ஒரு பாடகரே பாடலாசிரியராகி இன்னொரு பாடகரின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலான புதுமையையும் தமிழ் சினிமா கண்டிருந்தது.
வா சகி வாசகி
வள்ளுவன் வாசுகி
பாடலை எழுதியவர் புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சக பாடகர் நெப்போலியன் என்ற அருண்மொழி.
பாடலைப் பாடியளித்துத் தன் பாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர்
இன்றைய பிறந்த நாள் நாயகர்
ஹரிஷ் ராகவேந்திரா.
“சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் பாரக்கிறது”
சோகம் பொழியும் இந்தப் பாடல்தான் ஹரிஷுக்கு முதல் வாய்ப்பு.
தாலி புதுசு படத்திக்காக தெலுங்கின் புகழ்பூத்த இசையமைப்பாளர் சோமன் ராஜூ இசையளித்தது.
இந்த மாதிரி ஒரு அபசகுனமாக எழும் பாடல் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கும் வாய்த்தது “விதியின் விளையாட்டு” படத்தில் “என் ஆசை பாழானது ஏனோ” என்று தான் தொடங்கினார்.
அந்தப் படம் வெளிவரவில்லை.
அது போலவே ஒரு நல்ல முகவரியை அளித்து, தாலி புதுசு படத்துக்கு முன்பே வித்யாசாகர் இசையில் அற்புதமான அந்த “வா சகி” பாடல் அரசியல் படத்துக்காகப் பாடி முந்தி வெளியீடு கண்டது.
ஹரிஷ் ராகவேந்திராவோடு கூடப் பாடிய உமா ரமணன் ராசிக் கணக்கும் அப்படி.
“பூங்கதவே தாழ் திறவாய்” பாடல் தான் தாமதமாக வந்து தீபன் சக்ரவர்த்திக்குப் புகழ் அளித்தது போலவே இங்கும் நடந்தது. இன்னும் சொல்லப் போனால்
விஜய் என்ற பெயரில் வந்த உன்னிமேனனோடு உமாரணன் ஜோடி சேர்ந்த “பொன்மானே கோபம் ஏனோ” கூடச் சேர்த்தி.
இந்த ஜோடி சில வருடங்களுக்குப் பின்
“கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” பாடலிலும் இணைந்து வசீகரித்தார்கள்.
வா சகி
வாசகி
வள்ளுவன் வாசுகி
என்று எடுத்த எடுப்பிலேயே சினிமா இலக்கணத்தில் குழைத்து வார்த்தை விளையாட்டுக் காட்டியவர்
இந்த குளமெங்கும்
பொங்கும் அலை இங்கு
“கல்லை எறிந்தவன் நீ”
“ஒரு கள்ளம் புரிந்தவள் நீ”
என்று பாட்டு நெடுக வார்த்தை ஜாலம் காட்டுவார் பாடலாசிரியர் அருண்மொழி.
ஒரு புதுப் பாடலை எடுத்து அதிகபட்சமாக அழகுபடுத்தித் தருவார் ஹரிஷ். கூடப் பாடியவர் உச்ச ஸ்தாயியில் நின்று சிக்சர் அடிக்கும் போது கவனமாக வாங்கி தாழ் பரப்பில் நின்று விளையாடுவார்.
அதனால் தான் முப்பது வருடங்களைத் தொடப் போகும் தன் பாட்டுப் பயணத்திலும்
தென்றல் நிலவோடு சேர்ந்து
கருவான இளைய மகரந்தமாய்
விளங்குகிறார் எங்கள் ஹரிஷ் ராகவேந்திரா.
கானா பிரபா
06.12.2025


0 comments:
Post a Comment