Pages

Wednesday, February 17, 2021

பாடகர் எஸ்.என்.சுரேந்தர் ❤️ தனிமையிலே ஒரு ராகமாய்


குரல் வளம் கொண்ட ஒரு கலைஞர் பாடகராகவோ, இன்னொரு நடிகருக்கான குரல் வங்கியாகவோ அன்றில் வானொலிப் படைப்பாளியாகவோ மிளிர முடியும். இதில் ஒருவரே பாடகராகவும், நடிகரின் குரல் அடையாளமாகவும் மிளிர்வதென்பது அசாத்தியமானதொரு செயற்பாடு. உச்சம் பெற்ற பாடகர்கள் குரல் கொடுக்கும் போது அவர்களாகவே அடையாளப்படுவார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு விதிவிலக்குத் தமிழ் திரையுலகில் இருக்குமென்றால் அது ஒருவரை நோக்கிக் கை காட்டி விடும். 
அவர் தான் எஸ்.என்.சுரேந்தர்.

“மெளன ராகம்” படத்தை 35 வருடங்கள் கழித்தும் இன்னும் நேசிக்கும் போது அந்தக் கணவன் பாத்திரம் மீதான அனுதாப உணர்வு மேலெழும்புவதற்கு முதற் காரணம் தன்னை விட்டு விலகி நிற்கும் மனைவியைச் சகித்துக் கொண்டே தணிந்த குரலில் பேசும் அந்தப் பாத்திரப் படைப்பு. இதை எழுதும் போதே மனதில் அந்த மோகன் குரல் ஒலிப்பது போல இருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் விஜயகாந்த், பிரதாப் போன்றோரின் ஆரம்ப காலப் படங்கள் தொட்டு, பின்னர் மோகனின் மெல்லத் திறந்தது உள்ளிட்டவை வரை சுரேந்தர் என்ற குரல் கலைஞர் “அடையாளமாகி இருந்தார். அந்த வெற்றிகளுக்கெல்லாம் மறை பொருள் காரணியாக இருந்தார்.  
நடிகர்களுக்குப் பின்னணிக் குரலை அச்சொட்டாகக் கொடுப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, சாதாரண ரசிகர் நமக்கும் பல சந்தர்ப்பங்களில் உய்த்துணர முடிந்திருக்கின்றது பொருந்தாக் குரல்கள் மொழி மாற்றுப் படங்கள் போல.

ஆனால் எத்தனை எத்தனை நூறு நாட் படங்கள், சுரேந்தர் குரல் பின்னணிக்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் பாட்டுக்கு என்று ஒரே நடிகருக்கு அபூர்வமான குரல் சேர்க்கைகள். இரண்டுமே வெவ்வேறு பரிமாணம் கொண்டவை.

மங்கை நீ மாங்கனி...
மடல் விடும்...
மல்லிகை வாழ்த்திடும்...
மழைத்துளி...
சிந்திடும் புன்னகை...
சிந்தாமணி...
நடக்கும் தோட்டம் நீ...
நானொரு தேனீ...

இந்தப் பாடலை இன்னும் ஒரு சொட்டுப் பாடக் கூடாதா என்ற ஆவலைக் கிளப்பிவிடும் அந்த கஸல் வடிவமான தமிழ்.
பாடகராக எஸ்.என்.சுரேந்தரை நினைத்தாலேயே தொண்ணூறுகளில் பாட்டுகளோடு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு இதுதான் நினைப்புக்கு வரும். ஆனால் நம் அண்ணன்களைக் கேட்டுப் பாருங்கள்.
“தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்”
என்று முணுமுணுப்பார்கள் அந்த ரேடியோ சிலோன் காலத்தைச் சிலாகித்துக் கொண்டு.
அந்தக் காலத்தில் விதி படத்தின் கதை,வசன ஒலிநாடா ஒலிக்காத தேநீர்க்கடைகளே இல்லை எனலாம். அங்கே மன்மதக் குஞ்சு மோகனின் பசப்பு வார்த்தைகளுக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் சுரேந்தர் குரலை ரசித்தவாறே கடப்போம்.

சுரேந்தரின் குரலில் இருக்கும் அதிராத நாதம், அந்தக் காலத்துப் பாடகர்களை நினைப்பூட்டி விடும். அதனால் தானோ என்னமோ 
“பாரிஜாதப் பூவே 
அந்த தேவலோகத் தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓஓஓ
மதன ராகம் பாட வந்திடு”
என்று இசைஞானியும் நாற்பதுகளின் குரலைத் தொண்ணூறுகளில் கொணர்ந்திருப்பார் எஸ்.என்.சுரேந்தர் வழி. இந்த மாதிரியான உத்திகளுக்குத் தோதாய் வாய்த்தவர்கள் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியோடு சுரேந்தரும் தான் என்று நீங்கா இடம் பிடித்து வைத்திருக்கின்றார்.
நடிகர் விஜய்யின் தாய்மாமன், ஆரம்ப கால விஜய் படங்களில் விஜய்க்கான குரலாகத் தன் இரண்டாவது தலைமுறை இணைப்பை வைத்திருக்கிறார். “சின்னப் பையன் சின்னப் பொண்ணைக் காதலிச்சா பாட்டு வரும்” (தேவா), “பூவே பூவே பெண் பூவே (ஒன்ஸ்மோர்) எல்லாம் தொண்ணூறுகளைத் தாண்டி நிலைத்திருக்கின்றன. விஜய் பாடகராக அறியப்பட்ட பின்னரும் இவர் குரலிலும் மெலிதான வேறுபாடு தான்,

எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் தன்னுடைய மைத்துனர் சுரேந்தருக்கும் ஒரு பாடலை, அதுவும் அதிகப்படியான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் இசையில் பெற்றிருக்கின்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல் படமான அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தில் தன் சகோதரி ஷோபாவோடு “மாலை இளம் மனதில்” பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” வசந்த ராகம் பாட்டுகள் அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார் ஸ்பீக்கர்களின் சோக ராகம்.
விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் முன்னர் குறிப்பிட்ட தனிமையிலே ஒரு ராகம் (சட்டம் ஒரு இருட்டறை) பாடலைப் போன்றே இன்னொரு பிரபலப்பாட்டு
“ நீலகிரிப் பூவே” 
கங்கை அமரன் இசையில் குடும்பம் படத்தில் வந்த கலக்கலான பாட்டு அது.

மனோஜ் கியான் இரட்டையர்கள் மிரட்டிய ஊமை விழிகள் படத்தில் முத்தான மூன்று பாட்டுகள். அதில் “மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா” பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருந்தது. இப்போதும் ஊர்ப் பக்கம் போனால் எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்.
கங்கை அமரன் இசையில் அடிக்கடி சிலாகிக்கும் பாட்டு “சங்கீதம் கேளு” (ஜீவா) அங்கே மலேசியா அண்ணர் பாட இடையில் வந்து தன் அடையாளத்தை நிறுவுவார்.
“தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி” போன்ற பிரபல பாடகர் கூட்டுப் பாடல்களில் சுரேந்தருக்கும் ஒரு இடம் இருக்குமாறு இசைஞானி பார்த்துக் கொள்வார்.
எஸ்.என்.சுரேந்தர், எண்பதுகளில் இருந்து நாம் கூட நேசிக்கும் குரலாளருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
கானா பிரபா

0 comments: