Pages

Saturday, March 7, 2026

கங்கை அமரன் ❤️ஆர்.சுந்தரராஜன் ❤️ இசைந்து இசைத்த புது ஸ்வரங்கள் ❤️



ஆத்தோரம் மேட்டு மேலே

ஆறு முழம் சேலை கட்டி

ஆடி அசைஞ்சு வாறா

அக்கா மக 

இந்தப் பாடலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது, பாடலை எழுதியது வேறு யாருமல்ல எண்பதுகளில் நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்த ஆர்.சுந்தரராஜன் தான்.

அதுவும் தன்னுடைய ஆத்ம நண்பர் கங்கை அமரனே பாடி, இசையமைத்தது.

அதுதான் “ஒருத்தி மட்டும் கரையினிலே” படமாக வந்தது.

கதை, வசனம் எழுதி ஆர்.சுந்தரராஜன் நடிகராகவும் அறிமுகமானது இந்தப் படத்தில் தான். படத்தை இயக்கியிருந்தவர் ஜே.ராமு.

இதே படத்தில் ஆர்.சுந்தரராஜனின் உறவினரும், விஜயை வைத்து கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தை இயக்கிய சி.ஜே.ரங்கநாதனும் 

அசோசியேட் டைரக்ரடாக இயங்கி இருக்கிறார்.


ஒரு வருடம் கழித்து, இன்னொரு கதையோடு தயாரிப்பாளர் கோவைத்தம்பியிடம் போன ஆர்.சுந்தரராஜனை இயக்கவும் செய்யுமாறு வலியுறுத்தியவர், இதே கூட்டணியில் இருந்த சாக, இயக்குநர் சிறுமுகை ரவி.

ஆட்டோவின் பின் பக்கம் எழுதியிருந்த  “பயணங்கள் முடிவதில்லை” 

வாசகத்தைப் படத் தலைப்பாக வைத்து ஒரு வருடம் ஓடியது வரலாறு.


அதற்கும் முன் இன்னொரு சம்பவம். 


“அழகிலே நாயகி அருகிலே நாயகன்

புதிய கதை பேசும் திரு நாளில் தென்றலும் வாழ்த்துதே”


கங்கை அமரனே தயாரிப்பாளராகி

கங்கை அமரனையே தன் படத்துக்கு இசையமைப்பாளராக்கி, கவிஞர் கண்ணதாசனை வைத்துப் பாட்டெழுதி இயக்கவிருந்த படம்

“அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”.

ஆனால் அந்தப் பட நாயகி ஷோபாவின் இழப்போடு படமும் முடக்கப்பட்டது.


பின்னர் கங்கை அமரன் என்று இசையில் ஆர்.சுந்தரராஜன் படம் எதுவும் இயக்கவில்லை என்பதும் அவல முரண்.


சரி இனி தலைப்புக்கு வருவோம் 😀

ஆர்.சுந்தரராஜனின் திரையுலக வாழ்க்கையில் கங்கை அமரன் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போனார் என்பதை கங்கை அமரன் இசையிலேயே இவர் பாட்டெழுதிய காலம் தொட்டு அமைந்து விட்டது.


இன்னொரு சுவையான விடயம்.

கங்கை அமரன் ஒரு இசையமைப்பாளராகத் திரையில் தோன்றியதோடு தன் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரோடு “தோகை இளமயில்” பாடலைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும். திரையில் தோன்றிய வகையிலும் இருவரும் பங்கு போட்டிருக்கிறார்கள்.


வைகறையில் வைகை கரையில்

வந்தால் வருவேன் உன் அருகில்

கங்கை அமரன் தன் பால்யகாலத்தில் எழுதியது அற்புதமானதொரு களச் சூழல் பயணங்கள் முடிவதில்லை படத்தில் அமைந்தது.

அது மட்டுமா அந்த கலகல கங்கையின் “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா”

பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.


எண்பதுகளில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனின் தனித்துவம் எல்லா மேன்மை தரும் இசையமைப்பாளர்களோடும் இயங்கியது தான்.

அந்த வகையில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனோடு அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை மற்றும் தூங்காத கண்ணின்று ஒன்று ஆகிய படங்களில் இயங்கியிருக்கிறார்.

இவற்றில் கங்கை அமரன் பங்களிப்பு இல்லை.

ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு இயங்கிய “சரணாலயம்” படத்தில் கங்கை அமரனுக்கு இரண்டு பாடல்களை எழு வைத்துக் கடனைத் தீர்த்தார்.


தொடர்ந்து கங்கை அமரனோடு இணைந்த வகையில் இளையராஜாவின் படங்களைப் பார்த்தால் எல்லாமே தெவிட்டாத தேன் குழல்கள் தான்.

சீர் கொண்டு வா வெண் மேகமே (நான் பாடும் பாடல்), இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே (வைதேகி காத்திருந்தாள்),

என்று தொடரும். 

குங்குமச் சிமிழ் படத்தில் “பூங்காற்றே தீண்டாதே” என்று இளையராஜாவுக்குக் கொடுத்த பாங்கில் “தலைவனை அழைக்குது” என்ற அற்புதமான பாடல் தேவா இசையில் என் ஆசை மச்சானில் அமைந்திருக்கிறது.


அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் பாடல்கள் எல்லாமே பூந்தி லட்டுகள்.

