Pages

Tuesday, December 10, 2019

மனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும்“ஆறெங்கும் தானுறங்க
ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க
திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா”

யாரடா இது அச்சு அசலா இளையராஜாத்தனத்தோடு பாட்டுப் போட்டிருக்கிறது என்று அப்போது ஆச்சரியப்பட்டுப் போனோம். ஆனால் அந்த ஆச்சரியம் தொண்ணூறுகளில் அகல விரியும் என்று அப்போது எமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம் எண்பதுகளில் ஒரேயொரு ராஜா அது இளையராஜா என்று தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த சூழல் அது. அப்போது சந்திரபோஸ், அவ்வப்போது கங்கை அமரன், அடிக்கடி T.ராஜேந்தர் என்று இசையுலக சிற்றரசர்களையும் நம் காதுகள் அரவணைத்து உபசரித்த போதும் இம்மாதிரிப் புது வரவுகள் கிரீடம் சூட்டுவார்களா என்று எட்டிப் பார்த்ததுண்டு. அப்படியொரு யோகம் தான் “மனசுக்கேத்த மகராசா” படப் பாடல்களைக் கேட்ட போதும்.

"மனசுக்கேத்த மகராசா" ராமராஜன் இயக்குநர்  பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.
அப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது. முன்னர் மாட்டுக்கார மன்னாரு படத்துக்கு C.தேவா என்ற அறிமுகத்தோடு வந்திருந்தாலும் இந்தப் படம் தான் அவருக்கு A தர நிலையில் கிடைத்த திருப்புமுனை.

"மனதோடு மனோ" ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.

ராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் "ஆறெங்கும் தானுறங்க" (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே "பாடலும் கூட.

மனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.

"மனசுக்கேத்த மகராசா" படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர்
தீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து "மண்ணுக்கேத்த மைந்தன்" திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற "சிந்தாமணிக்குயிலே" (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய "ஓடுகிற வண்டி ஓட", "கண்ணில் ஆடும் நிலவே" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். "மண்ணுக்கேத்த மைந்தன்" படத்தின் பாடல்கள் "வைகாசி பொறந்தாச்சு" படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை.

ராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.

சினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) - தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்)  அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் "மனசுக்கேத்த மகராசா" வில் தொடங்கி "வைகாசி பொறந்தாச்சு" தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மனசுக்கேத்த மகராசா பாடல்கள் எல்லாமே சிறப்பான தெம்மாங்கும், நவீனமும் சேர்ந்த கலவை என்றாலும் தேவா மிகவும் நுட்பமான
இசைத் திறனைக் காட்டிய வகையில் “முகமொரு நிலா” பாடலைத் தான் கை காட்டுவேன்.
அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.

தேனிசைத் தென்றல் தேவா - பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் கூட்டணி தனித்துவமாக நோக்கப்பட வேண்டியது. அது குறித்துப் பின்னர் பேசுவேன். இங்கே ஒரு தகவலுக்காக
மட்டும் ஒரு செய்தி. காளிதாசன் தன் இயற்பெயரான திருப்பத்தூரான் என்ற பெயரிலேயே மனசுக்கேத்த மகராசாவில் அடையாளப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சக பாடல் பங்களிப்பை வழங்கியவர் புலவர் புலமைப் பித்தன்.

நடிகர் ராமராஜன் இயக்குநராக இருந்த சமயம் அவர் இயக்கத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது “மண்ணுக்கேத்த பொண்ணு”. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. பின்னர் இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர்  தீனதயாள் வெற்றிக் கூட்டணியாக மனசுக்கேத்த மகராசா படத்தில் அறியப்பட, பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் இதே கூட்டணி
இணைந்து கொடுக்க இருந்த திரைப்படம்
“மண்ணுக்கேத்த மைந்தன்”.

வேடிக்கை என்னவென்றால் அண்ணாமலை ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் வானமே எல்லை பாடல்கள் இருக்க அந்த வகையில் வானமே எல்லை பாடல்களைக் கேட்டு ரசித்தது போல, வைகாசி பொறந்தாச்சு படத்தின் ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் “மண்ணுக்கேத்த மைந்தன்” பாடல்கள் இருந்தது. அதனாலேயே இந்தப் படப் பாடல்களை அப்போது கேட்டு ரசிக்க வாய்ப்புக் கிட்டியது.

“சிந்தாமணிக் குயிலே
மணக்கும் புது
செந்தாழம் பூ மடலே.....”

எடுத்த எடுப்பிலேயே மண்ணுக்கேத்த மைந்தன் படப் பாடல்களில் ஈர்ப்பை ஏற்படுத்தியது இதுதான். கோவை கமலா முதல் எஸ்.பி.பி வரை எல்லா ரகப் பாடகர்களையும் இந்தப் படத்திலும் தேவா பாட வைத்ததைத் தனியே குறிப்பிட வேண்டும்.

“ஓடுகிற வண்டியோட
ஒத்துமையா ரெண்டு மாடு”
இன்றும் கூட இலங்கை வானொலிகளில் அடி தூள் பின்னுகிற பாட்டு இது. மண்ணுக்கேத்த மைந்தனை இன்றும் மறவாமல் வைத்திருக்கிறது ஏ.ஆர்.ஷேக் முகம்மதுவின் குரலில் வந்த இந்தப் பாட்டு.

ஆரம்பத்தில் பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை திரைப்படத்திலும் ஒரு ஆன்மிகப் பாடல் அதுவும் கிறீஸ்தவப் பாடலுக்கு ஒத்திகை எடுத்தது
“ஒன்றே வானம் ஒன்றே பூமி
ஒன்றே தெய்வம் சொல்லுங்கள்” பாடல். மலேசியா வாசுதேவன் பாடியதால் “தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே” பாடலைச் சம நேரத்தில் நினைவுபடுத்தும் இது.

“கண்ணில் ஆடும் நிலவே
 சந்தோஷக் கவிதை பாடும் குயிலே”
பின்னாளில் தேவாவுக்கென்று தனி முத்திரைப் பாடல்களை இனம் காண இந்த “கண்ணில் ஆடும் நிலவே” பாணியிலேயே பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். தேவாவின் இசைக்கான தனி வடிவத்தைக் கொடுத்த பாடல்களில் இந்த எஸ்.பி.பி & சித்ரா கூட்டுப் பாடல் முக்கியமானது. தொண்ணூறுகளில் தேவா கொடுத்த ஒரு தொகைப் பாடல்களின் முன்னோடி இசை இதுவெனலாம்.

ஏனோ காரணத்தால் மண்ணுக்கேத்த மைந்தன் படம் வரவில்லை. ஆனால் பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர்  தீனதயாள் என்ற மூவர் கூட்டணியின் இன்னொரு வெற்றிச் சித்திரமாக அமைந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேவா பிரபலமாகி விட்ட காலத்தின் பின்னர்
“ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க“ பாடலைக் கேட்கும் போது ஆர்மோனியப்பெட்டி சகிதம் மெட்டுப் போட்டுப் போட்டு அவரே பாடுவது போன்ற உணர்வே எழும்.

“மனசுக்கேத்த மகராசா”
பாடல்களைக் கேட்க

https://youtu.be/CXCbYjxyUlo

“மண்ணுக்கேத்த மைந்தன்”
பாடல்களைக் கேட்க

https://youtu.be/Go6cdHmFnZ0

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
10.12.2019

0 comments: