“பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு”
https://www.youtube.com/watch?v=wH4pDX05nck
என் வானொலிக் காலத்தின் ஆரம்ப நாட்களில் பெண் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக அர்ப்பணிக்கும் போது, மானசீகமாக இளையராஜா தன் மகளைப் பல்லக்கில் சுமக்க வைத்த பாட்டு என்று எண்ணுவேன்.
இசைஞானி இளையராஜா தன் மனைவியைப் பிரிந்த போது நட்பு வட்டத்தில் நம் குடும்பத்தில் எழுந்த இழப்பாக நாம் பரிதவித்த அதே உணர்வை இன்றைய விடிகாலை பவதாரிணியின் இழப்பை எதிர்கொண்ட போது உள் வாங்கினேன்.
“பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும்.
பவதாரிணி குழந்தைப் பாடகியாகத் தன் எட்டாவது வயதில் குழந்தைப் பாடகியாகத் தன் தந்தை இளையராஜா இசையிலேயே அறிமுகமானது, இந்தியாவின் முதல் 3D திரைப்படமான “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்துக்காக, “தித்தித்தே தாளம்” என்ற மலையாளப் பாடலின் வழியே.“குயிலே குயிலே குயிலக்கா”
https://www.youtube.com/watch?v=NOvNMnpJ-9U
பாடலை சித்ராவோடு “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்துக்காக குழந்தைப் பாடகியாகத் தந்தை இளையராஜா இசையில் பாடிய வகையில் நூறைத் தொடும் திரையிசைப் பாடல்களைத் தன் தந்தை இசையில் பாடியிருக்கிறார்.
தவிர “அம்மா பாமாலை” போன்ற தனி இசை வெளியீடுகளிலும் தன் மகளின் குரலை இசைக்க வைத்திருக்கிறார்.
"பவதாரிணியோடு, வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா இவர்களை இணைத்து, சித்ராவோடு பாடவைத்தேன்" என்று பவதாரிணியின் சித்தப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பாடல் “கோயில் மணியோசை” படத்துக்காக அமைந்த
“ஓடப்பட்டி பிச்சமுத்து”
https://www.youtube.com/watch?v=UHU4WOAghTw
இளையராஜா, கங்கை அமரன் தவிர்ந்து, தன் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஆகியோர் இசையிலும் பாடியவர் சிற்பியின் இசையில் “ஆல்ப்ஸ் மலைக்காற்று” வழி புகழ் சேர்த்தவர்.
தன் அண்ணன் கார்த்திக் ராஜாவின் முதல் படத்தில் “நதியோரம்” (அலெக்சாண்டர்) பாடலில் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்து பாடியவர், இந்த ஜோடிக் குரல்கள் அதிகம் ஹிட் கொடுத்திருக்கின்றன என்று சொல்ல வைத்தன.
யுவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் தோள் கொடுத்தவர் பவதாரணி. யுவன் முதலில் இசையமைத்த “ஆல் த பெஸ்ட்” (அரவிந்தன்), “நீ இல்லை என்றால்” (தீனா), “மெர்க்குரிப் பூவே” (புதிய கீதை” என்று அது நீளும்.
பெண்களை முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்களாக வைத்து நடிகை ரேவதி இயக்கிப் பெரும் புகழைப் பெற்ற மித்ர் மை ப்ரெண்ட் (2002) படத்தின் மூலம் இசையமைப்பாளரான பவதாரிணி கடந்த 22 ஆண்டுகளில் , “இலக்கணம்”, “அமிர்தம்” தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடத்தில் பத்துப் படங்களை இசையமைத்திருக்கிறார்.
பாவலர் வரதராஜன் சகோதர்கள், அவர்களின் வாரிசுகளில் ஒரே பெண் வாரிசு இசையமைப்பாளராகத் தனித்துவம் படைத்தார்.
“மங்காத்தா” படத்தின் இசையுருவாக்கத்தில் யுவன், பிரேம்ஜி மட்டுமல்ல, கூட்டு முயற்சியில் பவதாவும் கூட உதவினார் என்று வெங்கட் பிரபு கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.
“அஞ்சலி” படத்தின் குழந்தைப் பாடல்கள், அப்படியே தென்றல் சுடும் படத்தில் ஜானகியோடு ‘தூரி தூரி” என்று தொடர்ந்த பவதாரிணியின் பாட்டுப் பயணத்தில் “பாரதி” தேசிய விருதை வாங்கிக் கொடுத்தார்
“மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக. இதை எழுதும் போதே
“வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி”
என்று காதுக்குள் ரீங்காரமிடுகிறார் பவதாரிணி.
இளையராஜாவின் இசையில் பவதாரிணியின் அடுத்த பயணம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அமைந்த போது
“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும்.
“இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” பாடல் ஒரு தசாப்தம் பல லட்சம் தமிழர் வீட்டுப் பிறந்த நாள் பாட்டுக் குரலாகவே ஆகிப் போனார்.
“ஒளியிலே தெரிவது தேவதையா” அழகியின் அடையாளக் குரலாக இன்று வரை பவதா தெரிகிறார்.
ஆத்மாத்தமாக பவதாரிணியின் குரல்களில்
“உன் காதலன்” (நானும் ஒரு இந்தியன்/தேசியப் பறவை)
https://www.youtube.com/watch?v=OBT2WFCpalQ
மற்றும்
“ஆலமரம் மேல வரும்” (செந்தூரம்)
https://www.youtube.com/watch?v=ZHSPM7EiQpg
ஆகிய பாடல்களைத் தேடி ரசிப்பேன்.
“அலை மீது விளையாடும் இளம் தென்றலே”
https://www.youtube.com/watch?v=zxwJMG1OKz8
ஒரு சின்னப் பாட்டுக்குள் பேரலையாய் நம்மை ஆக்கிரமிப்பார் பவதாரிணி.
“கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி”
https://www.youtube.com/watch?v=fYzDNepWXLI
இந்தப் பாடலை இப்போது நினைத்துப் பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது.
“பவதா!” என்று ராஜா தன் மகளை அழைக்கும் பாங்கை நினைத்துப் பார்ப்பேன்.
“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.
வெளி உலகம் தெரியாது இசையே உலகமாகக் கொண்ட இளையராஜாவின் பிறந்த நாட்களில் அவருக்குப் பக்கத்தில் சின்னக் குழந்தை போல கேக் ஊட்டி மகிழும் அந்தச் செல்வ மகளின் பூரித்த கண்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது.
எம் பெருமான் சிவனை நினைக்கும் போது எழும்
“ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி”
https://www.youtube.com/watch?v=cqGblneQY2w
பாடலை இந்த நேரத்தில் மனசாரக் கேட்டு, எங்கள் பவதாரிணி இறைவனின் பாதத்தில் இளைப்பாறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
கானா பிரபா
26.01.2024
0 comments:
Post a Comment