Pages

Thursday, January 6, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்

தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் "அம்ருதா" என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகின்றேன்.

00000000000000000000000000000000000000

54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி)
படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அழைக்கப்படுகின்றார். இது சமீபத்தில் நடந்த ஒரு அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தின் பின்னால் இருந்தது பென்னி தயாள் என்ற பாடகனை அறிமுகப்படுத்தி வேலை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சாரும் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பண்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளன் திரைமறை காயாக இருந்து 1992 இல் வெளிப்பட்ட போது ஆரம்பித்தது. இன்றும் தொடர்கின்றது.

1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ரோஜா" படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய
"காதல் ரோஜாவே" ஒரு பாடல் மட்டுமே அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான குரலாக ஒலிக்கின்றது. ஏற்கனவே
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பாடிக் கொண்டிருந்த மின்மினி என்ற பாடகியை எல்லைகள் கடந்து தெரியவைத்ததும், விஜய் என்ற பெயரில் முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடி வந்த உன்னிமேனன் என்ற பாடகனை எல்லா ரசிகர் முன்னும் அறியவைத்ததும், பத்து வருஷங்களுக்கு மேல் தமிழில் பாடாமல் ஓய்ந்திருந்த பாடகி சுஜாதாவை மீள இயங்கவைத்ததும், மும்பையை கடந்தால் யார் இவர் என்று கேட்க வைத்த ஹரிஹரன் குரலை தேசங்கள் கடந்தும் ஒலிக்கவிட்டதும் என்று ஆரம்பித்தது ரஹ்மானின் இசைப்பயணம். பொதுவாகவேமிகவும் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் வாய்ப்பு, அதுவும் பேர் போன ஒரு தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா, நாடறிந்த இயக்குனர் மணிரத்னம் இப்படியாக மிகவும் சவாலாக வந்த அந்த இசைப்பணிக்கு வேறு யாரும் என்றால் நிச்சயம் இவ்வளவு புதுக் குரல்களைப் போடுவதைக் கொஞ்சம் யோசித்திருப்பார்கள். ஆனால் அங்கே தான் ரஹ்மானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. அதுவரை இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம். ஒரு ட்ரெண்ட் செட்டராக ரஹ்மான் அடையாளப்படும் போது வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர். குறிப்பிட்ட பாடகர்களைத் தவிர்த்து வேறும் புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்துவது ரஹ்மான் காலத்துக்கு முன்னரும் இருந்திருக்கின்றது. ஆனால் ரஹ்மானுக்குப் பின்னான போக்கைப் பார்த்தீர்களானால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்கின்றது என்பதை இனங்காணலாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஐந்து பாட்டென்றால் ஐந்து பாடகர்களோ, இல்லாவிட்டால் ஒரு பாட்டையே இரண்டு மூன்று பாடகர்களோ பாடுவது சர்வசாதாரணம். இந்த மாற்றத்தின் விதையைப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அது மிகையில்லை. டிவிக்களில் வரும் அறிமுகப் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த சப்தஸ்வரங்கள், ராகமாலிகா, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டும் பாடகர்களில் பலருக்கு இப்போதெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது எட்டும் கனியாகி விட்டது. ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் பரவலாக இல்லாத காலத்தில் ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு நடுவராகப் போன ரஹ்மானில் கண்ணில் பட்டார் அந்த நிகழ்ச்சியில் பாடிய ஹரிணி. பின்னர் நிலாக் காய்கிறது என்று ஆரம்பித்தது ஹரிணியின் இசையப்பயணம்.

ஹோரஸ் கொடுக்கும் பாடகர்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அந்த எல்லையைக் கடந்து பெரும் பாடகராகச் சாதிக்க முடியாத காலமும் இருந்தது. ரஹ்மானின் காலத்தில் தான் இந்த விஷயத்திலும் மாறுதல் கண்டது. இவரின் பாடல்களுக்கு ஹோரஸ் கொடுத்த பலர் பின்னாளில் முன்னணிப் பாடகர்களாக வரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ரஹ்மானின் பாடல்கள் வரும் இசைத் தட்டுக்களைக் கவனித்தால் வெறுமனே முன்னணிப் பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இருக்காது. கூடவே அந்தப் பாடல்களுக்குப் பயன்பட்ட வாத்தியக் கலைஞர்கள், மற்றும் ஹோரஸ் பாடிய பாடகர்கள் பெயர் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது என்னதான் பெரிய லிஸ்டாக இருந்தாலும் கூட.

ரஜினி என்றாலும் கமல் என்றாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணிப் பாடகர்களின் பின்னணிப் பாடல் தான் ரசிகர் மனதில் ஒட்டும் என்ற நினைப்பை மாற்ற வைத்தது "முத்து" படத்தில் உதித் நாராயணன் பாடிய "குலுவாயிலே" பாட்டும் "படையப்பா" படத்தில் வந்த "மின்சாரப் பூவே" என்ற பாடலும். இந்தியன் கமலுக்கு போட்ட "டெலிபோன் மணி போல்" ஹரிஹரன் குரல்கூட அளவாகப் பொருந்தியதே.

சுரேஷ் பீட்டர்ஸ் குரலில் அமைந்த "சிக்கு புக்கு ரெயிலே" பாட்டு கொடுத்த புகழ் சுரேஷை ஒரு இசையமைப்பாளனாகவே மாற்றி அழகு பார்த்த்து. ஜென்டில்மேனில் "உசிலம்பட்டி பெண்குட்டி" முத்துப் பேச்சி பாடிய சாகுல் ஹமீத்தின் வித்தியாசமான குரலைக் கூட ரஹ்மான் இசையில் அறிமுகப்படுத்த முடிந்தது, தொடர்ந்து அவர் வெறும் வாத்திய இசையில்லாமல் ஹம்மிங்கோடு அமைந்த "ராசாத்தி என்னுசிரு" பாட்டில் கூட வசீகரித்தார். சாகுல் ஹமீத்தின் நட்பு ரஹ்மான் திரைக்கு வரும் முன்னரே அவர் இசையமைத்த தீன் இசைமாலை போன்ற ஆல்பங்களில் ஆரம்பித்தது. அந்த நட்பினை முறிக்காது ஹமீதின் குரலை திரையிலும் தொடர்ந்தார் ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த திரைப்பாலம் ஹமீதை மற்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவைத்தது. கடல் கடந்தும் இசைப்பயணத்தைத் தொடர்ந்த ஹமீத் துரதிஷ்டவசமாக பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரஹ்மானையும் வெகுவாகவே பாதித்தது.

அனுபமா போன்ற மேற்கத்தேயச் சாயல் கொண்ட குரல்களுக்கு "கொஞ்சம் நிலவு" (திருடா திருடா) போன்ற பாடல்கள் களம் அமைத்து போல சுவர்ணலதா போன்ற பாடகிகளுக்கு "போறாளே பொன்னுத்தாயி" போன்ற கிராமிய மெட்டுக்களும் கைகொடுத்து தேசிய விருது வரை அழைத்துச் சென்றது.

திரையிசைக்கு பாலமுரளி கிருஷ்ணா போன்ற முழு நேர சங்கீத வித்துவான்களின் அறிமுகம் புதிதல்ல. ஆனால் ஜேசுதாஸ் போன்று கர்னாடக மேடைகளிலும் திரையிசையிலும் சமகாலத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் வண்ணம் பாடகர்கள் அமையாதிருந்தனர். அந்தப் போக்கினையும் ரஹ்மானின் காதல் திரைப்படம் உன்னி கிருஷ்ணன் மூலம் மாற்றிக் கொண்டது. ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் "என்னவளே அடி என்னவளே" பாடலுக்கும் "பவித்ரா" படத்தில் "உயிரும் நீயே" பாடலுக்கும் பாடியதன் மூலம் உன்னிகிருஷ்ணன் தேசிய விருது வரை அங்கீகாரம் பெற்றதோடு உன்னிகிருஷ்ணனுக்கு சபா மேடைகள் தாண்டி ஒலிப்பதிவுக் கூடங்களையும் தினமும் செல்லவைத்தது. கர்நாடக சங்கீதச் சாயல் மட்டுமன்றி ஜீன்ஸ் போன்ற படங்களில் இளமை துள்ளும் பாடல்களுக்கும் உன்னி கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஹ்மான்.
அந்த வகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது நித்யஶ்ரீயின் "கண்ணோடு காண்பதெல்லாம்" ஜின்ஸ் படப்பாடல்.
நித்யஶ்ரீ போன்ற திரையிசைச் சாயல் கலக்காத அக்மார்க் சபா மேடைக் குரலை ஜீன்ஸ் போன்ற மெகா பட்ஜெட் படத்தில் நுழைத்தது
ரஹ்மானின் சாமர்த்தியம்.

சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு நடுவராகச் சென்ற ஶ்ரீநிவாஸ் அந்த நிகழ்ச்சியில் பாடிய சின்மயியின் குரலை ஞாபகம் வைத்திருந்து
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலுக்கு புதுக்குரலைத் தேடியபோது ஶ்ரீநிவாஸ் சின்மயியை பரிந்துரைக்கிறார், சின்மயி என்ற திரையிசைப்பாடகி பிறந்தார். அது போல் அப்துல் ஹமீது நடாத்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன் திறமையைக் காட்டிய முகேஷுக்கு ரஹ்மானின் "கண்களால் கைது செய்" அறிமுகம் கொடுக்கின்றது. திறமை எங்கிருந்தாலும், அதை யார் வழிமொழிந்தாலும் அதனைப் பாவிக்கும் ரஹ்மானின் திறனுக்கு இவை சில உதாரணங்கள்.

ரஹ்மான் தமிழுக்கு அறிமுகப்படுத்திய வட நாட்டுக்குரல்கள் விளைவித்த மொழிச் சேதத்தையும் கண்டிக்க இசை ரசிகர்கள் தவறவில்லை. உதித் நாராயணன், மதுஶ்ரீ, சாதனா சர்க்கம் போன்ற பாடகர்களின் அந்நியமான தமிழை ரஹ்மானின் இசை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் குரல்களில் அமைந்த நல்ல பல பாடல்களை ஒதுக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானின் அறிமுகத்தில் வந்த கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற குரல்களும் சரி சங்கர் மகாதேவன், கவிதா சுப்ரமணியம், ஹரிஹரன் போன்ற ஏற்கனவே அறிமுகமாகி
ரஹ்மானின் பாடகளால் உச்சத்துக்கு சென்றவர்களும் சரி அந்தக் குறையையும் தீர்த்து விட்டார்கள்.

வட நாட்டுக் குரல்களை தமிழில் அழைத்து அறிமுகப்படுத்திய ரஹ்மானின் இன்னொரு சாதனை தமிழில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரையும் ஹிந்தித் திரையுலகிலும் வெளிக்காட்டி நின்றமை. ஶ்ரீநிவாஸ், கார்த்திக், பென்னி தயாள், சின்மயி போன்ற பாடகர்கள் பலர் ஹிந்தியிலும் தடம் பதிக்க ரஹ்மானின் பாடல்கள் களமாக அமைந்திருந்தன. ஹிந்தித் திரையுலகில் கூட மரபு ரீதியாக அமைந்த பாடகர்கள் வட்டத்திலிருந்து விலகி புதுப் புதுக் குரல்களின் தேடல் அமைந்து வருகின்றது. தமிழிலும் சரி ஹிந்தித் திரையுலகிலும் சரி ரஹ்மானின் அறிமுகத்தில் வெளிக்கொணரப்பட்ட பாடகர்களை ஒரு கட்டுரைக்குள் அடக்கிப் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அவரால் அறிமுகப்படுத்திய பாடகர் பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் ரஹ்மான் என்ற இளைஞன் தன் திறமையை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்தது போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இப்படி இருப்பார்கள் என்ற அவர் மனதுக்குள் எண்ணியிருக்கலாம். அதுவே பின்னாளில் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பை அவருள் விதைத்திருக்கலாம்.

முதல் படம் கொடுத்த வெற்றிப் போதையில் படங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு இசையமைத்துத் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மிகவும் நிதானமாக நடைபோடும் ரஹ்மானால் தான் இன்று ஆஸ்கார் வரை செல்ல முடிந்தது. பெரும்பாலும்
ரஹ்மானின் சாகித்யத்தையும் புதிய முயற்சிகளையும் காட்டுவதற்கேற்ற களங்களாகத் தான் அவர் ஒப்புக் கொண்ட படங்கள் அமைந்தன.
அதனால் தான் கிராமியப் பின்னணியில் அமைந்த படங்களும் சரி நகர வாழ்வியலோடு அமைந்த கதைக்களனாயினும் சரி புதுப் புதுக் குரல்களைத் தன் மெட்டுக்களுக்குப் பயன்படுத்தி குறித்த அந்தத் திரைப்படங்களின் சாயத்தை வேறுபடுத்திக் காட்டினார். காலாகாலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடல்களின் குரலோசைக்கு ரஹ்மானால் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இன்று அவருக்குப் பின் தொடரும் இசையமைப்பாளர்கள் இப்போது புதுக்குரல்களைத் தேடும் பார்முலாவுக்கு வித்திட்டதும் ரஹ்மான் உருவாக்கிய இன்னொரு பாணி தான்.





அம்ருதா ஏப்ரல் 2009 இல் வந்த என் கட்டுரையின் மூலம்



21 comments:

S Maharajan said...

அருமையான கட்டுரை தல!
இசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Abarnaa said...

மிகவும் அருமையாக இருக்கின்றது கட்டுரை. வாழ்த்துக்கள். பல தகவல்களை இலகு நடையில் இணைத்திருப்பது அருமையிலும் அருமை.

கானா பிரபா said...

மிக்க நன்றி மகராஜன்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி அபர்ணா

Ramesh said...

அருமை. சில விடயங்கள் தெரிந்தது இருந்தாலும் பல தகவல்கள் புதுமை. நல்லா இருக்கு வாசிக்கும்போது. பிடித்தவர் என்பதைத்தாண்டி எழுத்துநடை ரசனையைக்கூட்டி நிக்குது.
நன்றி. தொடருங்கள்

Subankan said...

அருமையான கட்டுரை அண்ணா :)

ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பல குரல்களுக்கு ரசிகன் நான். இசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Denzil said...

இளையராஜா - ரஹ்மான் என்ற அர்த்தமில்லா சர்ச்சைகளுக்கு நடுவில் ரஹ்மானுக்கு அர்த்தப்பூர்வமான வாழ்த்துரை பிரபா. இசையல்லவா கலைஞர்களை விடப்பெரியது?

sinmajan said...

தகவல்களை அருமையாக ஒருங்கிணைத்திருக்கிறீர்கள்.அருமையான கட்டுரை கானா அண்ணா..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காபி
அடிப்படையில் பெரும் ராஜா ரசிகரான நீங்க, இப்படிக் காய்தல் உவத்தல் இன்றி, ரஹ்மானைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தர முடியும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு!

இசையை, இசையாக அணுகினால் மட்டுமே இது சாத்தியம்!

சுசீலாம்மா/ஜானகி, ராஜா/ரஹ்மான்-ன்னு கட்சி பிரிவோர்கள், ஒன்றில் இருந்தா இன்னொன்றில் வெளிப்படையாப் புகழக் கூடாது என்றே "கொள்கை" வகுப்பார்கள்! :)

ஆனால், நீங்கள் மாறுபட்டவர்! இசைக் கூறுபட்டவர்! அதில் வீறுபட்டவர்! முருகனருளால் நீடு பீடு வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம்//

ராஜா கட்டிய கோட்டையை உடைக்க முடியும்-ன்னு எழுத வல்லவர்கள் மத்தியில்...
இசைமுடிச்சை அவிழ்த்து-ன்னு எழுத்தைப் பார்க்கும் போது எவ்ளோ நல்லா இருக்கு! :)
இனிய உளவாக இன்னாத கூறல்...

//வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர்.//

Very Very True!
There are 2 things in thiz world you can never hide
1. Pregnancy
2. Merit
Both will reveal, some way or the other! :)

டக்கால்டி said...

Superb post...
Jai Ho...

கானா பிரபா said...

றமேஸ் , சுபாங்கன்

மிக்க நன்றி ;)

கானா பிரபா said...

வணக்கம் Denzil


ராஜா-ரஹ்மான் கோஷ்டிச் சண்டைபிடிப்பவர்கள் இசை ரசிகர்களே அல்லர் என்பது என் கருத்து. மிக்க நன்றி உங்கள் வருகைக்கு


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சின்மயன்

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல ;)

அப்படியே தல கே.ஆர்.எஸ்க்கு ரீப்பிட்டிக்கிறேன் ;)

Thamiz Priyan said...

நல்ல கட்டுரை! உங்க தராசு ஏன் தான் இப்படி ஓவரா நடுநிலையிலேயே இருக்கோ ?.. ;-)

கானா பிரபா said...

வாங்க கே.ஆர்.எஸ்

நானும் நீங்களும் ஒரே கட்சி ஆச்சே, திறமை எங்கிருந்தாலும் போற்றுவோம் வணங்குவோம் , மிக்க நன்றி தல

வருகைக்கு நன்றி நண்பர் டக்கால்டிக்கு

தல கோபி மிக்க நன்றி ;)


தமிழ்பிரியரே

நீர் ஏதும் உள்குத்து வச்சீரா

நெல்லைக் கிறுக்கன் said...

தல - தீவிர ராஜா ரசிகரான உங்களிடமிருந்து வந்திருக்கும் இந்தக் கட்டுரை உங்கள் பரந்த மனதுக்கு சான்று.
ராஜா, ரஹ்மான் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழ் இசைத் தாய் உலக இசைக்குத் தந்த இரு வைரங்கள் என்ற உணர்வு தமிழ் ரசிகர்களுக்கு வேண்டும்.

Jayadev Das said...

ஶ்ரீநிவாஸ் என்று தட்டச்சு செய்ய முடியும் போது //மது சிறீ,நித்யசிறீ //மதுஸ்ரீ, நித்யஸ்ரீ என்று கொண்டு வர என்ன கடினமோ! நல்ல பதிவு.

கானா பிரபா said...

மிக்க நன்றி நெல்லைக்கிறுக்கர் நண்பா

ஜெயதேவ்

சிறீ ஐ ஶ்ரீ ஆக மாற்றிவிட்டேன் நன்றி ;)

SurveySan said...

good one.

all-in-all said...

super :)