Pages

Sunday, November 9, 2008

"நிறம் மாறாத பூக்கள்" பின்னணிஇசைத்தொகுப்பு

பதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்புக்களோடு தொடர் வெற்றிகளாக வந்த வரிசையில் அவருடைய வெற்றிச் சுற்றில் ஒரு தற்காலிக அணை போட்டது ஐந்தாவதாக தமிழில் வந்த "நிறம் மாறாத பூக்கள்" படத்தின் பெருவெற்றி. அந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த கல்லுக்குள் ஈரமும், நிழல்கள் படமும் வர்த்தக ரீதியில் எடுபடாத படங்கள். அவர் மீண்டு வந்தது அந்த இரண்டு படங்களின் தோல்விகளைத் தொடர்ந்து அப்போதைய இவரின் உதவி இயக்குனர் மணிவண்ணன் கதையில் வந்த அலைகள் ஓய்வதில்லை.


"நிறம் மாறாத பூக்கள்" படம் எடுத்த எடுப்பிலேயே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குரலில் கடவுள் வாழ்த்தோடு "லேனா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெற்றிப்படங்கள் சிலதைப் பார்க்கும் போது காலமாற்றமோ என்னவோ அதிகம் ரசிக்கமுடிவதில்லை. அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வாகவோ அல்லது அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் கதைக்களனாகவோ அவை இருப்பதும் ஒரு காரணம். முப்பது வருஷங்களுக்கு முன்னால் வந்த வெற்றிப் படம் என்றாலும் அதே புத்துணர்வோடு மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய சிறப்பை இது கொடுத்திருக்கின்றது.


இப்படத்தின் கதை, அப்போது உதவி இயக்குனராக இருந்த கே.பாக்யராஜின் கைவண்ணத்தில் இருக்கின்றது. இவர் ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையும் எழுதியவர். தொடர் வெற்றிகளாகக் குவித்த பாரதிராஜாவின் வெற்றியில் பாக்கியராஜுக்கும் பெரும் பங்கு இருக்கின்றது என்று அப்போது ஒரு பத்திரிகை எழுத, அது பாரதிராஜாவின் கோபத்தினை எழுப்பியதை மீண்டும் ஒரு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவுபடுத்தியிருந்தது.
வசனத்தினை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். இப்படத்தில் உதவி இயக்குனர்களாக இருந்து பின்னர் பேசப்பட்டவர்கள் கே.ரங்கராஜன் மற்றும் மனோபாலா. ஆனால் இணை இயக்குனர் என்று பெயர் போட்டிருந்த ஜே.ராமு எங்கே என்று தெரியவில்லை, அல்லது பெயர் மாற்றிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. முன்னர் ஊரில் வின்சர் திரையரங்கில் ஓடியதாகவும், கே.எஸ்.ராஜாவின் கம்பீரமான குரலில் திரை விருந்து படைத்ததும் தூரத்து நிழலாக நிற்கும் நிஜங்கள்.

றேடியோஸ்புதிரில் பின்னூட்டிய ஆளவந்தான் சொன்னது போல இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே அவரவர் பெயர்களிலேயே வந்ததும் ஒரு சிறப்பு. பின்னூட்டத்தில் தங்கக்கம்பி சொன்னது போல முதன் முதலாக பாரதிராஜாவின் படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் "முதன் முதலாக" என்று பாடி தொடர்ந்ததும் இப்படத்தில் இருந்து தான்.

இப்படத்தின் முதல்பாதி ஏழை சுதாகர் பணக்கார ராதிகா காதலை முக்கியப்படுத்தி சென்னையைச் சுற்றி வருகின்றது. அடுத்த பகுதி விஜயன் ரதியின் பணக்காரத்தனமான காதல் ஊட்டியை வலம் வருகின்றது. நிவாசின் கமராவுக்கே ஜலதோஷம் பிடித்து விடும் அளவிற்கு குளு குளு காட்சிகள் பின் பாதியில். ஆனால் இப்படியான ஒரு சிறந்த களத்திற்கு பாலுமகேந்திராவின் கமரா கண் மட்டும் இருந்தால் இன்னும் ஒரு படி மேல் போயிருக்குமே என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. அசாதாரண திருப்பங்களோ, கதைப்பின்னல்களோ இல்லாவிட்டாலும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைக்கும் பாணி இருந்தால் முப்பது வருஷத்துக்குப் பின்னரும் சிகரெட் இடைவேளை எடுப்பவர்களையும் கட்டிப் போட்டு விடும் சாமர்த்தியம் தெரிகின்றது. ஆனால் ஐம்பது பைசா சுதாகர் பின்னர் ஐந்து லட்சத்தோடு ஓடி விட்டார் என்றால் பின்னர் ஏன் ஊட்டியில் வந்து புல்லு நறுகணும், அதைப் பார்த்து ராதிகா ஏன் வெறுக்கணும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஐம்பது பைசாவுக்கு அலையும் அப்பாவி சுதாகர் பாத்திரமும், கிழக்கே போகும் ரயில் படத்தில் தமிழைக் கதறக் கதறக் கொலை செய்த ராதிகாவின் இங்கிலீஷ் தனமான பேச்சுக்கு துணையாக இந்தப் படத்தில் அவரின் பணக்காரத் தனமான பாத்திரமும் சிறப்பு என்றால்,
"நானே தான்" என்று குரல் கொடுக்கும் பக்கத்து வீட்டு விரகதாபப் பாத்திரம் பாக்யராஜின் ஐடியா போலும். ஒரு காலகட்டத்தில் இந்த வசனம் அடிக்கடி பலர் வாயில் ஏற்ற இறக்கத்தோடு பேசியதை அரைக்காற்சட்டை வயசில் கேட்டிருக்கிறேன் ;-)

கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் மின்னுகிறார் ரதி, அவருக்கு குரல் கொடுத்தவரின் குரல் அளவாகப் பொருந்தியிருக்கிறது. இந்தப் படம் எடுக்கும் வேளை ஹிந்திப் படவாய்ப்புக்கள் இவருக்கு வந்து அதனால் மட்டம் போட்டு பாரதிராஜாவின் வெறுப்பைச் சம்பாதித்து பின்னர் இவரின் காட்சிகளை தன் உதவியாளர்களை வைத்தே எடுத்ததாகவும், படம் எடுத்து முடிந்த பின்னர் ரதியின் தாயார் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேள் என்று வருந்தியதாகவும், அப்போது ரதி பாரதிராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பாரதிராஜா குறிப்பிட்டிருக்கின்றார்.

இப்படத்தின் முத்திரை நடிப்பு என்றால் அது மறைந்த விஜயன் நடிப்பு தான். தனது முந்திய படங்களில் பெரும்பாலும் கிராமியத்தனமான பாத்திரங்களில் நடித்தவருக்கு கூலிங் கிளாசும், மதுப்புட்டியோடும் வந்து விரக்தியான வசனங்களை உதிர்க்கும் ஊட்டிப் பணக்காரர் வேஷம் கச்சிதமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பாரதிராஜாவின் குரலுக்கும் பாதிப் புண்ணியம் போய்ச் சேரவேண்டும். "மெட்ராஸ் கேர்ள்" என்றவாறே அவர் பேசும் வித்தியசமான பேச்சு நடை சிறப்பாக இருக்கின்றது. விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது.

ஆக மொத்தத்தில் "நிறம் மாறாத பூக்கள்" எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நிறம் இழக்காத பூக்கள்.

சரி, இனி முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். இப்படத்தின் இசையை வழங்கிய இளையராஜா தன் நண்பன் பாரதிராஜாவுக்கு கொடுத்த இன்னொரு நெல்லிக்கனி.
"முதன் முதலாக காதல் டூயட்", "இரு பறவைகள் மலை முழுவதும்", "ஆயிரம் மலர்களே" போன்ற இனிமையான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, ஜென்ஸி, சைலஜா ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். கூடவே "இரு பறவைகள் மலை முழுவதும்" பாடலின் சோக மெட்டை சசிரேகாவும், "காதலிலே" என்ற சின்னஞ்சிறு பாட்டை இளையராஜாவும் பாடியிருக்கின்றார்கள் என்றாலும் இவர்களை பாடியவர்கள் பட்டியலில் டைட்டில் கார்ட்டில் போடவே இல்லை. இந்த இரண்டு பாடல்களும் இசைத்தட்டில் கிடையாது. படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்டவை. அவற்றையும் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கின்றேன்.

பின்னணி இசையினைப் பொறுத்தவரை, அன்னக்கிளி தொடங்கி தொடர்ந்த ஒரு சில வருஷங்களுக்கு இளையராஜாவை மேற்கத்திய வாத்தியங்களுக்கு அதிகம் வேலை வைக்காத படங்கள் வாய்த்ததாலோ என்னவோ அவரின் ஆரம்ப காலப்படங்களின் பின்னணி இசை தாரை தப்பட்டை வகையறாக்களின் தாகம் தூக்கலாக இருந்தது. ஆனால் நிறம் மாறாத பூக்கள் தான் இளையராஜாவின் பின்னணி இசைப்பயணத்தின் முக்கியமான ஒரு திருப்பம் என்பேன். இதில் பாவித்திருக்கும் மேற்கத்திய வாத்தியங்களின் சுகமான பயணம் படத்துக்குப் பெரியதொரு பலம். குறிப்பாக கிட்டார், வயலின் போன்றவற்றின் பயன்பாடு தனித்துவமாக இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தான் வயலின் மேதை நரசிம்மன் போன்றோர் ராஜாவுடன் இணைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்த இசைப் பிரித்தெடுப்பில் 23 ஒலிக்கீற்றுக்கள் உள்ளன. மொத்தமாக ஐந்தரை மணி நேர உழைப்பு ;-)

முக்கியமான இன்னொரு விஷயம், இந்த றேடியோஸ்பதியின் முக்கியமான சிக்கலில் ஒன்று, தளத்தில் இருக்கும் ஒலி இயங்குகருவிகள் வேலை செய்வதில்லை என்ற பலரின் குற்றச்சாட்டு இன்று தீர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு பெரும் நன்றி நண்பர் சயந்தனுக்கு உரித்தாகட்டும். இந்த ஒலி இயங்கு கருவி எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்களேன்.

சரி இனி நான் பேசப் போவதில்லை ராஜாவின் பின்னணி இசை உங்களோடு பேசட்டும்.

படத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்சுதாகர் டயரியைப் படிக்கும் ராதிகா.
புல்லாங்குழல் இசை பின்னர் வயலினுக்கு கலக்கசுதாகர் ராதிகா மோதல், கிட்டார் இசை கலக்கசுதாகருக்கு மனேஜர் போஸ்டிங் கிடைக்கிறது, வயலின்களின் ஆர்ப்பரிப்புசுதாகர் மேல் மையல் கொள்ளும் பக்கத்து வீட்டு பெரிய மனுஷி,
மேற்கத்தேய மெட்டில் வயலின்முதன் முதலாக காதல் டூயட் பாடலுக்கு முன்னால் வரும் ராதிகாவின் ஊடல், கிட்டார் இசை கலக்க, தொடர்ந்து பாடல் கலக்கிறது வயலின் இசையோடுசுதாகர்-ராதிகா கல்யாணத்துக்கு அப்பா சம்மதம், இசையோடு "இரு பறவைகள் மலை முழுவதும்"

<

சுதாகர் பணத்துடன் ஓடிவிட்டார், அதிர்ச்சியில் வயலின்களின் அவல ஓலம்விஜயன் அறிமுகக் காட்சி, "ஆயிரம் மலர்களே மலருங்கள்" சிறு பகுதியோடு கூடவே அவர் ஆற்றோடு உரையாடுவது "நான் மட்டும் அகத்தியனா இருந்தா இந்த உலகத்து தண்ணியெல்லாம் ஒரு சொட்டாக்கிக் குடிச்சிருபேன்", கூடவே வயலின் அழுகிறது.ராதிகாவின் காதல் தோல்வியில் "இரு பறவைகள் மலை முழுவதும்" சசிரேகா பாடும் சோகப் பாட்டு
"இன்னும் என் கனவுகளில் , கற்பனைகளில் நான் அவளோடு வாழ்ந்துகிட்டு தான் இருக்கேன்" ஆயிரம் மலர்களே பாடலை கிட்டார் துள்ளிசைக்க விஜயன் ராதிகா உரையாடல்ரதியை பற்றி விஜயன் சொல்லும் காட்சிகள், கிட்டார் மீண்டும் "ஆயிரம் மலர்களே" இசைக்கரதியின் பின்னால் துரத்தும் விஜயன், அதை இசைஞானி வயலின்கள் மூலம் துரத்துவார்ரதியின் காதலை யாசிக்க விஜயன் அலைதல், இங்கே அதீத ஆர்ப்பரிப்பில் இசைவிஜயன், ரதியிடம் கெஞ்சலாகக் கேட்கும் காதல் யாசகம், வயலின் அழுகையோடு மனப்போராட்டம். ஒற்றை வயலின் சோக மெட்டைக் கொடுக்க, மற்றைய வயலின்கள் போராடும், கிட்டாரில் ஆயிரம் மலர்களே மெட்டுத்தாவ இருவரும் காதலில் ஒன்று கலக்கின்றார்கள்.ராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,"ஆயிரம் மலர்களே" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.ரதி-விஜயன் விளையாட்டுத்தனமாக செய்யும் வினைகள், தாள வாத்தியங்களின் கலவையோடு ஆபத்தை கட்டியம் காட்டுகிறதுரதி-விஜயன் விளையாட்டு வினையாகி, ரதி ஆற்றோடு போதல், முன்னர் பயன்படுத்திய தாள வாத்தியஙகளோடு ஒற்றை வயலின் சோக இசை"ஆயிரம் மலர்களே" பாடல் ஆண் குரல்களின் ஹோரஸ் இசையாக மட்டும்ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.சுதாகரை மீண்டும் காணும் ராதிகா, "காதலிலே ஒர் கணக்கு" இளையராஜா மேலதிகமாகப் பாடிக் கொடுத்த பாடல் துண்டத்தோடுவிஜயன் தன் ரதி இறந்த அதே நாளில் அவளைத் தேடி ஆற்றில் போதல், வயலின் களின் அலறலோடு தாள வாத்தியங்களின் பயமுறுத்தல், முடிவில் சலனமில்லாத ஆறு, ஆற்றில் தொலையும் காதல் "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலோடு நிறைவுறுகின்றது.

41 comments:

ILA (a) இளா said...

ரொம்ப நாள் தேடி பிறகு என்னுடை தொகுப்பில் சேர்த்த பாடல் “முதன் முதலாக”.

முதலில் அந்தப்பாட்டை சன் றீவில் பார்க்கும்போது 5 வயது சிறுவன் முட்டாய் கடைய பார்த்த சந்தோசிச்ச மாதிரி இருந்துச்சுங்க.

G.Ragavan said...

நிறம் மாறாத பூக்கள் ஒரு அருமையான படம். வித்யாசமான கதையமைப்பு. பாத்திரப்படைப்புகள் கூட. இசையைப் பத்திச் சொல்லனுமா.

நீங்க சொல்ற மாதிரி... இளையராஜாவின் பின்னணியிசையின் மெருகேறல் தொடங்கியதும் ஒருவிதமான மேற்கத்திய தாக்கம் இசையில் இறங்கியதும் இந்தப் படத்துல இருந்துதான்னு தோணுது.

இளையராஜா இசையமைச்ச படங்களின் பாடல்களை வந்த வரிசைக்கிரமமா கேட்டப்ப எனக்கு மேல சொன்னதுதான் தோணிச்சு. அதுக்கு முன்னாடி பல படங்களில் மெல்லிசை மன்னரின் நீட்சியாகத்தான் இருந்தது இசை. ஆனால் தனித்துவத்துமான மெட்டுகளோடு.

G.Ragavan said...

சசிரேகாவும் மிகவும் நல்ல பாடகி. இளையராஜாவின் இசையில் பாடல்கள் குறைவென்றாலும் அனைத்துமே நல்ல பாடல்கள்.

1. மேளம் கொட்ட நேரம் வரும் - லட்சுமி திரைப்படத்தில்
2. இதோ இதோ என் வானிலே ஒரே பாடல் - வட்டத்துக்குள் சதுரம்
3. வாழ்வே மாயமா - காயத்ரி
4. இருபறவைகள் (சோகம்) - நிறம் மாறாத பூக்கள்
5. விழியில் விழுந்து இதயம் நுழைந்து - அலைகள் ஓய்வதில்லை
6. தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் - அலைகள் ஓய்வதில்லை
7. விழியோரத்துக் கனவும் ஒரு கதை கூறிடுமே - ராஜபார்வை
8. ராஜபார்வை படத்தில் வரும் பள்ளிக்குழந்தைகள் பாடும் பாட்டு

இப்படி எல்லாமே நல்ல பாடல்கள்.

அவருடைய பெயரை எழுத்தில் போடாதது தவறே.

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் எல்லாத்தொகுப்பும் வைத்திருக்ககிறீர்கள் தானே இங்கெ அலுவலக கணினி ஒன்றில்தான் இணையம் பயன் படுத்துகிறேன் அதனால் கேட்க முடிவதில்லை ...

உங்களை நேரில் நச்திக்கிற பொழுது எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு போய் ஒரே நாளில் விடிய விடிய கேட்க வேணும்...

தமிழன்-கறுப்பி... said...

படம் பார்த்திருக்கிறேன் அனால் மறந்து போட்டன், அதனால தான் இசையை கேட்காமல் பதில் சொல்ல முடியவில்லை சுதாகரையும் மறந்து போட்டன் அதனால நகைச்சுவை நடிகர் யாரெண்டுற தும் நினைவுக்கு வரயில்லை ....
இப்ப கிட்டடியிலைதான் சுதாகரின்ரை படம் பார்த்தாலும் சட்டென்று நினைவு படுத்த முடியவில்லை...

தமிழன்-கறுப்பி... said...

இப்ப ஒரு கிழமைக்கு முதல்தான் ஒரே நாளிலை கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் டிவிடியும் கடலோரக்கவிதைகள் திருமதி பழனிச்சாமி படமும் சோர்ந்த டிவிடியும் வாங்கி வந்து ஒரே நாளில் கிழக்கே போகும் ரயிலும், கடலோரக்கவிதைகளும் பார்த்தேன் மற்றய இரண்டும் இன்னமும் பார்க்கவில்லை..

