Pages

Saturday, January 31, 2009

நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி


"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you" நடிகர் நாகேஷ் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காக

தற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது தோழில் கையால் அணைத்தவாறே போஸ் கொடுத்து விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.

திருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவையும், ஒலி வடிவையும் இங்கே தருகின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.



வானொலி: வணக்கம் நாகேஷ் சார்
நாகேஷ்: வணக்கம் சார்

வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு

வானொலி:
நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்
நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க

வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.
நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய

வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன், சார்.
உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?


வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.

வானொலி: நீங்கள் நடித்த முதல் படம்?
நாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்

வானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.

இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.

வானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.

ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.

வானொலி: உங்க குறிக்கோள் என்ன?
நாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்தர் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.

இப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.

வானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?

We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.

வானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

வானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாகேஷ்: நண்பரே! ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.

"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you

20 comments:

Anonymous said...

Nandri Kanapraba sir,

Nallathoru petti, Avarathu pirival kudumbathrukku SPB saarbakavum Covai SPB rasikarkal saabakavum aaltha anuthabangal. Ennodaya olikooppu viraivil varum.

Anonymous said...

நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் நாகேஷ்! ஒலிப்பேட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து படித்தேன்.
அளித்ததற்கு நன்றி கானாப்ரபா!

M.Rishan Shareef said...

அருமையானதொரு பேட்டி. இயல்பான ஆனால் அவரின் மேலொரு மதிப்பினைத் தோற்றுவிக்கும் படியான பதில்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பர் கானா பிரபா !

ஜோ/Joe said...

அருமையான பேட்டி!

மகா கலைஞனுக்கு அஞ்சலி!

தமிழன்-கறுப்பி... said...

அற்புதமான நடிகர், ரொம்ப எளிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதை நிரூபிக்கிறமாதிரி இருக்கிறது பேட்டி...

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

G.Ragavan said...

மறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷ் அவர்களின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

நல்லதொரு பேட்டியைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

கோபிநாத் said...

பதிவுக்கு நன்றி தல..

\நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you"\\

மேன்மக்கள் மேன்மக்களே!!

அஞ்சலி ;(

ஹேமா said...

பிரபா,பிரிவு இழப்பு மனம் கனத்தாலும் இறைவனின் கைகளின் மனிதனின் வாழ்வு.நாகேஷ் அவர்களின் முகம் மறக்கவே முடியாத முகம்.தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல் அவர் நடிப்பின் சிகரம்.நாமும் அமைதி கொண்டு,அவரின் ஆத்மா சாந்திக்கும் ஆண்டவனை
வேண்டிக்கொள்வோம்.

ஒலிப்பேட்டி அவரது இயல்பின் நல்ல குணத்தைப் பிரதிபலிக்கிறது.
உங்களுக்கும் நன்றி பிரபா.

Unknown said...

அற்புதமான மனிதர்... நன்றி அண்ணா நல்ல பதிவு..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு நல்ல கலைஞனுக்கு அஞ்சலி அவனைப் புரிந்து கொள்வதே!
பேட்டி அதற்கு வழி செய்தது கா.பி.அண்ணாச்சி! மிக்க நன்றி!

ஆன்மீகப் படங்களில் நகைச்சுவை கலந்து மக்களுக்குக் கொண்டு சென்று வெற்றியும் பெற முடியும் என்பதைத் திருவிளையாடல் தொடங்கி பல படங்களில் காட்டியவர் நாகேஷ்! வாழ்க!!

Prapa said...

சும்மா அசத்துறீங்க சார் நன்றி பிரபா அண்ணா .
நாகேஷ் பற்றி எனக்கு இன்னும் தகவல் வேணும் தருவிங்களா ?

pudugaithendral said...

உங்களுடைய வித்தியாசமான நினைவஞ்சலி பதிவிற்காகத்தான் காத்திருந்தேன்.

அருமையான பதிவு பாராட்டுக்கள்.

நாரத முனி said...

மற்ற மொழிகளை விட தமிழுக்கே நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நமக்கு அறிய வைத்த நாகேஷ் இன்று நம்முடன் இல்லையென நினைக்கும் பொழுது மனம் மிகுந்த துயரம் அடைகிறது

Unknown said...

அருமையான மனிதன், அற்புதமான நடிகன் - நாகேஷ் அவர்களுக்கு என் அஞ்சலிகள் ...

சந்தனமுல்லை said...

உன்னத கலைஞனுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்...

பகிர்ந்தமைக்கு நன்றி கானாஸ்!

பரத் said...

Thanks for sharing Prabha!!

Anonymous said...

கானா பிரபா,

"A smile wiped out from earth’s face" என்று ஓர் ஆங்கில இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார்கள். திருவிளையாடல் படத்தின் வெற்றியில நாகேஷுக்கும் பெரும் பங்கிருந்த்தை யாரும் மறுக்கமாட்டார்கள். படத்தின் வெற்றி விழாவிற்கு நாகேஷ் அழைக்கப்படவில்லை. வாழ்ந்தகாலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
கலையுலகினராலும் அரசுகளாலும் வஞ்சிக்கப்பட்ட கலைஞர் அவர். கலாநிதி ஆ.சி.கந்தராஜாவின் "தமிழ் முழங்கும் வேளையிலே..." நூலிலும் நாகேஷின் செவ்வியை வாசித்த நினைவு. பதிவுக்கு நன்றி.

butterfly Surya said...

அருமையான பதிவு. நன்றி கானாபிரபா.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?


அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.



உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

அசால்ட் ஆறுமுகம் said...

கண்முன் இருந்து சொன்னது போல் இருந்தது! கொண்டு வந்தமைக்கு நன்றி!