Pages

Monday, October 10, 2011

இயக்குனர் டி.கே.போஸ் & இசைஞானி இளையராஜா கூட்டணி


எண்பதுகளிலே இசைஞானி, தனிக்காட்டு ராஜாவாக இருந்த நேரம். அவருடைய படத்தை போஸ்டரின் மேல் முகப்பில் ஒரு வட்டத்துக்குள் போட்டாலே போதும் வேறு எந்த சமரசங்களும் இல்லாமல் தயாரிப்பாளர் போட்ட காசுக்கு மேலாக எடுத்துக் கொண்டு போய்விடுவார். அந்த நேரத்தில் ராஜாவின் நாலு பாட்டுக் கிடைத்தால் போதும் அதற்கேற்றாற்போலக் கதை பண்ணிக் காசு பார்த்து விடலாம். இந்த நிலையில் கே.ரங்கராஜ், கங்கை அமரன் போன்ற இயக்குனர்கள் ராஜாவின் இசைக்குத் தோதான கதையைப் பொருத்திப் படம் பண்ணினார்கள். அதிலும் எண்பதுகளிலே கே.ரங்கராஜ் இன் படங்களுக்குத் தான் இசைஞானி இளையராஜா அதிகம் இசையமைத்தார் என்ற பெருமை வேறு.

இந்த வட்டத்தில் இருந்த இன்னொரு இயக்குனர் தான் டி.கே.போஸ். டி.கே.போஸ் இயக்கிய படங்கள் பெரும்பாலும் கங்கை அமரனின் மாமூல் கதைகளாக இருந்த காரணத்தால் அதிகம் தெரியாமலேயே மறைந்து போனவர் இவர். அந்த நேரத்தில் பேசும் படம், பொம்மை போன்ற சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அந்த இதழ்களில் புதுப்படங்கள் குறித்த கண்ணோட்டத்திலேயே டி.கே.போஸ் என்ற இயக்குனர் கவிதை பாடும் அலைகள் என்றதொரு படத்தை இயக்குவதாக அறிந்து கொண்டேன். அப்போது தான் எங்கே படித்த ஞாபகம் , டி.கே.போஸ் உம் இசைஞானி இளையராஜாவும் பால்யகால நண்பர்கள் என்று. கவிதை பாடும் அலைகள் படத்துக்கு முன்பதாகவே என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ராசாவே உன்னை நம்பி ஆகிய படங்களை இசைஞானி இளையராஜாவோடு கூட்டணி அமைத்து இயக்கியிருக்கின்றார் இவர். அப்போதெல்லாம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் சுதி ஏற்றிக் கொண்டு திரிந்த வேளை, பாட்டுக் காட்சியையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வீடியோ கடைகளில் இந்தப் படங்களைத் தேடியெடுத்து நண்பன் வீட்டு வீசிஆரில் போட்டுப் பார்த்ததுண்டு. நாலு பாட்டுக்காக ஒரு முழு நீளப்படத்தையே இரண்டரை மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது. ரஜினி, கமல் என்று கோஷ்டி அமைத்துப் படம் பார்க்கும் நண்பர் கூட்டத்தில், இளையராஜாவுக்காக ராமராஜனையும், புதுமுகத்தையும் பார்க்கும் சகிப்புத் தன்மை எனக்கு இருக்கலாம், கூட்டாளிகளுக்கு இருக்குமா? அடிக்கடி பல்பு வாங்கினேன். அதிலும் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தை நான் பரிந்துரைக்கப் போய், வீடியோக்கடையில் வாங்கி வீட்டுக்காரரோடு படம் பார்த்த இன்னொரு நண்பன் கொடுத்த சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.
ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியது அந்தப் படத்தில் வந்த எல்லாப் பாடல்களுமே அப்போது சென்னை வானொலியில் பிரபலப்படுத்தப்பட்டவை.


டி.கே.போஸ் என்ற இயக்குனர் தன்னளவில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய படங்களை அதிகம் கொடுக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜாவோடு இணைந்த இந்தப் படங்களே அவருக்கான விலாசத்தைக் கொடுத்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 18, 2011 இல் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இவரின் நினைவாக, டி.கே.போஸ், ராஜாவோடு கூட்டணி அமைத்த படங்களின் பாடற் தொகுப்பை இங்கே தருகின்றேன்.



பொங்கி வரும் காவேரி படத்திற்காக வரும் "வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணுமணி" அருண்மொழியோடு சித்ரா


ராசாவே உன்னை நம்பி படத்தில் வரும் "ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புத் தான்" மனோவோடு பி.சுசீலா


என்னை விட்டுப் போகாதே படத்திற்காக"பொன்னப்போல ஆத்தா" பாடும் இசைஞானி இளையராஜா


கவிதை பாடும் அலைகள் படத்தில் வரும் முத்தான மூன்று பாடல்கள் இனி

"உன்னைக் காணாமல் நான் ஏது" அருண்மொழி, சித்ராவோடு


"வானிலா தேனிலா வாடைப்பூ நிலா" மனோவும், சித்ராவும்


"கண்ணே என் கண்மணியே" மனோவும், சித்ராவும்

6 comments:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

எண்பதுகளில் இளையராஜாவால் வாழ்ந்தவர்களில் ராமராஜனும் ஒருவர்.என் அண்ணா ராமராஜன் ஹிட்ஸ் என்றே தனியா வச்சிருக்காங்க.எல்லாமே இளையராஜா தான் இசை.அவ்வளவும் முத்துக்கள்.ராசாத்தி மனசுல ,கண்ணே என் கண்மணியே ,வெள்ளிக் கொலுசு மணி பல முறை கேட்டிருக்கிறேன்.உன்னைக் காணாமல் நான் ஏது பாடல் படம் என்னன்னு தெரியாது ஆனா அண்ணன் கேசட் உபயத்தில் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்.இவர் தான் இயக்குனர் என்பது இப்போ தான் தெரியும்.//பெரும்பாலும் கங்கை அமரனின் மாமூல் கதைகளாக இருந்த காரணத்தால் அதிகம் தெரியாமலேயே மறைந்து போனவர் இவர். // இதான் காரணம்.கங்கை அமரன் என்றே நினைத்திருக்கிறேன்.

//வீடியோக்கடையில் வாங்கி வீட்டுக்காரரோடு படம் பார்த்த இன்னொரு நண்பன் கொடுத்த சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.//

ஹா ஹா ஹா ஹா :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

அந்தக் காலத்தில் கிராமத்தில் மூன்று நாட்கள் ஓடினாலே அது பெரிய விஷயம்.குறைவான ஆட்கள் பார்க்க ஓரிரு நாட்களே போதுமானது.ஆனால் பொங்கி வரும் காவேரி ஐந்து நாட்கள் ஹவுஸ் புல் ஆக ஓடியதாக என் அண்ணன் தகவல் சொல்லிருக்காங்க.ரிப்பீட்டட் ஆடியன்ஸ் நிறைய அந்தப் படத்திற்கு..

கோபிநாத் said...

அழ்ந்த இரங்கல்கள் ;-(

தல இப்போது தான் தெரியும் இப்படி ஒரு இயக்குனர் இருக்காருன்னு...நாம எங்க இயக்குனர் பெயரை எல்லாம் பார்த்தோம் !

\\சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.\\

கண்டிப்பாக சொல்ல வேண்டும் ;-)

நன்றி தல !

கைப்புள்ள said...

டி.கே.போஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். நல்ல பகிர்வு அண்ணே...அனைத்தும் முத்தான பாடல்கள்.

Thameez said...

இது டி.கே.போஸ் மறைந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டியது. அவருடைய எல்லா படங்களும் மொக்கை தான். ஆனால் பாட்டுகள் ராசா நண்பனுக்கு துரோகமே பண்ணவில்லை. நீங்க இங்கே சொல்லி இருக்கும் அணைத்து பாடல்களும் கண்டிப்பாக சொல்கிறேன் மாற்று கருது இருக்காது என்று நம்புவோம். இன்னும் நாலு வருடங்கள் கழித்து கேட்டால் கூட நன்றாக தான் இருக்கும்.

கானா பிரபா said...

வாங்க உமாகிருஷ்,

கிராமங்களில் ராமராஜன் படைத்த சாதனை வரலாறு.


வருகைக்கு நன்றி தல கோபி