தமிழில் வெளிவந்த முதல் முப்பரிமாணத் (3D) திரைப்படம் என்ற பெருமையைப் பெறுவது "மை டியர் குட்டிச்சாத்தான்". மலையாளத்தின் மிகப்பெரும் தயாரிப்பாளர் அப்பச்சனின் தயாரிப்பில் ஜிஜோவின் இயக்கத்தில் வெளி வந்தது. டிவிடி வடிவில் அண்மையில் இப்படம் எனக்குக் கிடைத்ததும், இந்த சாதனைப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
மூன்று ஏழைச் சிறுவர்களுக்கு வாய்க்கும் குட்டிச் சாத்தானின் நட்பும், அந்தக் குட்டிச் சாத்தான் மூலம் இவர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவற்றையெல்லாம் சாதிக்கின்றார்கள், இறுதியில் இந்தக் குட்டிச் சாத்தானை உருவாக்கிய மந்திரவாதியால் ஏற்படும் ஆபத்து, குட்டிச்சாத்தானின் நிலை என்ன என்பதை மையப்படுத்தியே இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவினை அன்றைய பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கொடுத்திருந்தார். முதல் 3D படத்திற்கு அதிகபட்சம் விட்டலாச்சாரியாவின் படங்களில் வரும் சிறப்பான மாயாஜாலத் தந்திரக் காட்சிகள் போல இப்படத்திலும் இல்லாதது பெரும் குறை. அத்தோடு அசோக்குமாரின் ஒளிப்பதிவு முக்கியமான தந்திரக் காட்சிகளுக்கே பயன்படுகின்றது. இன்னும் அதிகபட்ச காமிரா கைவண்ணத்தையும் கொடுத்திருக்கலாம்.
இசைஞானி இளையராஜாவின் இசையும், வைரமுத்து வரிகளில் இரண்டு பாடல்களோடு மட்டும் ஓய்ந்து விட்டது. ஆனாலும் பின்னணி இசையில் இசைஞானியின் தனித்துவம் இருக்கின்றது. குறிப்பாக வயலின் இசை பல இடங்களில் சோகத்துக்கும், மகிழ்ச்சிக்கும், வியப்புக்கும், விந்தைக்குமாக ராஜாங்கமே நடத்துகின்றது. எனவே தான் இப்படம் வெளியாகும் இசைத்தட்டுக்களிலும் முக்கியமான பின்னணி இசைத் துண்டுகளையும் சேர்த்தே கொடுக்கின்றார்கள்.
மலையாளத்தில் இருந்து ஆரூர் தாஸின் வசனங்கள் தமிழாக்கியிருக்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை சோனியாவும், மற்றைய இரண்டு குட்டிப் பையன்களும், குட்டிச்சாத்தானாக வரும் பையனும் அளவுக்கு அதிகமாகவே சிறப்பாகத் தம் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மற்றைய பாத்திரங்களில் மலையாள மூலப்படத்தின் நெடி அடிக்கின்றது.
"மை டியர் குட்டிச்சாத்தான்'' பட அனுபவம் பற்றி தினத்தந்தி, மாலைமலருக்காக அந்தத் திரைப்படத்தினைத் தமிழில் தயாரித்த்து விநியோகம் செய்திருந்த தயாரிப்பாளர் "கேயார்'' இப்படிச் சொல்கின்றார்.
"அப்பச்சனின் நவோதயா நிறுவனம் ஜிஜோ இயக்கத்தில் மலையாளத்தில் தயாரித்த "குட்டிச்சாத்தான்'' படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு "3டி'' படம். கண்ணாடி போட்டுக்கொண்டு படம் பார்க்க வேண்டும். அந்த தொழில் நுட்பம் நமக்குப் புதியது. இந்த "3டி'' எனப்படும் முப்பரிமாணத் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் எனக்குத் தெரியும்.
நான் திரைப்படக்கல்லூரியில் படித்தது பிலிம் பிராசஸிங் படிப்பு. எனவே, எனக்கு "3டி'' பற்றி கூடுதலாகவே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
"குட்டிச்சாத்தான்'' கேரளாவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதை வாங்கி தமிழில் டப் செய்ய பலர் விரும்பினார்கள். ஆனாலும் அதன் தயாரிப்பாளர் மிகப்பெரிய விலையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். போட்டி அதிகரிக்கவே அவர் விலையைக் கூட்டிக் கொண்டே இருந்தார். அதை வாங்குவதற்கு இளையராஜா, பாலாஜி, ஜீவி போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். விலை ஏறிக்கொண்டே போனதால் சற்று தயங்கினார்கள்.
இந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் அப்பச்சனை அணுகினேன். சந்தித்தபின் அதை வாங்குவதென்று துணிச்சலாக முடிவு செய்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யும் உரிமையை நான் வாங்கினேன். எவ்வளவு விலை தெரியுமா? ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய்! அப்போது, ரஜினி படத்தின் தமிழ்நாட்டு வியாபாரமே நாற்பது முதல் ஐம்பது லட்சம்தான். டப்பிங் பட வியாபாரத்தின் விலை ஒரு லட்சம் தான்.
ரஜினி படத்தைவிட கூடுதலாகக் கொடுத்து ஒரு டப்பிங் படத்தை இவர் வாங்குகிறாரே என்று பலருக்கும் ஆச்சரியம் - அதிர்ச்சி!
முதலில் இந்திரா தியேட்டரை வாங்கிய நான், பிறகு பல தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்படி என் கட்டுப்பாட்டில் இருந்த சத்யம் தியேட்டரில்தான் "மை டியர் குட்டிச்சாத்தான்'' படத்தை வெளியிட்டேன்.
"3டி'' பட தொழில் நுட்பம், தியேட்டர்களுக்கும் புதிது. எனவே, திரையிடும் விஷயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவ்வளவுதான். பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
இருந்தாலும் தைரியமாகவே இந்த விஷயத்தில் இறங்கினேன். முதலில் சத்யம் தியேட்டர். பிறகு ஈகா. சில நாட்களில் தமிழ்நாடெங்கும் திரையிட்டேன்.
1984 தீபாவளிக்கு இப்படம் வெளியானது.
அதே சமயத்தில், "வைதேகிகாத்திருந் தாள்''படத்தையும் வாங்கி வெளியிட்டேன். இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.
"மை டியர் குட்டிச்சாத்தான்'', எனது வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த முதல் பெரிய வெற்றி. எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இருப்பினும் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன. படம் வெளியான நான்கு நாட்களில், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் நாடெங்கும் கலவரம் மூண்டது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. அது என் பட வெற்றியைப் பாதித்தது. பிறகு சமாளித்து வேகமெடுத்தது.
10-வது நாள் இன்னொரு பிரச்சினை. அப்போது சென்னை எங்கும் `மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவியது. "3டி'' படம் என்பதால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். அப்படி நாங்கள் தியேட்டரில் கொடுத்த கண்ணாடி மூலம்தான் இந்த நோய் வருகிறது என்று சிலர் பிரசாரம் செய்தார்கள்! நான் கவலைப்படவில்லை. எல்லா தியேட்டர்களிலும் கிருமிகள் பரவாமல் தடுக்க கண்ணாடிகளை "ஸ்டெரிலெஸ்'' முறையில் சுத்தம் செய்யும் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். அதனால் எந்தக் கிருமியும் கண்ணாடி மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளை தைரியமாக படம் பார்க்க அழைத்து வந்தார்கள்.
மீண்டும் சுறுசுறுப்பான வசூல் தொடங்கியது. முதலில் சென்னைக்கு 3 பிரதிகள் வெளியிட்டோம். மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பிரதி. அடுத்த வாரமே 60 பிரதிகள் போடுமளவுக்கு அபார வெற்றியடைந்தது. "எப்படி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பது?'' என்று ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜிதேந்திரா ஆகியோர் விளக்கப்படத்தின் `டெமோ'வில் இலவசமாக நடித்துக் கொடுத்தது மறக்க முடியாத அனுபவங்கள்.
சரி, இனி இந்த "மைடியர் குட்டிச் சாத்தான்" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா வழங்கிய பின்னணி இசை, மற்றும் பாடல்களை இங்கே தொகுத்துத் தருகின்றேன். அனுபவியுங்கள் ;)
படத்தின் முகப்பு இசை
படத்தின் இறுதி இசை
மந்திரவாதிகள் தங்க வேட்டைக்குச் சென்று சிக்கலில் அகப்படுதல்
சிறுவர்கள் பாழடைந்த பங்களாவுக்கு குட்டிச்சாத்தானை முதல் தடவை தேடிப் போதல்
குட்டிச்சாத்தானை வரைந்து மகிழும் சிறுவர்கள்
சிறுவர்கள் குட்டிச்சாத்தானைத் தேடிப் போகும் இறுதி முயற்சி
குட்டிச்சாத்தானைக் காணும் சிறுவர்கள் மகிழ்ச்சியில். அற்புதமான வயலின் இசையும் இழையோடுகின்றது.
குட்டிச் சாத்தானுடன் கூடி விளையாடும் சிறுவர்கள். குட்டிச்சாத்தான் நடத்தும் இசைக்கச்சேரி
"செல்லக்குழந்தைகளே" பாடலோடு குட்டிச்சாத்தானும் சிறுவர்களும் ஆடிப்பாடுதல். (பாடியவர்கள் வாணி ஜெயராம், சுஜாதா)
குட்டிச்சாத்தான் ஓடும் கை ரிக்க்ஷாவில் அமர்ந்து, குறும்பு செய்யும் பணக்காரச் சிறுவர்களின் காரை விரட்டிப் பிடித்து முன்னேறல்
மதுபானக்கடையில் குட்டிச்சாத்தான் போய் மதுவை விரும்பி ரசிக்கும் காட்சி, ஆர்ப்பாட்டமான வயலின் இசை சிறப்பு
மந்திரவாதி குட்டிச்சாத்தானைத் தேடிப் பள்ளிக்கு வருதல்
குட்டிச்சாத்தானை தங்களிடம் இருந்து விலகிப் போகாமல் இருக்க சிறுவர்கள் போடும் திட்டத்தோடு "பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா" பாடல் (பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ்)
மந்திரவாதியின் கையில் அகப்பட்டு கஷ்டப்படும் குட்டிச்சாத்தான்
குட்டிச்சாத்தானின் பிரியாவிடை
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
செல்லக்குழந்தைகளே பாட்டு சின்ன வயதில் எவ்வளவு முறை சலிக்காமல் கேட்டிருக்கிறேன். பாடலுக்கு நன்றி கானா
தல! படிக்க படிக்க அப்படியே படம் பார்த்த நாள் எல்லாம் ரீவைண்ட் ஆகுது!
நான் அந்த கண்ணாடியை தியேட்டர்லயே திரும்ப கொடுத்துட்டுவந்து எங்க ப்ரெண்ட்ஸ் சர்கிள்ல கேவலப்பட்டு போனேன் அதெல்லாம் எங்க உங்களுக்கு தெரியப்போகுது.....! :-(
மைடியர் குட்டிச்சாத்தாம் படம் திரைப்பட வரலாற்றில் ஒரு சகாப்தம். மலையாளத்தில் அப்பச்சன் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் பெருவெற்றியைக் கண்டது. உடனே தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் சென்றது. வென்றது.
முதல்முறை மட்டுமல்லாது இரண்டாம் முறையும் வெளியிடப்பட்டு பெருவெற்றி பெற்ற படம் இது. இப்பொழுது வெளியிட்டாலும் குழந்தைகளைக் கூட்டிச் செல்லலாம். படமும் கண்டிப்பாக வெற்றி பெறும்.
