Pages

Tuesday, February 20, 2018

மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐திரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 - 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.


“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே

நீர் கொடுத்த நீரையெல்லாம் 

நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்

சீராக ஏரோட்டி பார் முழுக்க 

சோர் கொடுத்து காக்க போறேன்

ஆதரிக்க வேனும்மையா”


என்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு

“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய படங்களிலும் தொடர்ந்தது.

“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரைக்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.


“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.


இந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட....மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்?


இளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும் 

“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே

ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு” 

பாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே?


“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம்  போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது. 


“கூந்தல் என்ன ஆலம்விழுதோ

குங்குமம்தான் காலைப்பொழுதோ

தேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…

கண்கள் ரெண்டு மீனோ மானோ.....

கன்னம் என்ன பூவோ பொன்னோ....

சின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”


என்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்ளுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.


“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்

சோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.


“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”

அந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.


மோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்

 “கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.


“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.


“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட

பரிமாணம் துலங்கும்.


“ஆத்து மேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.


அதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு  " ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்" அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே "இதப்பார்ரா" என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான். 

“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்

அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,

“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே

எனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற 

ஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.

அது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து. 


“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.


பட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்


கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா - கும்பக்கரை தங்கைய்யா

கூடலூரு குண்டுமல்லி - கும்பக்கரை தங்கய்யா

குத்தாலக் குயிலே - திருமதி பழனிச்சாமி

அடி படகோட்டும்  - சின்னவர்

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி - சக்கரைத் தேவன்

தண்ணீர்குடம் கொண்டு - சக்கரைத் தேவன்

தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு

நான் அப்போது - பகல் நிலவு

மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

ஏறாத மலைமேலே - முதல் மரியாதை

ஆடுதடி - மலையூர் மம்பட்டியான்

அடி மத்தாளம் தான் - மல்லுவேட்டி மைனர்

அண்ணனுக்கு - தாலாட்டு கேட்குதம்மா

எந்த வேலு வந்தாலும் - மகராசன்

என் ஆசை வாழைக்குருத்தே - கட்டளை

இன்னும் என்ன பேச்சு - ராஜா ராஜா தான்

குயிலுக்கொரு நிறமிருக்கு - சொல்லத் துடிக்குது மனசு

குத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு - சின்னதேவன்

நன்றி உனக்குச் சொல்ல - உத்தம ராசா

கற்பூர தீபத்திலே - ஊரு விட்டு ஊரு வந்து

ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி - நினைவுச் சின்னம்

ஊரெல்லாம் திரு நாளு - என்னை விட்டுப் போகாதே

பூவே பூவே பொன்னம்மா - பாட்டுக்கு நான் அடிமை

தந்தேன் தந்தேன் - வில்லுப்பாட்டுக்காரன்

உட்டாலங்கிரி கிரி மாமா - சின்னவர்

விளக்கேத்து விளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை

வெளக்கு வச்சா - சின்னப் பசங்க நாங்க


(இன்னும் இன்னும் வளரும்)

ராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் :  நன்றி ஸ்டில்ஸ் ரவி


கானா பிரபா

20.02.2018

1 comments:

பனிமலர் said...

உண்மை இந்த கிராமிய கூட்டணி முறிந்து போனது காலக்கொடுமையே. வாசுதேவன் பாடிய மெலோடி மெட்டுகள் ஏராளம். விடியும் வரை காத்திரு படத்தில் இந்துதானி பாணியில் அமைந்த நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு பாடலில் வரும் வாஆஆனம் என்று இடத்தை உதாரணமாக சொல்லாம். அற்புதமான குரல் வளமும் திறனும்...........