Pages

Tuesday, January 6, 2026

ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுக் கிளப்பிகள்

 



வெட்ட வெளியில் போவோமா

அடி சிட்டுக்குருவியின் 

சிறகைக் கேள்

நட்ட நடு நிசி நேரத்தில்

நாம் சற்றே உறங்கிட 

நிலவைக் கேள்…❤️


மனசோடு ஒன்றிப் போன திரையிசைப் பாடல்கள் ஆகச் சிறந்த நினைவுக் கிளப்பிகள்.

அவை நாம் வாழ்ந்த வாழ்க்கையை, இருந்த இருப்பை, அப்போது சந்தித்த மனிதர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் எண்ணற்ற பாடல்கள் நினைவுப் பெட்டகங்களாகத் திகழ்ந்து வரும் அதே பரிமாணத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இரு பாடல்கள் தொண்ணூறுகளின் பசுமை நினைவுகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் எனக்கு.


ஒன்று, புதிய முகம் திரைப்படத்தில் இடம்பிடித்த “ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு” 

வெளிநாடு போக முன் திரிசங்கு சொர்க்கமாக இருந்த கொழும்பு வாழ்க்கையையும், அந்தக் குறுகிய காலத்தில் CIMA கற்கைக்குப் போன நினைவுகளையும் கொணார்ந்து வரும் பாட்டு.

SPB என்ற ராட்சஷன் எந்தப் புதிய கொம்பனென்றாலும் ஒரு கை பார்த்து விடுவார். அப்பேர்ப்பட்டவரை ஒரு இளம் ஜோடிக் குரல்களில் ஒன்றாக இணைத்த ரஹ்மானின் சிந்தனையை நினைத்து வியப்பேன். அப்போது உன்னி மேனன் போன்ற புதுப் புதுக் குரல்களோடு ரஹ்மான் இசை பயணப்பட்ட நேரம் என்பதால் தான் அந்த வியப்பு.


ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கிக் கொண்டே போகும் அந்த SPB குரலோடு, குழைந்து கை கோர்த்து நளினமெழுப்பும் ரஹ்மான் கால முத்திரைக் குரல் அனுபமா.


ரஹ்மான் பாட்டை இலங்கைக்கு வரவழைத்துப் படமாக்கிய முதற்பாட்டு என்பது இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு. பைலா பாணி இல்லாமல் ஆனால் அந்த இசை வடிவத்துக்கு அடிநாதமாய் விளங்கும் கிட்டார் தான் இந்தப் பாடலின் முக்கிய வாத்தியமாகப் பயன்பட்டிருக்கும். ஆகக் குறைந்த வாத்திய ஆவர்த்தனத்தை வைத்துக் கொண்டு ஒரு வெளி நாட்டுப் பாடலுக்குண்டான பகட்டைக் கொடுப்பார் ரஹ்மான்.

பின்னாளில் சிஞ்ஞோரே பாடலை பைலா பாணியில் கொடுத்த போதும் கிட்டாரின் பரிமாணத்தை அதற்கேற்ப வழங்கியிருப்பார்.

அதற்குப் பின் பல நூறு முறை கொழும்பு வீதிகளையும்,  

காலி முகத்திடல் கடற்கரையையும்,  கடந்திருப்பேன்.  ஆனால் அவையெல்லாவற்றுக்கும் நினைவுச் சின்னமாய் மனதில் தோன்றுவது இந்தப் பாட்டு தான்.


“ஒண்ணு ரெண்டு மூணு டா” புதிய மன்னர்கள் பாடலை இப்போது கூகுளில் தேடினாலும் கொஞ்சம் தயங்கி, சுற்றி வளைத்துத் தான் காட்டும். கவிஞர் காளிதாசன் என்ற திருப்பத்தூரான், ரஹ்மான் பட்டறையில் அரிதாக எழுதிய பாட்டு. அந்த ஒன்றும் படமாக்கப்படாமல் போன துரதிஷ்டம் கொண்டது. ஆனாலும் என்ன? 

இன்று வாரியிறைத்த பண்பலை வானொலிகளுக்கு முன்னோடியாக கொழும்பில் ஒலித்த FM 99 கொண்டாடிய பாட்டு. அப்படியே தலை மேல் சுமந்து கொண்டேன்.


ஒரு துள்ளிசைப் பாடலை எப்படி வித்தியாசமாகக் கொடுக்கலாம்? காலா காலமாக ஆண், பெண் கோஷ்டி மோதல் பாட்டுகளை அந்த தொண்ணூறு யுகத்தில் என்ன மாதிரி புத்தாடையில் கொடுக்கலாம் என்பதன் அளவுகோல் நிறைந்த பாட்டு.

மனோ, சித்ராவுக்கு ரஹ்மான் கொடுத்த எண்ணற்ற அதி சிறந்த சாகித்தியங்களைத் தாண்டி இந்தப் பாடலில் அவர்களைக் கூட்டி வைத்துக் கொடுத்த மாயாஜாலத்தைத் தான் அதிகம் ரசிப்பேன்.


டுடுக் டுடுக் டுட்டுக் டுட்டுக்

அந்த இடையிசையில் மனுசக் குரல் ஜாலமும் அதனோடு இழைந்த வாத்தியச் சுற்றுமாக அளவான பதார்த்தம்.


வவுனியா குருமண்காட்டில் தங்கி பல்கலைக் கல்லூரியில் ஒரு சில மாதங்கள் வாழ்ந்த இருப்பை நினைவுபடுத்தும் பாட்டு.


இரவு எட்டிப் பார்க்கும் நேரம் அந்தச் சிறு குடிலில் தங்கியிருந்த நாலு நண்பர்களும், ஒரு வவுனியா வாசி நண்பரும், நானுமாக சம்மணமிட்டு இருந்து ஒரு சின்ன Tape recorder இல் பாட்டைப் போட்டு விட்டு ரசிப்போம். 

எமது அதிகபட்ச சந்தோஷமே அந்த மாலை நேரப் பாட்டுக் கச்சேரி தான்.

எங்கள் எல்லோருக்கும் பாட வராது. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் இசை விமர்சகர் சுப்புடு ஒளிந்திருப்பார்.

அந்த விமர்சனங்களுக்குத் தப்பிப் பிழைத்த பாட்டு. 

பாடல் வரிகளை, சூழலைத் தாண்டி அந்த முகப்பிசையும், இடையிசையும் இன்று வரை மனசில் அலை போல் மோதி விட்டுப் போகும்.


ரஹ்மான் வாழ்க ❤️


கானா பிரபா

06.01.2026

0 comments: