யானையக் கொண்டாங்க.. குதுரையைக் கொண்டாங்க.. நானும் ஊர்கோலம் போக.. இந்த இடம் வரும் போது அப்படியே யானையிலோ, குதிரையிலோ ஏற்றி விட்ட மிடுக்கு எழும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப காலத்தில் இரண்டு தத்துவார்த்தமான பாடல்கள் வந்த அளவுக்கு பின்னாளில் அவற்றுக்கு நிகராக வந்ததில்லை என்பேன். ஒன்று தனி மனிதனின் விரக்தி நிலையின் வெளிப்பாடு. அதுதான் “தப்புத்தாளங்கள்” படத்தில் வந்த “என்னடா பொல்லாத வாழ்க்கை”
https://www.youtube.com/watch?v=hgF474VravA https://www.youtube.com/watch?v=hgF474VravA காடாறு மாதம் அப்பா.. நாடாறு மாதம் அப்பா... ராஜாக்கள் கதை இது தான்ப்பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இப்படிப் போகும் அந்தப் பாட்டு. கவியரசு கண்ணதாசனின் அகராதியில் தத்துவார்த்தத்துக்குத் தனி இலக்கணம் இருக்கும். அப்படியிருக்க அவர் முத்திரை இல்லாமலா? இன்னொரு பக்கம் சமூகப் பார்வையை முன்னுறுத்தி எழுந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0 இதை இப்படி ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் மொழியாளுமை செய்திருப்பார் SPB. கங்கை அமரன் அவர்கள் கொடுத்த மிகச் சிறந்த தத்துவப் பாடல்களில் முதலிடத்தில் வைக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவர் எழுதிய ஆரம்ப காலப் பாட்டு. பின்னாளில் “ஆணென்ன பெண்ணென்ன” கூட இந்தக் கூட்டணியில் விளைந்த அற்புதம். “முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு…” என்று “என்னடா பொல்லாத வாழ்க்கை” பாடலில் கண்ணதாசன் கொடுத்தார். “கையிருக்கு உழைச்சுக் காட்டுறேன் மனசிருக்கு பொழச்சிப் பாக்குறேன்...” என்று கங்கையார் “ராமன் ஆண்டாலும்” பாடலில் தந்திருப்பார். கடவுள் மறுப்புக் கொள்கையைக் காட்டாமல் உனக்கு உதவி செய்யும் தெய்வத்தைத் தேடு என்று நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. என்று பொட்டில் அடித்திருப்பார். இந்தப் பாடலை SPB பாடியிருந்தாலும் மலேசியா அண்ணனுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் தொனி இருக்கிறது. ஹேய் டே..ய், நந்தாண்டா என்று SPB வேறு முரட்டு ரஜினி ஆகி விடுவார். அந்த உதார்த்தனமான நடையும், நடனமும், தாரையை வெறியோடு அடித்து உருவேற்றும் ஆக்ரோஷமுமாக ரஜினியின் அந்த உழைப்புத்தான் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான மூலதனம். இந்தப் பாடல் ஒன்றே போதும் அவர் நடிப்பின் இயல்பு கூற. இசைஞானி இளையராஜாவை என்னவென்று சொல்ல? “தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி” “ஆசையைக் காத்துல தூது விட்டு” வகையறா என்றாலும் இந்தப் பாடலில் இன்னும் மாசற்ற பூர்வகுடிகளின் இசை மொழி இருக்கும். பூர்வகுடிகள் சாமியைச் சுமந்து வரும் போது அம்மனோ பூமிக்கார் நமக்கு அம்மனோ பூமிக்கார் நமக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டுமே நல்லதே அம்மனோ கொடுக்கட்டுமே என்ற தமிழ் வார்த்தைகளை படுக இனத்தவர் பாடுமாற் போலக் குழைந்து கொடுத்திருப்பார். அதற்கேற்ப அந்த இசை நாதமும் பின்னணியில் இருக்கும். அந்தத் தொகையறா முடிந்து பாடலுக்குள் நுழைந்தால் எத்தனை வித பிறப்பெடுக்கும் அந்தப் பின்னணி இசை. தெம்மாங்கில் இருந்து துள்ளல் வரை கலந்து கட்டி அந்த இசைத் துள்ளல் இருக்கும். பாடல் அந்தத்தில் முடியும் போது அந்த இசை வெறித்தனம் நாட்டுப் பண் இசைஞர்களுக்கே உரிய பண்பு. தன் இசைப் படையணியோடு ஒரு ஊழித்தாண்டவத்தை நடத்தி விடுவார் ராஜா. பாடல் வந்து ஐம்பது வருடங்கள் கடந்தால் என்ன வரிகள் பொய்யாகுமா? இன்று மட்டுமல்ல நாளையும் கூட நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. கானா பிரபா 22.04.2026


0 comments:
Post a Comment