Pages

Tuesday, December 18, 2012

பூமாலையே தோள் சேரவா..தீம்தன தீம்தன...

"பூமாலையே தோள் சேரவா
பூமாலையே ஏங்குமிரு தோள் சேரவா"
அஞ்சனா, சத்யப்ரகாஷ் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, கண்கள் குளமாகின்றன எனக்கு.

படிக்கும் போது சிரிப்பாக இருக்கும் உங்களுக்கு, ஆனால் சற்று முன்னர் அடைந்த பரவசத்தின் வெளிப்பாடு தான் அது. எப்பேர்ப்பட்ட சக்தி இந்தப் பாடலுக்கு.  இருபத்தேழு வருஷங்களுக்கு முன்னர் வந்த பாடல் ஒன்று இன்று கேட்கும் போதும் ஆட்டிப்படைக்கின்றதென்றால் அதை அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவைக்கமுடியாது. எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டுவிட்டோம், ஆனால் இப்பேர்ப்பட்ட பாடலை என்றாவது ஒருநாள் கேட்கும் போதும் ஆயிரம் சுகானுபங்களை அள்ளித் திரட்டிக் கொடுத்துத் தின்ன வைக்கின்றது.

இசைஞானி இளையராஜாவோடு ஜோடி கட்டிய பாடகிகளில், ஜானகியை மட்டுமே முதல் இடத்தில் வைத்து இந்தக் கூட்டணியை ஆராதிக்கத் தோன்றும். சித்ராவோடு ராஜா பாடிய பாடல்கள் தனியே நோக்கப்படவேண்டியது என்றாலும், எஸ்.ஜானகியை இன்னும் விசேஷமாக ராஜாவோடு ஜோடி போட்டு ரசிக்க இன்னொரு காரணம் அவரின் தனித்துவம் தான். எண்பதுகளில் எஸ்.ஜானகி என்றால் ஆம்பளை S.P.B என்றும் S.P.B ஐ பொம்பளை எஸ்.ஜானகி என்னுமளவுக்கு இருவருமே திரையிசைப்பாடல்களில் ஒரு வரையறைக்குள் நில்லாது எல்லாவிதமான சங்கதிகளிலும் பாடித் தீர்த்துவிட்டார்கள். எஸ்.பி.பி நையாண்டியாகச் சிரித்துப் பாடினால் அதற்கு ஈடுகொடுத்து நையாண்டியாகச் சிரித்துப் பாடும் ஜானகியை மட்டுமே ரசிக்கலாம், இன்னொருவர் பாடினால் அது அப்பட்டமான செயற்கையாக இருக்கும். அப்பேர்ப்பட்ட ஜானகி, ராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்களைக் கேட்கும் போது, ராஜாவின் குரல்வளத்துக்கும் அவருடைய அலைவரிசைக்கும் ஏற்றாற்போல இயைந்து பாடுமாற்போல இருக்கும், அங்கேயும் ஒரு செயற்கைத் தனம் இராது. அதனால் தான் இந்தப் பூமாலையையும் நேசிக்கத்தூண்டுகிறது.

ஆர்ப்பரிக்கும் வயலின் ஆலாபனையோடு எஸ்.ஜானகியும், ராஜாவும் பாடும் இந்தப் பாடலில் இருவருமே முன்னணிப்பாடகர்களாகவும், அதே சமயம் பின்னால் இயங்கும் ஒத்திசைப் பாடகராகவும் இரட்டைப் பணியைச் செய்கின்றார்கள்.
ஜானகி பாடும் போது
"இளைய மனது  
                        தீம்தன தீம்தன
இணையும் பொழுது 
தீம்தன தீம்தன ஆஆஆ"
என்று ராஜா பின்பாட்டு பாடுவதும்
நான் உனை நினைக்காத நாளில்லையே..
தேனினை தீண்டாத பூ இல்லையே 
    நனனாஆஆஆ
நான் உனை நினைக்காத நாளில்லையே 
 என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினை தீண்டாத பூ இல்லையே 
ஏங்கும் இளம்காதல் மயில் நான்
  தேன்துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
லலலா ..... லலலா .....
என்று ஜானகி பிற்பாட்டுப் பாடுவதுமாகப் பாடல் முழுவதும் இதே சங்கதிதான்.
இப்படியான பாடல்களை எந்தவித சங்கீதப் பின்னணி இல்லாத நம்மைப் போன்ற சாதாரணர்கள் 
மெட்டில் கொட்டியிருக்கும் ஏற்ற இறக்கங்களைக் கேட்டுக் கிறங்கிவிட்டுப் போகவேண்டியதுதான். 
நுட்பமான சங்கீத அனுபவம் நிரம்பப்பெற்றவர்களுக்கு இன்னும் இந்தப் பாடல் கொடுத்திருக்கும் மேன்மை ஒருபடி மேலே தெரியும்.
இசைஞானி இளையராஜா போன்ற மேதையின் மெட்டை உள்வாங்கிக் கிடைத்த இடத்தில் எல்லாம் தன் ஆளுமையைக் காட்டி அதே சமயம் அதிமேதாவித்தனமாகக் குட்டையைக் குழப்பிவிடாத இங்கிதம் தெரிந்த பாடலாசிரியர்களுள் கங்கை அமரனின் பெருமை அதிகம் உலகம் அறியாதது.
பகல் நிலவு படத்தில் எல்லாப்பாடல்களுமே அவரின் கைவண்ணம் தான். "மைனா மைனா மாமன் புடிச்ச மைனா" என்று எழுதிய அதே கைதான் இந்தப் பாடலையும் எழுதியிருக்கின்றது. மேற்சொன்ன பாடல் வரிகளில் கங்கை அமரன் தன்னுடைய தனித்துவத்தைப் பாடல்வரிகளில் புதைத்திருப்பதை ஒரு உதாரணமாகவே பார்க்கலாம். பின்னால் இழைந்து வரும் அந்த ராஜா, ஜானகியின் வரிகளை டம்மியாக லலலா என்றே முழுதுமாக மெழுகியிருக்கலாம். ஆனால் அங்கும் கூடத் தேர்ந்தெடுத்த வரிகளால் ஜொலிக்க வைக்கிறார். பாடலாசிரியர் கங்கை அமரனின் இப்படியான சொற்சிலம்ப வரிகளை வைத்து ஒரு பட்டியல் போடலாம் என்றால் அவர் அண்ணன் பாடுவதற்காக எழுதிக் கொடுத்ததை வைத்தே கலசத்தில் வைக்கலாம். "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்" நினைவிருக்கும் தானே இந்தப் பாடல் வரிகள்?
இப்படியொரு அழகான பாடலைத் தூக்கிக் கொடுத்து விட்டுக் கடந்து செல்லும் ராஜாவுக்கு விசுவாசமாக அமைந்த காட்சியமைப்பு, கண்ணுக்குள் நிற்குமளவுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது. இருபத்தேழு ஆண்டுகள் என்ன இன்னும் பல தசாப்தங்கள் வாழ்ந்தால் கூடவே பயணிக்கும் இந்தப் பாட்டு. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இன்று கேட்ட அதே பரவசம் வயலின், புல்லாங்குழல், வீணை கொண்டு மனதை மீட்டும்.
 காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அனுபவம், பூமாலையே தோள் சேரவா....

6 comments:

pudugaithendral said...

இளையராஜா குரலில் பாடல் ரொம்ப பிடிக்கும் பாஸ். அதுவும் நீங்க சொன்ன அந்த தீம்தன் தீம்தனவுக்காகவும்.

:))

கோபிநாத் said...

ஒரு பெரும் மழையில் நனைந்த அனுபவம் தல ;))) நன்றி தல ;)

Nat Sriram said...

கலக்கிப்புட்டீர் காபி..சில பாடல்களை எப்போதும் ஸ்கிப் செய்ய முடியாது. அதில் இது முதன்மையானது..

கோமதி அரசு said...

நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.
இப்போது எல்லாம் இந்த பாடலை தொலைக்காட்சியில் பார்த்து இசையை கேட்டு ரசிக்கும் போது இன்பமும் , துன்பமும் சேர்ந்தே வருகிறது, முரளியின் மறைவால்.

விஜய் தொலைக்காட்சியில் பாடியவர்களும் நன்கு பாடினார்கள் அந்த பகிர்வுக்கும் நன்றி.

7&11 adlinks said...

உண்மையோ உண்மை எனக்கு மிக பிடித்த பாடல்களின் வரிசையில் இப்பாடலும் உண்டு.. என் பதினநிது வயதில் இப்பாடலை ஒரு நூறுமுறை கேட்டுகொண்டே இருபேன்..ஏன் என்றால் எத்தன வித்தியாசமான இசை கோர்வை. சொல்லவே தெரியாதது... கழுகு படத்தின் போன்னோவியம். பருவத்தை கிள்ளாதே படத்தின் "எ தென்றலே", சிட்டு குருவி படத்தின் "என் கண்மணி ".. மூடுபணி படத்தின் "பருவகாலங்களின் " வகையை சேர்ந்த மிக சிக்கலான இசைகொர்வையும் கவிதையுமாய் வழியும் பாடல் காண பிரபா. Thanks a lot

7&11 adlinks said...

உண்மையோ உண்மை எனக்கு மிக பிடித்த பாடல்களின் வரிசையில் இப்பாடலும் உண்டு.. என் பதினநிது வயதில் இப்பாடலை ஒரு நூறுமுறை கேட்டுகொண்டே இருபேன்..ஏன் என்றால் எத்தன வித்தியாசமான இசை கோர்வை. சொல்லவே தெரியாதது... கழுகு படத்தின் போன்னோவியம். பருவத்தை கிள்ளாதே படத்தின் "எ தென்றலே", சிட்டு குருவி படத்தின் "என் கண்மணி ".. மூடுபணி படத்தின் "பருவகாலங்களின் " வகையை சேர்ந்த மிக சிக்கலான இசைகொர்வையும் கவிதையுமாய் வழியும் பாடல் காண பிரபா. Thanks a lot