Pages

Thursday, June 21, 2012

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் நினைவில்

இன்று திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நினைவுநாளாகக் கொள்ளப்படும் வேளை அவரின் நினைவின் துளிகளாய், சில பாடல்களோடு ஒரு பகிர்வைக் கொடுக்க எண்ணியிருக்கிறேன். கேரள நாட்டில் இருந்து வந்து தமிழ்த்திரையிசையின் மெல்லிசை மன்னராகப் பவனி வந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதே போல தமிழகத்தின் நாகர்கோயிலில் பிறந்து தமிழ்த்திரையிசையிலும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைப்பாளராக விளங்கியிருந்தாலும் தெலுங்கு தேசத்தில் தான் கே.வி.மகாதேவனின் புகழ் ஒப்பீட்டளவில் தமிழை விடக் கோலோச்சியிருந்தது.

இன்றும் பசுமரத்தாணி போல நினைவிருக்கின்றது, 2001 ஆம் ஆண்டு இதே நாள் சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நமது வானொலி நிலையத்துக்கு வந்த போதுதான் கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது "மாமா" என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார். திரையுலகில் செல்லமாக "மாமா" என்று அழைக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.
கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.

கே.வி.மகாதேவன் எழுபதுக்கு முன் அள்ளிக் கொடுத்த படங்களில் எதை எடுப்பது எதை விடுவது என்று ஒரு சிக்கல் வரும். எனவே எழுபதுகளின் இறுதியில் இருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரை இவரின் இசையில் மலர்ந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.


ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை "ஏணிப்படிகள்" படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, சமீபத்தில் ஜெயராம் நடித்த ஒரு மலையாளப்படம் உட்பட. ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா பாடும் "பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன" என்ற பாடலை இங்கே தருகின்றேன்.

புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் "அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை". தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் "சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது" பாடலோடு இங்கே நான் தரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே" பாடலும் அப்போது ஏகத்துக்கும் பிரபலம்.
நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது "பாய்மரக்கப்பல்". இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்" சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று
கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் "சத்தியம்". இந்தப் படத்தில் "கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்" பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.
"கேளாய் மகனே கேளொரு வார்த்தை" உத்தமன் படத்தில் வரும் இந்தத் தத்துவப்பாடல் டி.எம்.செளந்தரராஜன், சுசீலா குரல்களில் உத்தமன் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் வந்த இனியதொரு பாடலாகும்.

5 comments:

கோபிநாத் said...

அருமையான பதிவு..

சித்தன்555 said...

நன்றி கானா.மேற்சொன்ன எந்தப் பாடலையும் கேவிய சம்பந்தப்படுத்தி யோசிச்சதேயில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன், தமிழுக்குத் தந்த 2 அற்புதப் பழங்கள்= பழம் நீயப்பா (kbs) & எலந்தப் பழம்(lre)

வாழ்க அவர் புகழ்! - தமிழ் சினிமாவின் "பூந்தேனில் கலந்து"!

kaialavuman said...

தேவர்-MGR, AL நாகராஜன் - சிவாஜி இணைந்த படங்கள் என்றால் இசை இன்னிசைச் சக்ரவர்த்தியுடையது தான் என்று பெரும்பாலும் கூறிவிடலாம்.

ஆனால் அதே நேரத்தில் தேவர், MGR, ALN, சிவாஜி ஆகியோரின் பிற படங்களுக்கு மெ.ம. இசை. ஒருவேளை sentiment-தான் காரணமோ?

மெ.ம. பேட்டி காண வாய்ப்பு கிட்டினால் எங்களுக்காக இதைக் கேட்கவும்.

நல்ல பகிர்வு, நன்றிகள்

கானா பிரபா said...

தல கோபி

வருகைக்கு நன்றி ;)

சித்தன்

இந்தப் பாடல்கள் இளையராஜா காலத்தில் அடிபட்டுப் போய்விட்டன

வாங்க கேயாரெஸ்

வணக்கம் வெங்கட ஶ்ரீநிவாசன்

கண்டிப்பாக வாய்ப்பு வரும் போது உங்கள் கேள்வியையும் சேர்ப்பேன்