தமிழில் வெளிவந்த மற்றபல 3டி படங்களுக்கு இது முன்னோடி. ஆனால் இந்தப் படத்தின் வெற்றியை வேறெந்த படமும் பெறவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் 3டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தமிழியக்குனர்கள் சரியாக யோசிக்காததுதான். திரும்பத் திரும்ப சாக்லேட்டை நீட்டினால் அலுப்புத்தானே வரும். சுட்டிப் பையன் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் அனுராதா திரையில் வந்து குலுக்கினார். குடும்பத்தோடு பார்க்கப் போனவர்கள் ஓடிவந்தார்களாம். ஆனால் விட்டலாச்சார்யாவின் ஜெய் வேதாளம் ஓரளவு நன்றாக இருக்கும்.
மைடியர் குட்டிச்சாத்தான் படத்தின் இசையைப் பாராட்டிச் சொல்ல வேண்டும். படம் தொடங்கும் போதே இசையரசாங்கம் தொடங்கிவிடும். எழுத்து பார்க்கும் பொழுதே ஒரு மாயலோகத்திற்குக் கூட்டிச் செல்லும். பிறகென்ன ஒரே கலக்கல்..படம் முழுதும் ராஜாவின் ஆட்சிதான். இரண்டே பாடல்கள்தான். இரண்டும் முத்துகள். வாணி ஜெயராமின் குரலோடு சுஜாதாவின் குரல் பொருந்தவில்லையென்றாலும் நல்ல பாடல்தான். யேசுதாசின் குரலில் பூவாடைக் காற்றே பாட்டும் கலக்கல்.
வருகைக்கு மிக்க நன்றி சின்ன அம்மணி
//ஆயில்யன் said...
தல! படிக்க படிக்க அப்படியே படம் பார்த்த நாள் எல்லாம் ரீவைண்ட் ஆகுது!//
வாங்க பாஸ்
கண்ணாடியை வாங்கினோமா படம் பார்த்தோமா திருப்பிக் கொடுத்தோமான்னு இருக்கணும் பாஸ் ;)
அதே படத்தை '95 வாக்கில் மறு ரிலீஸ் செய்து அதுவும் 100 நாட்கள் ஓடியதாக நியாபகம்
தல
கலக்கல் தொகுப்பு...நான் ரொம்ப சின்ன பிள்ளையாக இருக்கும் போது பார்த்த படம்....யப்பா எப்படி தான் இப்படி எல்லாம் தேடி போடுறிங்களோ!!??
பழைய நினைவுகள் எல்லாம் வருது....மிக்க நன்றி தல ;)
விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி ராகவன்
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றேன். அன்னை பூமி போன்ற படங்களை எல்லாம் எதுக்கு 3D இல் எடுத்தாங்களோ என்று கூட எரிச்சல் வரும்.
//நாரத முனி said...
அதே படத்தை '95 வாக்கில் மறு ரிலீஸ் செய்து அதுவும் 100 நாட்கள் ஓடியதாக நியாபகம்//
ஆமாம். கேயார் தான் மீண்டும் ரிலீஸ் பண்ணினார்.
//கோபிநாத் said...
தல
கலக்கல் தொகுப்பு...நான் ரொம்ப சின்ன பிள்ளையாக இருக்கும் போது பார்த்த படம்....யப்பா எப்படி தான் இப்படி எல்லாம் தேடி போடுறிங்களோ!!??//
ரொம்ப நன்றி தல, எல்லாமே ராசா தான் ;-)
ஜூப்பர்.
செல்லக் குழந்தைகளே பாட்டு அருமையா இருக்கும்.
சின்ன வயசுல பாத்தது. குட்டிச்சாதானா நடிச்ச பையன் போஷாக்கா இருப்பான்.
வருகைக்கு நன்றி தல
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
மிக்க நன்றி சந்தனமுல்லை
உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment