Pages

Saturday, August 24, 2019

அபூர்வ சகோதரர்கள் 💃🏃🏾‍♂️ முப்பது ஆண்டுகள் ❤️

கலைஞானி கமலஹாசனின் பொன் விழா கடந்த திரை வாழ்வில் மட்டுமல்ல நூற்றாண்டு கண்ட சினிமா வாழ்விலும் தவிர்க்க முடியாத படைப்பு இந்த அபூர்வ சகோதரர்கள் என்றால் அதற்கு மிகையில்லை. இந்த முப்பது ஆண்டுகள் கடந்தும் அண்மையில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்த Zero படத்தை ஒப்பிட்டு கமலுக்கு முன் யாரும் இந்த மாதிரி முயற்சியைச் சாத்தியப்படுத்த முடியாது என்ற விமர்சனங்கள் வழியாக இந்த அபூர்வ சகோதரர்கள் “அப்பு” இன்னும் ஜீவித்துக் கொண்டேயிருக்கிறார்.
முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள். கமல்ஹாசன் அந்தக் காலத்துப் படத் தலைப்புகளைத் தன் படங்களில் மீளப் பாவிக்கவும் அபூர்வ சகோதரர்கள் அடிகோலியது.
தமிழ்த் திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலமே இந்த அபூர்வ சகோதரர்கள் கதை உருவாக்கத்தில் தன்னுடைய பங்கு இருந்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். அதுவரை எடுத்த காட்சிகள் திருப்தி இல்லாத சூழலில் கமலின் வேண்டுகோளுக்கிணங்க ஒரே வாரத்தில் கதையை மாற்றிக் கொடுத்த கதையைத் தன் திரைத்தொண்டர் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
சேதுபதி என்ற மிடுக்கான போலீஸ் அதிகாரி, அப்பு என்ற வேடிக்கையும் பழிவாங்கும் குணமும் நிறைந்த அப்பு, ராஜா என்ற அசட்டுப் பையன் என்று மூன்று வேடங்களில் கமல் அதகளம் பண்ணியிருப்பார். கூடவே ஶ்ரீவித்யா, மனோரமா, கெளதமி, ரூபிணி என்று பெண் பாத்திரங்களுக்கும் நிறைவான காட்சிகளோடு இந்தப் பக்கம் நாகேஷ், டெல்லி கணேஷ், ஜெய்சங்கர் என்று ஆண் நடிகர் கூட்டமும் பளிச்சிடும்.
இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளர் P.C.ஶ்ரீராம், லெனின் - V.T.விஜயன் (படத்தொகுப்பு) போன்ற உன்னத படைப்பாளிகளுடன் கை கோர்ப்பு.
கணினித் தொழில் நுட்பம் இல்லாத அந்தக் குட்டி கமல் வித்தை இன்று வரை புரியாத தொழில் நுட்பம்.
“தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க” என்று நெகிழ்ந்துருகும் கான்ஸ்டபிள் ஆர்.எஸ்.சிவாஜி,
“பாடி அம்பு
அம்புல பாடி பாடில அம்பு
அம்பு எதுல இருந்து வரும்?
வில்லுல இருந்து
வில்லுல இருந்து அம்பை யார் விடுவான்?
ராஜா
பாட்டு, வில்லு,
வில்லுப்பாட்டு
கண்டுபிடிச்சிட்டேன்....”
என்று கொக்கரிக்கும் ஜனகராஜ் நிலத்தில் ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டே துப்பறியும் காட்சிகளை இப்போது பார்த்தாலும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கும்.
கிரேஸி மோகன் என்ற அற்புதமான வசனகர்த்தா தொடர்ந்து கமலோடு இணைந்து பணியாற்ற சிறப்பான அடித்தளமிட்டது இந்த அபூர்வ சகோதரர்கள். பழிவாங்கும் கதையை எவ்வளவு ஜாலியாகச் சொல்லலாம் என்பதை இந்தப் படம் பாடமெடுத்துக் காட்டியது. அதுவும் ஒவ்வொரு பழிவாங்கலுக்கும் அப்பு கமல் தன் எல்லைக்குட்பட்டுத் தயார் பண்ணும் கொலைக்கருவிகள், ஜெமினி சார்க்கஸ் களம் வரை சாமர்த்தியமான அணுகுமுறை இந்தப் படத்தில் இருக்கும். ஒரு வெற்றிகரமான படத்தில் எல்லாமே தானாகவே சரியாக அமைந்து விடும் என்பதற்கு இதுவொரு சான்று.
1989 ஆம் ஆண்டு சித்திரை வருடப் பிறப்பு வெளியீடாக வந்த இந்தப் படத்தின் வழியாக சிறந்த நடிகர் விருதை கமல்ஹாசன் தமிழ்நாடு அரசு மற்றும்
பிலிம்ஃபேர் வழியாகப் பெற்றார்.
குள்ள கமலை வில்லனின் அடியாட்கள் தூக்கிக் கொண்டு வரும் போது “பாதி தான் வருது மீதி எங்கேடா” என்று நாகேஷ் shooting spot இல் திடீரென்று அடித்த பஞ்ச் எல்லாம் இந்தப் படத்தின் பின்னணி வரலாறு கூறும் பக்கங்கள். அபூர்வ சகோதரர்கள் பட உருவாக்கம் குறித்து கமல் மனம் திறந்து ஒரு புத்தகம் போட்டாலும் தகும். கூடவே இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவும் பங்கெடுக்க வேண்டும்.
“ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே” அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் தொடங்கிய காதல் சோக கீதம் இன்னும் விடாமல் ஒலிக்கிறது. முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்றைய விடலைகளுக்கு அது ஓர் ஒத்தடம். வாழ வைக்கும் காதலுக்கு ஜே, புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல, அண்ணாத்தே ஆடுறார் என்று எதை எடுக்க எதைத் தவிர்க்க எல்லாமே வாலிகளின் வரிகளில் இசைஞானியாரின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிச் சரித்திரம் படைத்தன. புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா ஒலிக்காத அன்றைய கல்யாண வீடுகளிலில்லை. “அம்மாவை நான் காலைத் தொட்டு கும்புடணும் டோய்” என்ற ஏற்கனவே கமல் பாடி பதிவு செய்த பாட்டு (ராஜா கைய வச்சா காட்சிச் சூழலில் கமலின் அம்மாவாக காந்திமதி நடிப்பில்) சமீபத்தில் ரமி இசைத்தட்டில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபூர்வ சகோதரர்கள் 25 வாரங்கள் ஓடிய வெற்றிச் சித்திரம். இன்றளவும் அதைத் தினமும் சிந்திக்க வைக்கும் அளவுக்குப் பாடல்களும், பின்னணி இசையுமாக இளையராஜாவின் வெற்றிகளில் ஒரு மாணிக்கக் கல் இது.
சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.
தொடக்கத்தில் இருந்தே பரபரப்பு, ஓட்டம், கிலி, சோகம், ஹாஸ்யம், வன்மம், துள்ளல் என்று பின்னணி இசையின் மிரட்டல் அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்கள்.
எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)
எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்) இந்த இசை பின்னர் சென்னை 28 இலும் கையாளப்பட்டிருக்கும்.
குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)
அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)
ரூபிணி அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்
அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் வாத்திய இசை)
அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)
அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)
அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)
அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு
இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது
கானா பிரபா
07.08.2019

0 comments: