஒருபக்கம் இருக்க, இந்தப் பாடலை அணுவணுவாக ரசித்து மெட்டுப் போட்டு முத்துமாலையாக்கிய இசைஞானி இளையராஜாவின் உணர்வலைகள் எப்படி இருக்கும்? சரி அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் வரவில்லை, வேறு ஒரு படத்திலாவது இதே பாடலைச் சேர்த்திருக்கலாமே? அப்படி வந்த ஒரு பாட்டுத் தானே இங்கேயும் ஒரு கங்கை படத்தில் "சோலைப் புஷ்பங்களே" என்ற இன்னொரு முத்து. 30 வருஷங்களுக்குப் பின்னர் "Paa" ஹிந்திப் படத்தின் ஆரம்பக் காட்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடும் ஒரு சின்ன கோரஸ் பாட்டுக்கு மட்டும் வந்து தலைகாட்டிப் போகிறது இந்தப் பாட்டின் மெட்டு.
மூலப்பாடலைக் கேட்க
"Paa" ஹிந்திப்படத்தில் வந்த மீள் கலவையைப் படத்தில் இருந்து பிரித்துக் கொடுத்திருக்கிறேன்
"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாடலை தாரா என்றொரு ரசிகை பாடி அதை இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார், கேட்க இதமாக இருக்கிறது அந்த மீள் இசையும் அவரின் முயற்சியும்
|
28 comments:
யப்பா.....அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டேன் ! ;))
அனுபவிச்சேன் தல மிக்க நன்றி ;)
31 வருஷம்..!!! இசை தெய்வமே ! ;)
அந்த ரசிகையின் குரலும் அருமை தல ;)
//"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு//
:)
எப்போதைக்குமான ராஜாவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.பகிர்தலுக்கு நன்றி.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலின் சிறப்பை குறிப்பிட்டு, பிற பாடல்களை குறிப்பிடாமல் விட்டோமேயானால் பிற அழகிய அற்புத பாடல்கள் கோபித்து கொள்ளும். அந்த அளவு பாடல்களுமே அற்புதங்கள் (வாடி என் கப்பங்கிழங்கை தவிர) அருமையான இசை பதிவு.
//புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு//
வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்களின் வரிகளில் முடிந்திருக்கிறது! சூப்பர் பாஸ் :) டெஸ்க்டாப்ல் சில பாடல்கள் - தேவைப்படும் தருணங்களில் என்னை புதுப்பித்துக்கொள்ளவேண்டி - அதில் இதுவும் ஒன்று ! :)
”புத்தம் புது காலை” எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் பாடல். ”சோலை புஷ்பங்களே” பாடலும் இனிமையான பாடல். பகிர்தலுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி தல கோபி,
மிக்க நன்றி லேகா
வாங்க தமிழ் உதயம்,
நீங்க சொன்னது போல அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஒவ்வொரு பாடல்களையும் சிலாகித்துப் பேசவேண்டும். இதுவரை காதல் ஓவியம், இப்போது புத்தம்புதுக்காலை வரை வந்திருக்கேன் ;-)
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
அலைகள்தாம் ஓய்வதில்லையே .. சரி, யார் அந்த இத்தாலியர்?
எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் பாடல்.
நன்றி தல !!
புத்தும் புது காலையின் கதை, புத்தம் புதிதாய் அழகாக இருந்தது!
எப்ப பாடினாலும்/கேட்டாலும், அப்படியே புத்தம் புதிதாய் மனசு பறக்கும்! ஸ்பெஷல் நன்றி கா.பி, இந்தப் பதிவுக்கு!
//எஸ்.ஜானகியைத் தவிர்த்து மற்றைய பாடகிகள் பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் எல்லாரையும் ஓரங்கட்டி விட்டுக் கடைசிச்சுற்றிலும் ஜானகி தான் பொருந்துகிற அற்புதம்//
:)))
தோழனின் ஞாபகங்களும் பேச்சுக்களும் எனக்கு வந்து போகின்றன! :)
//மேல்ஸ்தாயில் ஆர்ப்பாட்டம் பண்ணும் பாட்டுக்களாகட்டும் இம்மாதிரிக் காதுக்குள் கிசுகிசுக்கின்ற கீழ்ஸ்தாயி ஆகட்டும் = எஸ்.ஜானகி//
ரெண்டே வரியானாலும் உண்மை வரிகள்!
Perfecto Analysis!
ஆனால் எப்பமே மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி-ன்னு இருக்க முடியுமா? நடுவில் வந்தாகணும்-ல்ல? அப்ப சுசீலாம்மா முந்திருவாங்க! :)
Wow! What a nice car journey on the Music Highway, one overtaking the other, so pleasantly, without any hatred! Pure fun & happiness!
//இந்த அதியற்புதமான பாடலைக் கழற்றி விட்டு "வாடி என் கப்பக்கிழங்கே" சேர்த்த பாரதிராஜாவை என்ன செய்யலாம்?//
என் இனிய தமிழ் மக்களே பார்த்துக்கிடுவாங்க! :) நீங்க ஃப்ரீயா விடுங்க! :)
//தனியாவர்த்தனம் கொடுத்துப் பாடலைக் கேட்கத் தயார்படுத்த ஒரு சில வயலின்கள் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு தொடர பின்னணியில் கீபோர்ட் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும்//
தேர்தல் நேரத்தில் தேர்ந்த வரிகள்! :)
//பாட்டு முழுக்க ஒற்றை நோட்டிலேயே பயணிக்கிறது.ஜானகியின் குரல் தனக்கு மட்டுமே கேட்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாடுமாற்போல கீழ்ஸ்தாயில் ஆரம்பித்து அதே அலைவரிசையில் 4.34//
ரொம்ப அனுபவிச்சிக் கேட்டிருந்தா தான் இப்படி எழுத முடியும்! இப்படிப் பின்னூட்டவும் முடியும்! :)
மிகவும் தத்தளிப்பான நேரத்தில், இந்தப் பதிவை எனக்குன்னே போட்டாப் போல இருந்துச்சி! புத்தும் புது காலையின் இதம்...வருடிக் கொடுத்துச் சாந்தப்படுத்தியது! Silence!
எங்களின் சில வருடங்களின் காலைப்பொழுதுகள் இந்தப்பாடலுடன்தான் விடிந்தன.
வருகைக்கு நன்றி ஆயில்ஸ்
வணக்கம் இளா
அந்த இத்தாலியர் பெயரை விழாவில் அவர் சொல்லவில்லை. இளையராஜாவின் இத்தாலி இசை நிகழ்ச்சித் தொகுப்பில் இருக்கும்.
வருகைக்கு நன்றி மகராஜன்
வாங்க கே.ஆர்.எஸ்
இந்தப் பாடலில் எஸ்.ஜானகியின் தனிதுவத்தைச் சொன்னேன். சுசீலாம்மாவோடு ஒப்பீடு எல்லாம் கிடையாது ;)
வருகைக்கு நன்றி பாலராஜன்கீதா
என்னவொரு அற்புதமான ஒற்றுமையாக இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை(புரஹந்த கலுவர, ஆகாச குசும்,.....)இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ள இலங்கை இயக்குனர் பிரசன்ன விதானகேயுடன் அண்மையில் கதைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலென அவர் இப்பாடலையே குறிப்பிட்டார். இப் பாடல் குறித்து பாதி நாளுக்கும் மேல் பேசிக் கொண்டேயிருந்தோம்.
படம் வெளிவந்தபோது இப் பாடல் அதில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தினமும் ஒரு தடவையாவது இப் பாடலைத் தான் கேட்பது வழக்கம் என்றும், இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சியை இப் பாடல் தனக்குத் தருகிறதென்றும் அவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
ரிஷான்
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ரசித்தேன்
கலக்கல் பகிர்வு ,
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது
ஜானகி அம்மா குரல் , ஆரம்பத்துல வர புல்லாங்குழல் , ரெண்டுல எது இனிமை அதிகம்னு சாலமன் பாப்பையா கிட்ட பட்டி மன்றம் போட சொல்லலாம்
Dear Prabha,
I donot know how many times i have listened to this song in the past 2 -3 days. My wife is complaining that I have stopped listening to other songs. Everytime I listen to this song, it throws something new... wonderful composition by Ilayaraja sir.... true Maestro.. thanks again for sharing sunch a g8 melody.
Venki
அன்பின் வெங்கி,
உங்களின் நிலையில் தான் இந்தப் பதிவைப் போட்ட நாட்களில் அதிகப்படியாகத் தித்திக்கக் கேட்டேன் நானும் ;-) அதுதான் ராஜாவின் மந்திரம்
நண்பரே, நல்ல தகவலை பகிர்ந்து கொண்டீர்கள். புத்தம் புது காலை பாடல் படத்தில் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வி என் இளம் வயதிலிருந்தே எழுந்த ஒன்று. ஆனால் இது பற்றி நான் பகுப்பாய்வு செய்ததில் கிடைத்த காரணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.அந்த பாடல், கதாநாயகியை அறிமுகம் செய்யும் வகையில், கதாநாயகியின் இரண்டாவது அல்லது மூன்றாவது காட்சிக்கு வரவேண்டிய பாடல். அப்படி ஒரு பாடலைபாடிய பாடகி, பாட்டுவாத்தியாரம்மாவிடம் போய், கர்ண கொடூரமாக பாடினால், லாஜிக் இடிக்கும் அல்லவா?. கதாநாயகி அவமானப்பட்டால் தானே கதை. அதனால் தான் அந்த பாடலை எடுத்துவிட்டார்கள்.
அது தான் காரணம்.
வணக்கம் அன்பின் சிதம்பரநாதன்
உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஆனால் நான் சொன்ன காட்சியோட்டத்தைப் பார்த்தால் புரியும் அதில் ராதா பாடுவது போல் அல்லாமல் ரேப் ரெக்காடரில் இருந்து வருவது போலத் தான் காட்சி. அவர் பாடுவது போல் அல்ல.
திரு கானா பிரபா, நீங்கள் சொன்னது போல் அந்த காட்சியில் அந்த பாடலை எதிர்பார்ப்பது யார்க்கும் பொதுவானது. ஆனால் டேப்ரிக்கார்டரில் அந்த பாடல் ஒலிப்பதைவிட, டைட்டில் கார்டில் அந்த பாட்டை போடலாம். கதாநாயகி பாடுவது போல் தான் அந்த பாடலை இசை அமைக்கும் போது அமைத்திருக்க வேண்டும். ஆனால் அது கதாநாயகியின் இசை அறிவிற்கு (அறிமுக நிலையில் தான் அந்த பாடல் பொருத்தமாக இருக்கவேண்டும். சாதாரணமாக இந்த வகைப்பாடல்கள் கதாநாயகியை அறிமுகம் செய்யும் வகையில் தான் இடம்பெறும்)பொருத்தமாக இல்லாததால் கடைசி நேரத்தில் அதை தவிர்த்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த பாடல், இளையராஜாவின் அற்புத பாடல்களில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புத்தம் புது காலை மெட்டிலேய "ஆப்பிரிக்காவில் அப்பு" என்ற படத்தில் "சின்னஞ்சிறு யானை" என்றொரு பாடல் உள்ளது. அதையும் பாடியது ஜானகி தான்..இசையமைப்பாளரும் ராஜா தான்..
//சில பாடல்களை இந்த நேரத்தில் தான் கேட்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வதுண்டு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் சுதந்திரமாக என் செவிகளுக்குள் நடமாடிச் செல்லும் சுதந்திரத்தைக் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. //
உண்மை தான், சில பாடல்களை சில நேரங்களில் தான் கேட்கப் பிடிக்கும். இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனசு ஆனந்தம் அடையும்.
இந்தப் பதிவுக்கு நன்றி பிரபா :-))
amas32
அருமையான முன்னுரை. இந்த பாடல் என்ன ராகம்?
Post a Comment