Pages

Thursday, February 18, 2021

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குப் பாட்டெழுதிய எழுத்தாளர் ஜெயகாந்தன்




“பார்த்தீங்களாங்கோ.....

செருப்புக் கூடப் புதுசா இருந்தாகக் கடிக்குதுங்கோ...

அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களோங்கோ?

அவள் சிரித்துக் கொண்டு தான் சொன்னாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்”

இரட்டை வாழ்வில் அந்தரிக்கும் மனதின் சஞ்சாரத்தை இருவேறு கோணங்களில் காட்டிய “புதுச் செருப்புக் கடிக்கும்” சிறுகதையின் நிறைவுப் பாகத்தைத் தான் மேலே கொடுத்திருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது சிறுகதை இது.

பின்னாளில் ஜெயகாந்தன் தன் குழுவோடு தயாரித்து இயக்கிய “புதுச் செருப்பு கடிக்கும்” படத்தின் மூலக்கதை இதுவாகத்தான் இருக்கும். ஆனால் படம் எடுத்தும் வெளிவராத நிலையில் இதுவும் அந்தரத்தில் நிற்கும் கேள்வியாக.

“புதுச் செருப்பு கடிக்கும்” படத்தை எத்தனை பேர் நினைப்பில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தை இன்னொரு வழியில் அக்காலத்தில் பிரபலப்படுத்திய நிகழ்வு ஒன்று இருந்தது. அது தான் “சித்திரப்பூச்சேலை” என்ற பாட்டு, ஜெயகாந்தன் எழுதியது. இந்தப் பாடல் பச்சையாக, ஆபாசம் தெறிக்கிறது என்ற கூவல்களும் எழுந்தன. ஆனால் இலங்கை வானொலியின் பொற்கால யுகத்தில் விலத்த முடியாத பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

“சித்திரப்பூ சேலை......

சிவந்த முகம் சிரிப்பரும்பு

முத்துச்சுடர் மேனி 

எழில் மூடி வரும் முழு நிலவோ

மூடி வரும் முழு நிலவோ......”

https://www.youtube.com/watch?v=sYHe8oXaJfQ

எம்.பி.ஶ்ரீனிவாசன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாட்டு. இந்தப் பாட்டு வெளிவந்து (1978) 43 வருடங்களாகி விட்டது இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிவந்த பாடல்களை நிறுத்துப் பார்த்தால் இங்கே ஆபாசத்தின் அளவுகோல் எங்கே நிற்கின்றது என்பதையும், அது காலத்துக்குக் காலம் வெவ்வேறு அளவுகோல் கொண்டும் கணிக்கப்படுகின்றது என்றும் பார்க்க முடியும்.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலை முன்னுறித்தி, இடையிசையிலும் அடக்கி வாசித்து ஒரு அமைதியான நீரோடை போலப் பயணிக்கும். அதீத ஆலாபனைகள் இன்றி ஒரு மனக்கிளர்ச்சியின் வார்த்தை விபரிப்பாகவே பாடும் பாங்கிருக்கும்.

“தென்றலில் நீந்திடும் சோலையிலே 

சிட்டுக்குருவி ஆடுது 

தன் பெட்டைத் துணையைத் தேடுது….”

https://www.youtube.com/watch?v=wplkczKa3Zg

எம்.பி.ஶ்ரீனிவாசனை இலங்கை வானொலி ரசிகர்களுக்கு இரவின் மடியில் காலத்து இலங்கை வானொலி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பாட்டு அது. “பாதை தெரியுது பார்” வழியாகத் தமிழுக்கு அடையாளப்பட்ட அந்த இசையமைப்பாளர் P.B.ஶ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகிக்குக் காலம் மறக்கவொண்ண அற்புதப் பாடலாக அதைக் கொடுத்து விட்டார். 

இந்தப் பாடலைப் பற்றிப் பேசும் போது இன்னொருவரையும் மறக்கக் கூடாது. அவர் இந்தப் பாடலை எழுதிய ஜெயகாந்தனே தான். பாதை தெரியுது பார் படம் மார்க்சிய சிந்தனைகளைத் திரையில் காண்பிக்க வடிகால் தேடிய படம். எனவே ஜெயகாந்தனும் தோழர்களோடு சேர்ந்து தன் பங்களிப்பை இவ்விதம் வழங்கினார்.

“கண்டதைச் சொல்லுகிறேன்

உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்

உமக்கு காரணம் உண்டென்றால்

அவமானம் எனக்குண்டோ...?

https://www.youtube.com/watch?v=8dpZi5Qcdl4

“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற தன் படைப்பு திரைக்காவியமாக பிம்சிங் இயக்கத்தில் வெளிவந்த போது பாடல்களை எழுதிய ஜெயகாந்தன், இங்கே கண்டதைச் சொல்லுகிறேன் பாடல் வழியாகக் கதையைக் கோடிட்டுக் காட்டியும் விட்டது அது உங்கள் கதையைச் சொல்லுகிறேன் என்றொரு பீடிகையும் போட்டு விட்டார். மெல்லிசை மன்னர் படங்களின் அசரீரிக் குரலாகப் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்ததொன்று இது.

“வேறு இடம் தேடிப் போவாளோ, இந்த

வேதனையில் இருந்து மீள்வாளோ...?

https://www.youtube.com/watch?v=HXkpklmE9LM

கதையின் நாயகிக்காக எழுத்தாளனின் அனுதாபப் பார்வை கொண்டு எழுதப்பட்ட பாட்டு, ஜெயகாந்தன் வரிகளுக்கு வாணி ஜெயராம் பாடுவார்.

தொடர்ந்து வெளிவந்த “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்ற தன் நாவலின் திரை வடித்துக்கான பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதினார். 

"நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்

முடிவில்லாத துயரிலும் சுப முடிவைக் காணும் இவள் மனம்"

https://www.youtube.com/watch?v=YlFwADCUMuo

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில் ஜாலி ஏப்ரஹாம் & சசிரேகா பாடிய அற்புதமான பாட்டு.

“புதுச் செருப்பு கடிக்கும்” படத்தைப் போலவே இன்னொரு வெளிவராத படத்துக்கும் ஜெயகாந்தன் பாட்டு எழுதியிருக்கின்றார். 

அது, இசைஞானி இளையராஜா இசையமைத்த “எத்தனை கோணம் எத்தனை பார்வை”. ஜெயகாந்தனின் நாவல்களைத் (சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) தன் தந்தை பீம்சிங் இயக்கியது போலவே இங்கே பாடலாசிரியராக பீம்சிங் மகன் லெனின் இயக்கிய படம் அது.

ஒளவையார், தியாகராஜ சுவாமிகள், மகாகவி சுப்ரமணிய பாரதியார், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (அலைபாயுதே கண்ணா), இவர்களோடு ஜெயகாந்தனும் அப்படத்தில் பாட்டெழுதினார். ஒன்றல்ல இரண்டு, இரண்டுமே மலேசியா வாசுதேவன் பாடியவை, “புகழ் சேர்க்கும்” மற்றும் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” ஆகிய பாட்டுகள் தான் அவை.

ஜெயகாந்தனைத் தன் வழிகாட்டிகளில் ஒருவராகக் கொண்ட இளையராஜாவுக்கும் இவ்விதம் ஒரு வாய்ப்புக் கிட்டியது.

"நல்லதென்பதும் தீயதென்பதும்

 நாமணிந்திடும் வேடமே....- இதில்

வெல்வதென்னடி தோல்வியென்னடி

மேடையில் ஓர் விளையாடலில்" - ஜெயகாந்தன்

கானா பிரபா

0 comments: