இசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம். அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை. ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம். இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை. இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த பாடல்கள். இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே.
இளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைக் கொடுத்திருப்பார். இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி, ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.
மேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள். ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார். எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன.
இளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், ருத்ர வீணா, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் தவிர, அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம். நெற்றிக்கண் எனக்குள் ஒருவன், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பூவிலங்கு, சிவா, ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுதிப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று.
ரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை.
மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேலைக்காரன் படம் உருவானது. கவிதாலயா தயாரிப்பு, ரஜினி நடிப்பு, இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார்.
கே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை. திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும்.
முன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம். கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம்.
கே.பாலசந்தர். ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள். இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார். மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார்.
சில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து "பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே" பாடல் ஒலிக்கிறது.
ஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகளை, கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை. வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன். பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை edit பண்ணி YouTube இல் ஏற்றுகிறேன். அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள்.
சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான். இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.
அந்தப் பாடலின் முழுக் காணொளி
இங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள். சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன். ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன்.
3 comments:
சிறந்த ஆய்வுப் பகிர்வு
மிக்க நன்றி
ஆகா! அபாரம்!! கே.பி.யின் தீவிர ரசிகன் நான். சிறுவயது முதலே அவரது படங்கள் மேல் அளவில்லா ஈர்ப்புண்டு. அழகான பாத்திரப் படைப்பு, அழுத்தமான காட்சிகள், நச்சென்ற வசனங்கள், கதையோடு இழைந்த இசை, புதுமையான காட்சியமைப்பு என இயக்குனர்களின் சிகரமாக திகழ்வதில் ஆச்சரியமில்லை.
குறியீட்டுப் பாத்திரங்கள் பற்றி தனிப் பதிவே போடுவது போல், அவரது பெண் பாத்திரங்கள் பற்றியும் தனித் தனி பதிவு போடலாம். கலெக்டர் ஜானகி, லலிதா, M.R.பைரவி, கவிதா, அனு, கண்ணம்மா, சிந்து, நந்தினி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா ரஞ்சன், சஹானா. இவை பெயர்கள் மட்டும் அல்ல. நம்மோடு வாழும் கதாபாத்திரங்கள். ஒரு கல்லைக்கூட நடிக்கவைத்துவிடுவார். எஸ்.பி.பி, வாலி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்று நடிகர்கள் அல்லாதவரையும் அற்புதமாக நடிக்க வைத்திருக்கிறார். கமல், ரஜினி, முதல் பிரகாஷ் ராஜ், விவேக் வரை எண்ணற்ற திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.
இசை பற்றி குறிப்பிட்டே ஆகா வேண்டும். //வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர்// இந்தப் பட்டியலில் தேவாவையும் சேர்த்துக் கொள்ளலாம். கல்கி படத்தில் தேவாவின் இசை அந்தக் காலக்கட்டத்தில் அவர் அளித்திருந்த இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ராஜா-கே.பி.யின் பிரிவு இசைப் பிரியர்களின் பேரிழப்பு. ரகுமானை மணிரத்னம் அறிமுகப் படுத்தி இருந்தாலும் ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே.பி அங்கீகரித்ததால்தான் அது சாத்தியப் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
Happy B'day and Long Live KB!
- Kaarthik Arul
Post a Comment