ரூமில் இருக்கிறவங்கள் திட்டித் தீர்த்துப்போட்டாங்கள் கொண்டு வந்த படங்களைப்பார் அப்பிடியெண்டு...:)

Ayyanar Viswanath said...

நன்றி,நன்றி,நன்றி :)

உங்களின் அசாத்திய பதிவேற்ற உழைப்பிற்கும் அற்புதமான தொகுப்பிற்கும்

தமிழன்-கறுப்பி... said...

\\
கிழக்கே போகும் ரயில் படத்தில் தமிழைக் கதறக் கதறக் கொலை செய்த ராதிகாவின் இங்கிலீஷ் தனமான பேச்சுக்கு துணையாக
\\

அப்படி இருந்தது என்வோ உண்மைதான், ஆனால் முதல் மரியாதை படத்தில ராதாவுக்கு குரல் கொடுத்தது ராதிகாதான் என்று நினைக்கிறேன் பின்னர் வருகிற நாட்களில் அவருடைய குரலில் கிராமத்து வேசங்களுக்கும் அப்படியே பொருந்துவது போல பேசியிருக்கிறார் ராதிகா...

அப்படியென்று நம்புறன் சரிதானே அண்ணன்...:)

தமிழன்-கறுப்பி... said...

\
விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது.
\

'கிழக்கே போகும் ரயில்' படத்துலயும் விஜயன் பட்டாளத்துக்காரனா நடிச்சிருப்பார்....
உண்மைதான் நல்ல நடிகர்...

ஆயில்யன் said...

//சரி இனி நான் பேசப் போவதில்லை ராஜாவின் பின்னணி இசை உங்களோடு பேசட்டும். ///

நீங்கள் பேசுவதால்தான் இன்று எங்களை போன்றவர்களுக்கும் இளையராஜாவின் பின்னணி இசையின் மகாத்மியங்கள் புரிய வருகின்றது!

:))

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் பாடல் மட்டுமே கேட்டு களித்திருந்தேன் நிறைய தடவை இன்று பின்னணியிலும் கேட்டுமகிழ்கிறேன்!

ஆயில்யன் said...

கோவில் மாடு மாதிரி வளர்ந்து வயசும் ஆகிடுச்சு ஆனாலும்....

தல!

இந்த வசனம் அப்பவே எழுதிட்டாங்களா?

(நீங்க அதை செலக்ட்டி போட்டப்பவே தெரிஞ்சுப்போச்சு உங்களுக்கும், என் மேட்டரூ தெரிஞ்சுப்போச்சுன்னு சரி விடுங்க! உலகம் எப்பவுமே உண்மையை சொல்லிக்கிட்டுத்தான் திரியும்!)

ஆயில்யன் said...

//சுதாகர்-ராதிகா கல்யாணத்துக்கு அப்பா சம்மதம், இசையோடு "இரு பறவைகள் மலை முழுவதும்" //

இந்த இசையை கேளுங்களேன்! கேட்கும்போதே மனம் உற்சாகத்தில் கொப்பளிப்பதை உணர முடிகிறதா?

ராஜா தி கிரேட் !

முரளிகண்ணன் said...

very interesting post. kalakkalaa irukku. isaiyai keeddukkidde maRRa pathivukala padikkireen

ஆளவந்தான் said...

கானா பிரபு ,

முதலில் என் பெயரை இந்த பதிவில் இட்டதற்கு நன்றி!

நான் நெடு நாட்களாக "பாஞ்சலங்குறிச்சி" படத்திலிருந்து , "அ -னா ஆ-வன்ன அத்தை பொண்ணை பாருன்னா" என்ற (குத்து) பாடலை தேடி வருகின்றேன். உங்களுக்கு அந்த பாடல் கிடைத்தால் எனக்கு அனுப்பவும். நன்றி!!!

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா.

நேற்று இதற்கு பதிலிடவேண்டுமென்று நினைத்து பின்னர் இதில் ந்டித்த இரண்டு நடிகர்களில் ஒருவர் வேற்று மொழியில் நகைச்சுவை நடிப்பில் சிறாந்து விளங்குவதாக சொல்லியிருந்தீர்கள், அதில் குழம்பி விட்டுவிட்டேன்... (சுதாகர்) என்று நினைக்கிறேன்.

//விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது. //
உண்மைதான், ஆனால் விஜயனும் படதேரிவில் சரியான கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். ஒரு வருடத்தில் 25 ஐ அண்மித்த படங்களில் அவர் நடித்ததாக அறிந்தேன். இது சரியான முடிவல்ல என்பது எனது கருத்து

கோபிநாத் said...

மிக்க நன்றி தல ;))

ஒவ்வொரு இசையையும் மிகவும் ரசிச்சி கேட்டேன்.

Anonymous said...

ஒலி இயங்குகருவிகள் வேலை செய்வதில்லை என்ற பலரின் குற்றச்சாட்டு இன்று நிறைவேறியிருக்கிறது//

பொருட்குற்றமுண்டு !
:)

கானா பிரபா said...

// ILA said...
ரொம்ப நாள் தேடி பிறகு என்னுடை தொகுப்பில் சேர்த்த பாடல் “முதன் முதலாக”//

வாங்க இளா

துள்ளிசை என்றாலும் கேட்கத் திகட்டாத பாடல் இன்று வரை.//G.Ragavan said...
நீங்க சொல்ற மாதிரி... இளையராஜாவின் பின்னணியிசையின் மெருகேறல் தொடங்கியதும் ஒருவிதமான மேற்கத்திய தாக்கம் இசையில் இறங்கியதும் இந்தப் படத்துல இருந்துதான்னு தோணுது.//

வணக்கம் ராகவன்

அது போல் ராஜாவுக்கு ஆரம்பத்தில் இப்படியான நல்லதொரு நகரப்பாணிக் கதை அமையாததும் ஒரு காரணமா இருக்கலாம், அத்தோடு இவரோடு பின்னர் சேர்ந்து கொண்ட வாத்திய விற்பன்னர்களும் ராஜா நினைப்பதைச் செயற்படுத்தி இருக்கலாம்.

80 களில் முக்கியமாகக் கலக்கிய பெண் குரல்கள் ( சுசீலா, வாணி தவிர்த்து) அனைவரும் இப்படத்தில் இருப்பதும் பெரும் சிறப்பு

ஆயில்யன் said...

பாஸ் புது பிளேயர் கலக்கல் பாஸ் :)))

எப்ப்பிடி பாஸ் கண்டினீயுவா கலக்குறீங்க?!!!!

கானா பிரபா said...

// தமிழன்...(கறுப்பி...) said...
அண்ணன் எல்லாத்தொகுப்பும் வைத்திருக்ககிறீர்கள் தானே இங்கெ அலுவலக கணினி ஒன்றில்தான் இணையம் பயன் படுத்துகிறேன் அதனால் கேட்க முடிவதில்லை ...//

வாங்கோ கறுப்பி

எல்லாம் பத்திரமா இருக்கு, உங்களைப் போன்று இன்னும் சிலரும் முன்னர் நான் கொடுத்த பிளேயர் வேலை செய்வதில்லை என்று சொன்னதால் இப்போது சயந்தனின் உதவியுடன் இன்னொரு பிளேயருக்கு மாத்தியிருக்கிறேன், பக்கம் லோட் ஆவதும் குறைவு, இது வேலை செய்கிறதா என்று சொல்லவும்.

//அய்யனார் said...
நன்றி,நன்றி,நன்றி :)//

மிக்க நன்றி அய்யனார், அனுபவியுங்க

thamizhparavai said...

நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி...
நான் இன்னும் பார்க்க நினைத்து,பார்க்காத படம் 'நிறம் மாறாத பூக்கள்'.
ஆனால் உங்களின் கதை சொல்லும் பாணியும், தலையின் இசையும் சேர்த்து ஒரு முழுப்படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது...
இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை...
மிக்க நன்றி, மிக்க நன்றி,மிக்க நன்றி....

கானா பிரபா said...

//ஆயில்யன் said...

நீங்கள் பேசுவதால்தான் இன்று எங்களை போன்றவர்களுக்கும் இளையராஜாவின் பின்னணி இசையின் மகாத்மியங்கள் புரிய வருகின்றது!//

ரொம்ப நன்றி பாஸ்

கோயில் மாடு விஷயம் எல்லோருக்குமே பொருந்தும் ஒரு பொதுத்தத்துவம் இல்லையா ;)

புது பிளேயரைக் கேட்டுக் கருத்து சொன்னமைக்கும் நன்றி பாஸ்

//முரளிகண்ணன் said...
very interesting post. kalakkalaa irukku. isaiyai keeddukkidde maRRa pathivukala padikkireen
//

மிக்க நன்றி முரளிகண்ணன்

Tech Shankar said...

நினைவுகளைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டீர்கள். நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super... kana

thanks..

Naga Chokkanathan said...

அற்புதமான தொகுப்பு, மிக்க நன்றி கானா பிரபா!!!!!!!!

என். சொக்கன்,
பெங்களூர்.

SurveySan said...

ஷைலஜா பாடியதில் சலங்கை ஒலிக்கு அப்பால எனக்கு ரொம்ப பிடிச்சது ஆயிரம் மலர்களே பாட்டுதேன்.

ரொம்ப உழைச்சிருக்கீங்க. அருமையான பதிவு.

KARTHIK said...

ஆயிரம் மலர்களே இந்த வரிகள் மட்டுமே நினைவில் இருந்தது.
படம் பேரு மட்டும் நினைவில் வரவே இல்லை.

நல்ல தொகுப்புங்க தல.

நன்றி

கானா பிரபா said...

//ஆளவந்தான் said...
நான் நெடு நாட்களாக "பாஞ்சலங்குறிச்சி" படத்திலிருந்து , "அ -னா ஆ-வன்ன அத்தை பொண்ணை பாருன்னா" என்ற (குத்து) பாடலை தேடி வருகின்றேன். உங்களுக்கு அந்த பாடல் கிடைத்தால் எனக்கு அனுப்பவும். நன்றி!!!//

ஆளவந்தான்

எனது மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் போடுங்களேன்,பாடலை எப்படியாவது எடுத்து தருகின்றேன்

//அருண்மொழிவர்மன் said...
வணக்கம் பிரபா.

உண்மைதான், ஆனால் விஜயனும் படதேரிவில் சரியான கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். ஒரு வருடத்தில் 25 ஐ அண்மித்த படங்களில் அவர் நடித்ததாக அறிந்தேன். இது சரியான முடிவல்ல என்பது எனது கருத்து//

அருண்மொழி வர்மன்

விஜயனின் பலவீனத்தையும் ஏற்றுக் கொள்கின்றேன். அவர் மீண்டும் வந்த போது நல்ல பாத்திரங்களும் வாய்க்கவில்லை. அவர் பிரபலமாக இருந்த காலத்தில் நீங்கள் சொன்னது போல் மலையாகக் குவிந்தன அவரின் படங்கள்.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
மிக்க நன்றி தல ;))

ஒவ்வொரு இசையையும் மிகவும் ரசிச்சி கேட்டேன்.//

சுருக்கமா முடிச்சீட்டிங்களே தல ;)

சயந்தன்

பொருட்குற்றம் நிவர்த்தியாக்கப்பட்டுள்ளது ;-)


//தமிழ்ப்பறவை said...
நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி...
நான் இன்னும் பார்க்க நினைத்து,பார்க்காத படம் 'நிறம் மாறாத பூக்கள்'.//

தல

முதல்ல இந்தப் படத்தைத் தேடிப்பிடிச்சுப் பாருங்க, இன்றைக்கும் புத்துணர்வா இருக்கும் படம் இது, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

கானா பிரபா said...

// Sharepoint the Great said...
நினைவுகளைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டீர்கள். நன்றி//

நன்றி நண்பா

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
super... kana

thanks..//

மிக்க நன்றி முத்துலெட்சுமி

// Naga Chokkanathan said...
அற்புதமான தொகுப்பு, மிக்க நன்றி கானா பிரபா!!!!!!!!

என். சொக்கன்,
பெங்களூர்.//

வாங்க சொக்கன்

ராக சாம்ராஜ்ஜியத்தில் சொக்கிப் போயிருப்பீங்களே ;)

கானா பிரபா said...

//SurveySan said...
ஷைலஜா பாடியதில் சலங்கை ஒலிக்கு அப்பால எனக்கு ரொம்ப பிடிச்சது ஆயிரம் மலர்களே பாட்டுதேன்.//

வருகைக்கு நன்றி சர்வேசன்

சைலஜாவின் பாடல்களில் என் விருப்பத்தில் முதலில் இருப்பது மலர்களில் ஆடும் இளமை புதுமையே, ஆயிரம் மலர்களே பாட்டு ஜென்சியின் குரலிலும் கலக்கல் தானே

//கார்த்திக் said...
ஆயிரம் மலர்களே இந்த வரிகள் மட்டுமே நினைவில் இருந்தது.
படம் பேரு மட்டும் நினைவில் வரவே இல்லை.//

வாங்க கார்த்திக்

புதிரைப் போடும் போது எல்லோருமே ஜிஜிபி என்று சொல்வார்கள் என்று பார்த்தால் இப்படிச் சொல்லீட்டிங்களே ;)
மிக்க நன்றி

Anonymous said...

வணக்கம் பிரபா,

உங்களின் உழைப்பிற்கும் அற்புதமான தொகுப்பிற்கும்.

நன்றி,
Krithika.
Houston

கானா பிரபா said...

பதிவைக் கேட்டு உங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி க்ருத்திகா

Linq said...

Hello,

This is Alpesh from Linq.in.and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog
of All Time in the Languages Category

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.in

KSPTUP said...

"ரதியின் காதலை யாசிக்க விஜயன் அலைதல், இங்கே அதீத ஆர்ப்பரிப்பில் இசை" தலைப்பில் கீழ் கொடுத்துள்ள பின்னணி இசையின் தரம்,கம்பீரம் ஏன் இப்பொழுது வெளியாயிருக்கும் ஜேம்ஸ்பான்ட் படம் உட்பட எந்த ஹாலிவுட் படத்திலும் கேட்கமுடியாதது.
இளையராஜாவின் பின்னணி இசைக்காகவே சில காட்சிகளை படமெடுத்து இணைப்பாராம் பாரதிராஜா. இதுபோலத்தான் இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திராவும் படமெடுத்துள்ளனர். உங்களின் ஐந்தரை மணி நேர உழைப்பு விலைமதிப்பற்றது.நன்றி

கானா பிரபா said...

தங்கக்கம்பி

நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்கிறேன், ராஜாவின் பின்னணி இசையின் மகத்துவம் பரவலாக வெளிப்படாதது ஒரு பெரும் இழப்பு.
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ரகுநந்தன் said...

இந்தப்படம் வின்சரில் வெளியாகியது. நான் முதல் முதலில் முதற் காட்சி பார்த்த சினிமா இது தான். அன்று யாழ் இந்துவுக்கும் கொழும்பு ரோயல் (என நினைக்கிறேன்) இடையில் கிரிக்கட் போட்டி இருந்தது. முக்கியமான ஆட்டம் என்பதாலும் கொழும்பில் இருந்து ஆட வந்திருப்பதாலும் வெள்ளிக்கிழமை காலையிலேயே போட்டிக்கான சலசலப்புகள் ஆரம்பித்திருந்ததால் யாரும் எம்மை ஏன் கல்லூரியை விட்டுச் செல்கிறீர்கள் என கேட்கவில்லை. எனக்கு கிரிக்கெட் முக்கியமில்லை. நண்பர்கள் சொல்துபோல் முதல்காட்சி பார்க்கும் அனுபவம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று போயிருந்தேன். வின்சரில் அதுவும் ஒடிசி க்கு ரிக்கற் வாங்கி பார்த்தோம். (O.D.C - on the deck, balcony - over the deck) அட்டகாசமாக இருந்தது.
வின்சரில் முதல் நாள் வரை எம்.ஜி.ஆரின் ”மீனவ நண்பன்” ஓடியது (3வது தடவை ரிலீஸ் பண்ணி ஓட்டினார்கள்!!!)நாம் இருந்த ஓ.டி.டி இருக்கைகள் எல்லாம் தூசு! யாரும் கடந்த 100 நாட்களாக இருக்கவில்லை என்றார்கள்! எம்முடன் வந்த மாணவ முதல்வர் வெள்ளை காற்சட்டை (யூனிஃபோம்) போட்டிருந்து கரியாக வெளியில் வந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது! அது வரை கறுப்பு வெள்ளை அல்லது டெக்னிக்கலர் படங்களை பார்த்த எமக்கு நம்ப முடியவில்லை. நிவாஸ் படப்பிடிப்பாளர்! தொடர்ந்து 50 நாட்களுக்குள் 6 தடவை பார்த்தோம் என்றால் பாருங்கள்!!!அதற்கு முன்னர் எனது சினிமா அனுபவம் வெறும் 15 மட்டுமே! இதில் பக்திப்படங்கள், பள்ளிக்கூடத்துடன் மாமாவுடன் , போனதுகளும் அடக்கம்!
நிறம்மாறாத பூக்கள் அனுபவம் என்னைப் பொறுத்தவரை மிக நிறம் மாறாதவை!

கானா பிரபா said...

வணக்கம் ரகுந்தன்

உங்களின் பழைய நினைவுகளை வாசிப்பதே இதமாக இருக்கின்றது. நிறம் மாறாத அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

Jeevan said...

அருமை கான பிரபா.
நான் சினிமா கற்கும்போது பலமுறை பார்த்த தமிழ்படம்.

அந்த படத்தை இணையத்தில் தேடிய போது சிக்கியது உங்கள் பதிவு.

அன்றைய பின்னணி இசை குறித்த தகவல்கள் கண்டு வியக்கிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் அஜீவன்

நானும் நிறம் மாறாத பூக்களைப் பல ஆண்டுகள் தேடி சில மாதங்களுக்கு முன்னர் கிடைத்தது, அந்தப் பிரதி கூட அவ்வளவு சிறப்பானதில்லை, பின்னணி இசையில் ராஜா அன்றே செய்த பிரமாண்டம் வியக்க வைக்கிறது இல்லையா?

சஞ்சயன் said...

நம்ம பேவரீட் விஜயன் தான்... அந்த காலத்தில.. அருமையான பாடல்கள். அதமாய் வந்து போகும் பால்ய நேச நினைவுகள். நன்றி பிரபா