Pages

Wednesday, July 2, 2014

பாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி


ஒலி நாடாக்களின் யுகம் வழக்கொழிந்து போகும் நேரத்தில் இந்தப் பாடலை அடிக்கடி நினைவுபடுத்தும் என்னிடமிருக்கும் இந்தப் படத்தின்     ஒலியிழைப் பேழை.

சிட்னியில் இருக்கும் நம்மூர் மளிகைக்கடையில் 15 வருஷங்களுக்கு முன்னர் இதைக் கண்டபோது முதலில் வாங்க வைத்ததே "நீ வருவாய் என" பாடல்கள் இருப்பதால் தான். வாங்கிய பின்னர் தான் தெரிந்தது கூடவே இருக்கும் சக படங்களான அந்தப்புரம், கண்களின் வார்த்தைகள் இவற்றின் இசை இளையராஜா என்று. அப்போது தான் எனக்கு அறிமுகமானது "அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி"
இப்படி ஒவ்வொரு பாடல்களும் என்னை வந்தடையும் போது ஏதோவொரு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் வந்துவிடுகின்றன :-)

நேற்று #RajaChorusQuiz இல் இந்தப் பாடலை நான் போட்டிப் பாடலாகக் கொடுத்த போது பலருக்கு அதுவே முதல் அனுபவம் என்றும், பாடலை மிகவும் ரசித்துக் கேட்டதாகவும் சொன்னபோது ஏதோ நானே இந்தப் பாடலை இசையமைத்த திருப்தியடைந்தேன்.

"கண்களின் வார்த்தைகள்" திரைப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா.V.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தப் படம் முக்தா பிலிம்ஸ் இன் நூறாவது தயாரிப்பு என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோவொரு சிறப்பு அடையாளத்துடனேயே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விக்ரம், கரண், 
பிரேமா நடித்திருக்கிறார்கள். சேதுவுக்கு முந்திய விக்ரம் என்பதால் வழக்கமான அவரது ஆரம்பகாலத் தோல்வியோடு சேர்ந்துவிட்டது இந்தப் படமும்.

Nammoora mandara hoove என்று கன்னடத்தில் வெளிவந்த படம். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ஷிவ்ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க ரமேஷ் அர்விந்த், பிரேமா ஆகியோர் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜா இசையில் மொத்தம் ஏழு பாடல்கள்.

இளையராஜாவை ஒவ்வொரு மொழிக்காரரும் ஒரு குறிப்பிட்ட படப்பட்டியலோடு வெகுவாகக் கொண்டாடும் போது அந்தப் பட்டியலில் கன்னடம் என்று வரும் போது கண்டிப்பாக இந்தப் பாடல்களும் இருக்கும் அளவுக்கு கன்னடர்களுக்கு இந்தப் படப்பாடல்கள் மேல் கொள்ளைப் பிரியம்.
நான் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால் YouTube இல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் படப்பாடல்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பின்னூட்டங்களில் உச்சி மோந்து பாராட்டிக் கொண்டிருப்பதை ஒரு எட்டு பார்த்து விடுங்கள். 

குறிப்பாக இங்கே நான் பகிர்ந்திருக்கும் "அல்லி சுந்தரவல்லி லாலி" பாடலைத் தமிழில் பாடகர் அருண்மொழியும், மூலப் பாடலான "ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குழுவினரோடு பாடியிருக்கிறார்கள். 
இந்தப் பாடலை ஏற்கனவே தெரிந்த பலருக்கு கன்னடம் வழியாகவே தமிழ் அறிமுகமாகியிருக்கிறது. எனக்கே தலைகீழ். எஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி ஆகிய இரு வேறுபட்ட பரிமாணம் கொண்ட பாடகர்களின் பாடல்களைத் தனித்துக் கேட்கும் போது இரண்டுமே உறுத்தலில்லாமல் ரசிக்க வைத்திருப்பதே சிறப்பு.

சேர்ந்திசைக்கும் குரல்களை பாடல் முழுதும் தூவி, அவர்களையும் சிறு சிறு ஆலாபனை இசைக்க வைத்திருப்பது சிறப்பு. 

சந்தோஷம் கொட்டும் இந்தக் காதல் பாடலில் ஆண்குரல் மட்டும் தனியே இசைக்க, கூட ஜோடி போட்டுப் போட காதலிப்பெண் குரல் இல்லாது அந்தப் பெண்ணின் தோழியர் அவளின் மன நிலையைப் பிரதிபலிக்குமாற்போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதே சீர் பின்பற்றப்பட்டிருக்கும்.

கற்பனை பண்ணிப்பாருங்கள் பாடலில் வரும் தோழிமார் பாடும் பகுதி இல்லாமல் கூட இந்தப் பாடலைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு பாடலை எவ்வளவு தூரம் தனித்துவமாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பின் வெளிப்பாடே அந்தச் சேர்க்கை என்பது புலனாகும்.
பாடலின் இசைக்கோர்ப்பைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் பாடலாசிரியர் பழனிபாரதியின் பங்கும் சிறப்பானது.

இப்படியான பாடல்கள் இன்னும் வெகுவாகக் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கம் இசை ரசிகனுக்கு என்றும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அதையெல்லாம் இசைஞானி கடந்து போய் வெகுகாலமாயிருக்கும்.

"ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி" கன்னடப் பாடலைக் கேட்க

http://soundcloud.com/kanapraba/hallilavaniyalli 

"அல்லி சுந்தரவல்லி லாலி சுபலாலி" தமிழ்ப்பாடலைக் கேட்க

http://soundcloud.com/kanapraba/alli-suntharavalli 

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் பதிவை சிகரம் பாரதி மூலமாக
அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

கானா பிரபா said...

மிக்க நன்றி ஐயா