எல்லாமே கங்கை அமரன் கை வண்ணம். சின்ன மணிக்குயிலே, உன் பார்வையில், நம்ம கடை வீதி, காலை நேரப் பூங்குயில், ஒரு மூணு முடிச்சால, பூவ எடுத்து என்று எழுதும் போதே தேனருவியாய் மனதில்.

விஜயகாந்துக்குக்கு ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் என்று ஒரே படத்தில் நான்கு குரலாளர்கள் ❤️


இன்னொரு புதுமையைச் சொல்லி வைக்க வேண்டும். மெல்லிசை மன்னர் விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் முதன் முதலில் இணைந்து இசையமைக்கும் முன்பே மெல்லிசை மன்னர் இசை கொடுக்க, இளையராஜா “ஆத்தோரம் மேட்டு மேலே” பாடலைப் பாடியிருக்கிறார். சுகமான ராகங்கள் என்ற அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜனே.


மெல்லத் திறந்தது கதவு படத்தில் பாடலாசிரியர் கங்கை அமரனாக ஊரு சனம் தூங்கிருச்சு, சக்கரக் கட்டிக்கு, என்று முத்தான பாடல்கள்.


தோல்விப் படமென்றாலும் தோல்வியாகாத பாட்டுப் படம் தழுவாத கைகள் படத்தில் இரண்டு பாடல்கள் கங்கை அமரன் எழுதவும், விழியே விளக்கொன்று ஏற்று ஒளி வீசியது.


தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் சுந்தரராஜன்.

காலையும் நீயே படத்தில் மூன்று பாட்டுகள் நான்கு வடிவங்களில் உண்டு. அவற்றை எழுதியவர் கூட கங்கை அமரனே. குக்குக் கூவென, சம்மதம் சொல்ல வந்தாள் இரண்டும் 80 களின் ரெக்கார்டிங் சென்டர் ஹிட்ஸ்.


பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் பங்கு போட்டதால் என் ஜீவன் பாடுது பாடல்கள் கங்கை அமரனுக்கு அமையவில்லை. பதிவு கானா பிரபா

தொடந்து அவரின் குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த ராஜாதி ராஜாவில் மாமா உன் பொண்ணைக் கொடு என்று அதகளப்படுத்தினார். படத்தில் பயன்படுத்தாத உன் நெஞ்ச்சைத் தொட்டுச் சொல்லு பாடலும் அவரே.


தாலாட்டு பாடவா பேருக்கேற்ப பாடல்களால் தாலாட்டியது. இங்கு கங்கை அமரன் இல்லாமலா? வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலயா, நீதானா நீதானா, அம்மம்மா, நீதானே, ஓடைக்குயில் ஒரு பாட்டுப் படிக்கலையா எழுதும் போதே அந்தப் பாடல்கள் எல்லாம் காதில் ரீங்காரமிட்டுப் போகும்.


இளையராஜா & ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் கங்கை அமரன் இணையாத இன்னொரு படம் எங்கிட்ட மோதாதே. 

 மீண்டும் வட்டியும் முதலுமாக சாமி போட்ட முடிச்சு படத்தில் கங்கை அமரன் அள்ளித் தெளிக்கிறார் பொன்னெடுத்து வாரேன் வாரேன், நீலவேணி அம்மா நீலவேணி, மாதுளங்கனியே, கோடையிடிச் சத்தம் இப்ப கேக்குதடி… எப்படிப் பாருங்கள் ஹிட் அடித்தவைகளை 😀


தேவா & காளிதாசன் கூட்டணி போட்டதால் ஒயிலாட்டம் படமும் கங்கை அமரனுக்குக் கிடைக்கவில்லை.

பின்னர் என் ஆசை மச்சானில் சோறு கொண்டு போற புள்ள பாடல் தேவா & கங்கை அமரன் கூட்டணியில் பிறந்தது.

காந்தி பிறந்த மண் படத்தில் பட்டாம் பட்டாம்பூச்சி தான், பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் என்ற ஜோடிப் பாடல்களும் இதே கூட்டணியில் மலர்ந்தவை தான். பதிவு கானா பிரபா

சீதனம், காலமெல்லாம் காத்திருப்பேன் அனைத்துப் பாடல்களையும்

ஆர்.சுந்தரராஜனே எழுதி விட்டார்.


குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே உக்கார்ந்து பேசலாமா?

திருமதி பழனிச்சாமி மீண்டும் கங்கை அமரனை அழைத்து வந்து குத்தாலக் குயிலோடு, ரெண்டுல ஒண்ணைத் தொடு ஐயும் தர வைத்தது.


உங்கப்பன் பேரைச் 

சொல்லிச் சொல்லித் திட்ட 

ஒரு புள்ள பெத்துட்டா….


இளையராஜா இசையில் அவரே பாட, கங்கை அமரன் எழுதி, 2013 இல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “சித்திரையில் ஒரு நிலாச் சோறு” படத்துக்காக அமைந்தது. 

இதுவரை காலமும் ஒரு புரியாத புதிராக இருந்தது. காரணம் இளையராஜா, கங்கை அமரன் இருவரும் மனக்கசப்பில் இருந்த காலமது. 

ஆனால் இந்தப் பாடலின் டியூனை வைத்து கங்க அமரனிடம் பாடலை வாங்கி ராஜாவிடம் கொடுத்ததாக 

இந்த வாரம் கங்கை அமரனுடனான பேட்டியில் தான் அந்த உண்மையை உடைத்தார் ஆர்.சுந்தரராஜன்.


கானா பிரபா

07.03.2026

0 comments: