"ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்
பார்த்துண்டா
ஒரு ஏலம்பூவு எலந்தம்பூவைச்
சேர்த்ததுண்டா
மோகம் கொடுக்கும் மார்கழிப்பூ
தாகம் தணிக்கும் தாவணிப்பூ"
முத்தான வரிகளோடு அமையும் இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் பாடலாசிரியர் மு.மேத்தா.
'புண்ணியவதி' திரைப்படத்துக்க்காக இசைஞானி இளையராஜா இசையமைத்து சித்ராவோடு இணைந்து பாடியிருப்பார்.
பாடலின் சிறப்பே கூட்டுக் குரல்களோடு ஆரம்பிக்கும் சங்கதி தான்,
"மேலமாசி வீதியிலே மேளச் சத்தம் கேக்குதடி
மீனுகண்ணு மீனாட்சியின் முத்துமணி மாலை ஒண்ணு
உன் மேனியிலே சூடிக் கொண்டு
சோடி ஒண்ணைத் தேடி வந்த
முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
அடி முத்தம்மா முத்தம்மா முத்தம்மா"
என்றவாறே ஆலாபனைக்குள் போய் விட, பாட்டுச் சோடி ராஜாவும், சித்ராவும் தொடர்வார்கள்.
பண்பலை வானொலிகளின் ஆரம்பத்தில் இந்தப் பாடலும் அவற்றுக்குச் சோறு போட்ட பாடலாக அமைந்திருந்தது அந்தக் காலகட்டத்தில்.
இம்மாதிரி நல்ல பாடல்களுக்கு வேறு மாதிரியான துரதிஷ்டம் அமைந்து விடுவதுண்டு. படம் தயாரிப்பில் இருந்து வெளிவருவதற்கு முன்னரேயே படத்தின் தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டு விட்டதால் வெளிவராமலேயே முடங்கிவிட்டது.
இதே படம் தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு முதலில் பாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. அது குறித்த என் முந்திய இடுகை
http://www.radiospathy.com/2013/03/blog-post_25.html
அந்தக் காலகட்டத்தின் பிரபல நாயகி சங்கீதாவோடு, ஜோடி சேர்ந்து நடித்திருந்தவர் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனித்துக் கொண்ட சுப்புராஜ். ஆளின் தோற்றத்தைப் பார்க்கும் போது ராஜ்கிரண் தனமாக இந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடும். இந்த சுப்புராஜ் ஐ இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் துணை நடிகராகத் திரையில் கண்டிருப்பீர்கள்.
இயக்குநராக இவ்வளவு தூரம் வந்தவரின் பயணம் தன் முதல் படத்தில் விளைந்த துர் அதிஷ்டத்தோடு இன்னொரு திசைக்குக் கொண்டு போய் விட்டுவிட்டிருக்கிறது.
"ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப் பார்த்துண்டா" கேட்கும் போது உங்களைத் தன் மீது இருத்தி அந்தத் தொண்ணூறுகளுக்குப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கும் புஷ்பக விமானம் இந்தப் பாடல்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இதுவரை கேள்விப்பாடத பாடல்.பகிர்வுக்கு நன்றிகள்.
Post a Comment