தமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார். பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.
நான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த "புதிய உலகைத் தேடிப்போகிறேன்" பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.
ஆஸி நாட்டில் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.
2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
இதோ அவரிடம் நான் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்
மிக முக்கியமாக
"இசைஞானி இளையராஜா - கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்
பார்க்கின்றீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.
Download பண்ணிக் கேட்க
மேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,
தமிழ்த்திரையுலகில் நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்
பாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது?
2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த "என்னமோ ஏதோ" உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்
அள்ளித்தந்தது அதைப் பற்றி?
2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்
பகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
பாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்திக்
காட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்?
பாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது
இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
மதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி
http://kobirajkobi.blogspot.com.au
http://www.myoor.com/tamil
2 comments:
அருமையான பேட்டி. பாராட்டுக்கள் :-)
மதன் கார்க்கிக்கு நல்லதொரு பிறந்த நாள் பரிசு!
amas32
மதன் கார்க்கியின் பேட்டியில் அவரது எளிமையும் ,தன்னடக்கமும் இயல்பாகவே வெளிப் பட்டிருக்கின்றன.மகிழ்ச்சி.
Post a Comment