Pages

Sunday, February 25, 2018

ஶ்ரீதேவி 💐💐💐


“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.
பாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.

“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின் அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.

தன் காதலனைக் கொன்றவன் வீட்டில் அவனின் சித்தியாகச் சென்று வில்லனுக்கே வில்லத்தனம் காட்டும் மூன்று முடிச்சிலும், பட்டுக்காட்டுப் பூமியில் ஏட்டறவு கிட்டிய அளவுக்குப் பட்டறவு இல்லாத வெள்ளாந்தி மயிலு ஆகப் 16 வயதினிலே என்றும், சேலையை வாரி மூடிக் கட்டிய தோற்றத்தில் பாடகி அர்ச்சனாவாக  ஜானியிலும் பயணித்தவருக்குக் காத்திருந்து வந்து சேர்ந்தது போலக் கிட்டியது விஜி என்ற வெகுளிப் பாத்திரம். விஜி தன் பிரியமுள்ள நாய்க்குட்டி சுப்பிரமணியோடும் தன் காவலன் சீனுவோடு ஒட்டி உறவாடிப் பாசமழை பொழியும் காட்சிகள் எங்கள் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட ஒருத்தரின் வாழ்வில் நடந்தது போலவிருக்கும்.
சீனு விஜிக்கு நரிக்கதை சொல்லும் காட்சியில் https://youtu.be/vPsHZYU1lVo விஜி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டுப் போனதன் சிறுதுளி அது. பின்னர் பாலிவூட் திரையுலகை “சத்மா” வழியாகத் தட்ட இப்படமே அவருக்குப் பாலமாக அமைந்தது.

ஒரு காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னி ஶ்ரீதேவி. ஆனால் பாருங்கள் இந்த மாதிரியானதொரு ஈர்ப்பை ஏற்படுத்த அவர் கவர்ச்சி என்னும் அஸ்திரத்தை அப்போது பயன்படுத்தவில்லை. ஶ்ரீதேவி வெளிப்படுத்தியது பாந்தமானதொரு அழகு. அதுவே இந்த ஈர்ப்பின் மைய விசை. சுரேஷ் - நதியா காலத்துக்கு முன்பே கமல்ஹாசன் - ஶ்ரீதேவி என்ற ஜோடி தமிழ்த் திரையுலகின் ஏக பிரபலம். 

தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஶ்ரீதேவி படங்கள் என்றால் “தனிக்காட்டு ராஜா”, “வறுமையின் நிறம் சிகப்பு” ஶ்ரீதேவிகள் தான் அதிகம் பிடிக்கும். அதிலும் வேலை ஒன்றும் கிட்டாத விரக்தியிலிருக்கும் காதலனிடமிருந்து விலகி மீண்டும் சேரும் கணங்களில் தன்னை நிரூபிப்பார். தனிக்காட்டு ராஜாவிலும் காதல் முறிவோடு நிற்கும் தனிமரமாகக் குடும்ப வாழ்வை எதிர்கொள்வார்.
மலையாளத்து முன்னணி இயக்குநர்  ஐ.வி.சசி கொடுத்த பகலில் ஓர் இரவு ஶ்ரீதேவிக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருந்தது. இன்னும் மூன்றாம் பிறை, கல்யாணராமன், வாழ்வே மாயம் எல்லாம் நினைப்பில் வரும் போது மீண்டும் கோகிலா மடிசார் பொண்ணை எப்படி மறக்க முடியும்? பெண் பார்க்கும் போது நாணிக் குறுகி முறுவலோடு பாடும் அந்தக் கன்னி மணம் முடித்த பின் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைக்கத் துடிக்கும் குடும்பப் பெண்ணாக மாறுவாரே அங்கே தெறிக்கும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி.
கவரிமான் படத்தில் தப்பார்த்தம் கற்பித்துத் தன் தந்தையோடு முரண்படும் மகளாவும் பின்னர் தன்னைக் காக்க வந்த பின் உண்மை தெரிந்து குமுறும் கட்டம் எல்லாம் உச்சம்.

“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” (16 வயதினிலே), “”மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாணராமன்), “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே” (ஜானி) என்று பாடல்களில் எல்லாம் வியாபித்து நிற்பார் அவர். எண்பதுகளில் ஜெய்சங்கர்த்தனமான படங்களில் நடித்துத் தள்ளினாலும் ஶ்ரீதேவிக்கேன்றே அமைந்த படங்களில் தன் இருப்பை அவர் காட்டத் தவறியதில்லை. 

சத்மாவுக்கு முன்பே அவர் ஹிந்தியில் நுழைந்திருந்தாலும், தெலுங்கின் மசாலா மன்னன் இயக்குநர் கே.ராகவேந்திரராவ் மீள எடுத்த ஹிந்திப்படம் ஹிம்மத்வாலா அதிரி புதிரி வெற்றியோடு நாகினா, சாந்தினி, மிஸ்டர் இந்தியா என்று ஶ்ரீதேவிக்கான வட நாட்டு, தெலுங்கு திரைப்பயணம் நீண்ட விரிவான கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.

ஹிந்திக்குப் போன ஶ்ரீதேவிக்குத் தமிழ்ப் பட வரவுகள் கதவைத் தட்டினாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தால் மெல்ல அவரின் இடத்தைப் பலர் நிரப்பினார்கள். “நான் அடிமையில்லை” படம் கூட ஒரு சிறு இடைவேளைக்குப் பின் நடித்து வந்ததது.

மீண்டும் சில வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்தார். ஆனால் "காதல் தேவதை" என்ற மொழி மாற்றப் படம் மூலமாக.
"ஜெகதீக வீருடு அதி லோக சுந்தரி" என்ற தெலுங்குப் படம், தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு ஶ்ரீதேவி நடிக்க வெளியானது. அந்த ஊர் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்லக் கூடிய மசாலா மன்னர், வசூல் சக்கரவர்த்தி கே.ராகவேந்திரராவ் இயக்கிய படம் அவரின் ராசியை மெய்ப்பிக்கும் விதமாக ஓட்டம்  ஓடி வசூல் மழை பொழிந்தது. தமிழுக்கும் "காதல் தேவதை" என்ற பெயரில் 1990 இல் மொழி மாற்றப்பட்டு வந்தது. 

“எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குதாம்மா?” என்று 
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு விழாவில் வைத்து ஶ்ரீதேவியிடம் கேட்டதே செய்தி ஆகுமளவுக்கு இடைவெளியிருந்தது. மலையாள மூலம் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அப்போதைய முன்னணி நாயகன் அர்விந்த்சாமியுடன் ஜோடி கட்டியும் படம் எடுபடாமல் போனது.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றை ஒரு பெரிய இடைவேளை எடுத்து விட்டு வந்தாலும் நாங்கள் மறக்கவில்லை என்று ஶ்ரீதேவியை அங்கீகரித்தார்கள். அதற்குப் பின் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முக்கிய செய்தி ஆனது இறுதி வரை.

நடிகைகள் மீதான மோகம் எல்லை கடந்து, இவர் என் மனைவி என்று வழக்குப் போடும் மோகம் ஶ்ரீதேவி காலத்தில் ஶ்ரீதேவிக்கும் நிகழ்ந்தது. அது பொய்ச் செய்தியாக இருந்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஊடகங்களின் வாயில். இந்த ஶ்ரீதேவி மோகம் இன்று தெலுங்கு, ஹிந்தி முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மாவுக்குப் பித்து தலைக்கேறும் அளவுக்கு இருக்கிறது.

தன் தாய் அல்லது பாதுகாவலர் கண்காணிப்போடு நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் அந்தப் பாதுகாப்பை இழக்கும் போது நிர்க்கதியாகும் நிலையை நடிகை காஞ்சனா காலத்தில் இருந்து கனகா வரை கண்டிருக்கிறோம். நடிகை ஶ்ரீதேவியின் தாயார் மரணத்தைத் தொடர்ந்து துரத்திய சொத்துப் பிரச்சனையால் உடன் பிறந்தோரால் வழக்கு, நீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்பட்டார். 
ஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் சகோதரருமான போனி கபூரை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய நிலைக்குக் காரணமே இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தேடிய ஶ்ரீதேவியின் இறுதி அடைக்கலம் எனலாம்.

“நினைவலைகள் தொடர்ந்து வந்தால் 
நேரமெல்லாம் கனவலைகள்”

ஶ்ரீதேவி என்ற நம் காலத்து நாயகி இனி ஞாபகங்களில் மட்டும்.

கானா பிரபா
25.02.18

1 comments:

Anonymous said...

Really a great loss