Pages

Wednesday, January 10, 2024

❤️❤️❤️ கருப்பு நிலா விஜயகாந்துக்கு கான கந்தர்வன் ஜேசுதாஸ் ❤️❤️❤️

ஏதோ நினைவுகள்.....

கனவுகள்......

மனதிலே....மலருதே....

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே.....

https://www.youtube.com/watch?v=rUyraZFVPA8

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரையுலகத் திறவுகோல்

பாட்டு, நம்மில் பலருக்கோ வசந்த கால நினைவுகளைக் கிளப்பும் நெம்புகோல் அது.

இப்படியாக போர்க்குணம் கொண்ட இளைஞன் விஜயகாந்தின் ஆரம்பம் தொட்டு அவர் தம் முக்கியமான படங்களிலே குரலாக அணி செய்தவர் கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ்.

“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே”

“புலன் விசாரணை” என்றொரு திகிலூட்டும் படத்தில் விறைப்பான அதிகாரியின் கனிவான முகத்தை அணி செய்ய ஜேசுதாஸ் குரலே போதுமானதே?

“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு” கேட்டால் அந்த நிறை மாதப் பெண்ணைத் தாங்கும் கணவன் குரலோடு கேப்டனின் முகமும் அல்லவா நிறைந்திருக்கும்?

கேப்டனுக்காக எழுச்சி முரசாகவும், ஜோடிக் குரலாகவும் T.M.செளந்தரராஜன் தொட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று அடுத்த யுகத்தின் முன்னணிப் பாடகர் வரிசை நீண்டு கொண்டு போகும்.

“உள்ளமெல்லாம் தள்ளாடுதே

 உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் போராடுதே”

https://www.youtube.com/watch?v=YGBrg32T2U0

என்று இந்தியத் திரையிசையின் மேதமையான சலீல் செளத்ரியுடமும் தப்பாமல் ஜேசுதாஸ் விஜயகாந்திடம் போய்ச் சேர்ந்தவர், அளவு கணக்கில்லாத இளையராஜா பாடல்களில் எல்லாவிதமான உணர்வோட்டங்களிலும் தீனி போட்டிருக்கிறார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கொடுத்த விஜயகாந்தின் ஜேசுதாஸ் பாடிய “ஶ்ரீரஞ்சனி” https://youtu.be/hMRuCrsojbE?si=7zS1MRda0cpNEIne பாடலை இதுவரை கேட்காதவர்கள் கேட்டுவிட்டு ஓடி வாருங்கள். அரிதாக விளைந்த திரையிசை முத்து அது.

அதுபோலவே இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் இளையகங்கை இசையமைத்த “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” பாடலை இன்னும் கூட இலங்கையின் பண்பலைகள் விட்டுக் கொடுக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

“தோடி ராகம் பாடவா...

 மெல்லப் பாடு....”

அன்று ஆல் இந்தியா ரேடியோவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்ட காலத்து ஞாபகங்களை சந்திரபோஸ் ஜேசுதாஸ் ஊடாக விஜயகாந்த் வழி கடத்துவார்.

ஒரு சில படங்களே இசையமைத்த தேவேந்திரனிடம் கூட

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” என்றும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” என்றும் 80களின் இளைஞர்களின் சோக ராகத்தை ஜேசுதாஸ் விஜயகாந்த் வழி கடத்தினார்.

சங்கர்- கணேஷ் இசையமையத்த ஒரு தொகை படங்களாய் விஜய்காந்த் நடித்த போது “சித்திரமே உன் விழிகள்” பாடலையும் அவர்கள் தம் பங்குக்குக் கொடுத்ததையெல்லாம் இலங்கை வானொலியின் பொற்காலம் பறையும்.

விஜய்காந்த் என்றதோர் ஆக்ரோஷமான நாயகனுக்கு ஜெயேட்டனும், தாஸேட்டனும் அளவெடுத்த குரலாய் அமைந்ததுதான் ஆச்சரியம்.

அதனால் தான் கொண்டாட்டம், தத்துவம், சோகம் என்று எல்லாவிதமான கலவைகளிலும் அவருக்காக அவர்கள் பாடியபோது அவரே ஆகினர். 

“நிலைமாறும் உலகில் 

நிலைக்கும் என்ற கனவில் 

வாழும் மனித ஜாதி

அதில் வாழ்வதில்லை நீதி"

கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாட்டு வந்தது என்னவோ விஜய்காந்தின் “ஊமை விழிகள்" திரைப்படம் தான். ஆனால் அவருக்காக அந்தப் படத்தில் அமைந்ததல்ல. இருந்தாலும் என்ன, அவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுக்க, தொலைக்காட்சி ஒன்று அடிக்கடி இந்தப் பாடலை ஒலிபரப்பி சோக வலையில் சிக்கி இருந்தது அன்றைய தினம்.  

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்களிலும், இன்னொருவருக்கான குரலாகவும் அவ்விதம் அணி சேர்த்த ஜேசுதாஸ், அன்று கேப்டனின் தோழன் சந்திரசேகருக்கான ஜோடிப் பாடலான 

“ரெண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம்" (சிவப்பு மல்லி)

கொடுத்ததைக் காலம் தான் மறந்து போகுமா?

அதுபோலவே “நம்பினால் கெடுவதில்லை” என்று அதே பெயரில் வெளிவந்த படத்திலும், “கண்ணே வா” (குழந்தை ஏசு), “ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை” (மக்கள் ஆணையிட்டால்), “ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு" (சட்டம் ஒரு விளையாட்டு) என்று விஜயகாந்த் படங்களில் இன்னொருவருக்காக ஜேசுதாஸ் பாடியவை என்ற கணக்கு நீண்டு செல்லும்.

ஜேசுதாஸை இணை நாயகன் ரகுமானுக்குப் பாட வைத்து, விஜயகாந்துக்கு சுரேந்தரைப் பாடவைத்த “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” (வசந்த ராகம்) தந்த புதுமையை மறக்கத்தான் முடியுமா? ஆரம்ப காலத்தில் எஸ்.என்.சுரேந்தர் தான் விஜயகாந்தின் பின்னணிக் குரலாகவும் இருந்தவர். கானாபிரபா

தொடந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக அன்று தொட்டு ஈராயிரம் வரை குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸின் பாடல் தொகுப்பை இங்கே முழுதுமாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. எதோ நினைவுகள் – அகல்விளக்கு (இளையராஜா)

2. உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

3. இன்றோ மனம் கலங்கி – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

4. சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் ( சங்கர் – கணேஷ்)

5. மச்சமுள்ள பச்சக்கிளி – சபாஷ் (சங்கர் – கணேஷ்)

6. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் (இளையராஜா)

7. அலை அலையாய் – நாளை உனது நாள் (இளையராஜா)

8. பூவோ பொன்னோ – புதுயுகம் (கங்கை அமரன்)

9. ஒரே ராகம் – அமுத கானம் (இளையராஜா)

10. மாலைக் கருக்கலில் – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

11. மாலைக் கருக்கலில் (சோகம்) – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

12. உன் பார்வையில் – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

13. உன் பார்வையில் (தனித்து) – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

14. இச்சென்று முத்தம் – எனக்கு நானே நீதிபதி (இளையராஜா)

15. ஊருக்கு உழைத்தான் – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

16. தொடு தொடு – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

17. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை ( இளையராஜா)

18. உணவினிலே நஞ்சு வைத்தான் – வேலுண்டு வினையில்லை ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

19. வங்காளக் கடலே – மனதில் உறுதி வேண்டும் (இளையராஜா)

20. ராத்திரிக்கு கொஞ்சம் – காலையும் நீயே மாலையும் நீயே ( தேவேந்திரன்)

21. சிந்திய வெண்மணி – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

22. அடி கானக் கருங்குயிலே – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

23. ஶ்ரீரஞ்சனி – தம்பி தங்கக் கம்பி ( கங்கை அமரன்)

24. முத்துக்கள் பதிக்காத கண்ணில் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

25. வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

26. மீனாட்சி கல்யாண வைபோகமே – மீனாட்சி திருவிளையாடல் ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

27. குயிலே குயிலே – புலன் விசாரணை ( இளையராஜா)

28. ஓ தென்றலே – சந்தனக் காற்று (சங்கர்-கணேஷ்)

29. அதிசய நடமிடும் – சிறையில் பூத்த சின்னமலர் ( இளையராஜா)

30. காலை நேரம் – மாநகர காவல் (சந்திரபோஸ்)

31. தோடி ராகம் பாடவா - மாநகர காவல் (சந்திரபோஸ்)

32. சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

33. ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

34. – ஆகாயம் கொண்டாடும் (சோகம்) – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

35. சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் (அரவிந்த் சித்தார்த்தா)

36. வண்ணக்கிளி வண்ண – காவியத் தலைவன் ( அரவிந்த் சித்தார்த்தா)

37. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி ( இளையராஜா)

38. வண்ணமொழி மானே – சேதுபதி ஐபிஎஸ் ( இளையராஜா)

39. ரோஜா வண்ண ரோஜா – வாஞ்சி நாதன் (கார்த்திக் ராஜா)

40. தந்தனத் தந்தன தை மாசம் – தவசி (வித்யாசாகர்)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நாமும் அவர் தம் பாடல்களோடு கொண்டாடி மகிழ்வோம்.

கானா பிரபா

10.01.2024

1 comments:

Anonymous said...

கேப்டன் கே ஜே ஏசுதாஸ் காம்போ பாடல்கள் அருமை