Pages

Wednesday, November 30, 2016

வாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது


கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். 
இன்று நவம்பர் 30 ஆம் திகதி தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்.

சாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு  திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.  
கவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.

வாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.

அந்தப் பேட்டியின் வழியாக,
தனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும், 
அதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்

தமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் "தாயும் சேயும்" என்ற வெளிவராத படத்துக்காக "பொன் மயமான காலம் வரும்" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" மற்றும் 

அவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த 
தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல்  16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார். 
தற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

வாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.

ஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.

வாணி ஜெயராமுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.

இதுவரை 18 மொழிகளில், 45 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வரும் வாணி ஜெயராம் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.


வாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய வானொலிப் பேட்டியைக் கேட்க


(படத்தில் என்னுடன் வாணி & ஜெயராம் தம்பதி)

0 comments: