Pages

Sunday, November 21, 2010

பாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)


பாடகர் இளையராஜா என்ற தொகுப்பு ஆரம்பித்து இசைஞானி இளையராஜாவின் தேர்ந்த முத்துக்களைத் தொடராகக் கொடுக்கவிருந்தேன். பாகம் ஒன்றோடு அது இடை நடுவில் நின்று விட்டது. இதோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.

பாகம் 2 இல் இளையராஜா பாடிய மேற்கத்தேய இசைக்கலவையோடு இணைந்த பாடற் தொகுப்புக்கள் அணி செய்கின்றன. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் அவருக்கே உரித்தான கிராமிய மணம் கமிழும் பாடல்கள், தாயின் மகிமை குறித்த பாடல்கள் போலவே "ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாணியிலான மேற்கத்தேய இசை கலந்த பாடல்களும் தனித்துவமானவை. இவற்றில் பெரும்பாலானவை கோஷ்டி கானங்களாகத் தான் இருக்கும். அக்னி நட்சத்திரம் படப்பாடலான "ராஜா ராஜாதினெங்கள் ராஜா" பாடல் மூலமே இந்தவகையான பாடல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து ராஜா அள்ளி வழங்கியிருந்தார். அவற்றில் ஐந்து முத்துக்களை இங்கே கோர்த்துத் தருகின்றேன்.



அந்தவகையில் முதலில் வருவது "பொண்டாட்டி தேவை" படத்தில் வரும் "யாரடி நான் தேடும் காதலி". ராஜா இல்லாமல் சந்திரபோஸ் துணையோடு தன் முதற்படமான புதிய பாதை" படத்தை எடுத்துப் பெருவெற்றி கண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இரண்டாவது படம் "பொண்டாட்டி தேவை". வித்தியாசமான ஒரு கதைப்புலத்தைக் கொண்டிருந்தாலும் படம் தோல்விப்படமா அமைந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப்பாடல்களுமே இப்படத்தில் கலக்கலாக இருக்கும். இந்தப் படத்தின் நாயகன் ஒரு பஸ் கண்டெக்டர். அப்படியான ஒரு பாத்திரத்தின் அறிமுகமாக முகப்புப் பாடலாக வருகின்றது "யாரடி நான் தேடும் காதலி".
"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாடலின் வாடை அதிகமாகவே இப்பாடலில் தென்பட்டாலும் பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு பஸ்ஸுக்குள் இருந்து இளசு ஒன்றின் மனக்கிடக்கை அழகான பீட் உடன் கொண்டு வருகின்றது. பலருக்கு இந்தப் பாடலை இப்போதுதான் முதற்தடவை கேட்கும் அனுபவமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.



அடுத்த தெரிவாக வருவது பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே " . இந்தப் படத்தை இயக்கிய எஸ்.டி.சபாவுக்கு இதுதான் முதற்படம். இவர் தான் பின்னாளில் சபாபதி என்றும் சபாபதி தக்க்ஷணாமூர்த்தி என்று இன்னாளிலும் தன் பெயரை மாற்றிக் கொண்டு தன் சினிமா வாழ்க்கையில் ராசியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் ஒன்றைச் சிலாகிக்கலாம். அது, பாடல்களைப் படமாக்கும் விதம். பரதன் படத்திலும் இளையராஜா, ஜானகி பாடும் "புன்னகையில் மின்சாரம்" பாடலை எடுத்த விதமே ஒரு சாம்பிள். இங்கே நான் தரும் பாடல் "அழகே அமுதே" வை தனித்துப் பாடியிருக்கிறார் இசைஞானி. பாடலின் ஆரம்பத்திலேயே திடுதிப்பாக வேகமானதொரு பீட் ஓடு ஆரம்பிக்கும் இசை அதையே தொடர்ந்தும் முடிவு வரை இழுத்துச் செல்கின்றது. அண்ணன் தம்பி பாசப் பின்னணியைக் காட்டும் இந்தப் பாடலில் வழக்கமான இப்படியான சூழ்நிலைக்கு வரும் மெலடி இசையைத் தவிர்த்துப் புதுமை காட்டியிருக்கிறார். பாடலில் அண்ணனாக நடிப்பது எஸ்.பி.பாலசுப்ரமணியம், தம்பியாக விஜயாகாந்த். இந்தப் பாடலில் இசைஞானி புகுத்தியிருக்கும் மேற்கத்தேய இசைக்கோவை தனித்துவமானது, அழகானது, அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பேன்.



90களில் வந்த கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இருந்து அடுத்து வரும்
"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது" பாடல் ஒலிக்கின்றது. இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே உட்பட எல்லாப் பாடல் பிரபலங்களும் பாடியிருந்தாலும் யாரோ ஒரு ஞான சூனியம் இயக்குனராக வாய்த்ததால் வெறும் பாடல் சீடியோடு சிலாகிக்கப்பட்டு விட்டது. இசைஞானி இளையராஜா விழலுக்கு இறைத்ததில் இந்தப் படத்தின் பாடல்களும் ஒன்று. இங்கே நான் தரும் "கானம் தென்காற்றோடு போய்ச்சொல்லும் தூது" , ஒவ்வொரு வாத்தியங்களையும் வெகு லாவகமான அணிவகுக்க வைத்து ராஜா தரும் பரிமாறலைக் கேட்கும் போது சுகம். மனுஷர் ரொமாண்டிக் மூடில் "மது மது" என்று உருகிப் பாடும் போதும், கிட்டார், புல்லாங்குழல், வயலின்களின் காதல் ஆர்ப்பரிப்பும் இன்னொரு முறை காதலிக்கத் தோன்றும்.




திரைப்படக்கல்லூரியில் இருந்து செல்வமணி என்ற இயக்குனர் வருகிறார். அவர் இயக்கும் முதற்படம் "புலன்விசாரணை". முதற்படத்திலேயே இளையராஜா என்ற பெரும் இசையமைப்பாளர் துணை நிற்கின்றார் அவரை வைத்து ஐந்து பாடல்களை எடுத்து அதன் மூலமே படத்தை ஓட்டிவிடலாம் என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் ராஜாவிடம் பின்னணி இசையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூன்று பாடல்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவற்றில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அதில் வரும் ஒரு பாடல் தான் "இதுதான் இதுக்குத் தான்" என்ற மேற்கத்தேய இசைக்கலப்பில் ராஜா பாடும் பாடல், துணையாக கங்கை அமரனின் பாடல் வரிகள். "நிலா அது வானத்துமேலே" பாட்டு எப்படி ஒரு பரிமாணமோ அதே வகையானதொரு சுகத்தை இந்தப் பாடலும் கொடுக்கவல்லது.



நிறைவாக வருவது தன் மகன் கார்த்திக் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா பாடும் "ஏய் வஞ்சிக் கொடி" என்ற பொன்னுமணி படத்தில் வரும் பாடல். படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இந்தப் பாடல் மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பொன்னுமணி என்ற கிராமியப்பின்னணிக் கலப்பில் வந்த படத்தில் இப்பாடல் வித்தியாசப்பட்டு நிற்கின்றது. பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் இடையில் ஹோரஸாக "விட்டா ஒன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி" என்று வரும் கணங்கள் புதுமையான கலவையாகப் பாடலை மெருகேற்றி ரசிக்க வைக்கின்றது. பாடல்வரிகள் ஆர்.வி.உதயகுமார். ராஜாவுக்குப் பொருந்தக் கூடிய பாடல்களில் இதுவும் சிறப்பானது.



15 comments:

S Maharajan said...

இசைஞானியின் குரலில் வரும் பாடல்கள் என்றால் அலாதி
இன்பம் தான்

"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது"

முதன் முதலில் கேட்கின்றேன்

நன்றி தல!

Krubhakaran said...

அவதாரம் படத்தில் ”சந்திரனும் சூரியனும்” என்ற பாடல், ஒரு நாட்டு புறத்து மனிதன் western பாடுவது போல பின்னி எடுத்து இருப்பார்

thamizhparavai said...

தல... கலக்கல் தொகுப்பு...
‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ பாடல் முதல்முறையாகக் கேட்கிறேன். சூப்பர். ‘அழகே அமுதே’ என்னோட ஃபேவரைட்.

கோபிநாத் said...

கலக்கல் தொகுப்பு...தல பொன்னுமணி பாட்டு கார்த்திக் இசைன்னு இப்பதான் தெரியும்..;)

Denzil said...

இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்துவம்னா அது ராஜாதான். 80-90களில் எல்லா இசைக்குழுவிலும் ஒரு ராஜா குரல் அவசியம் இருப்பாங்க. எல்லாருக்கும் ராஜா மாதிரி பாடிரலாம்ங்கிற நம்பிக்கைதான் அது. இந்த எளிமைதான் ராஜா.

yarl said...

அவர் பாடிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் "விழியில் விழுந்து" என்ற பாடல் மிகவும் உருக்கமனதும் ஒருவராலும் மறக்கவும் இயலாது. நல்ல தொகுப்பும்.

கானா பிரபா said...

வாங்க மகராஜன்

கானம் தென்காற்றோடு இன்று முதல் உங்கள் பிரியத்துக்குரியதாகட்டும் ;)


வணக்கம் கிருபா

அவதாரம் படமும் ராஜாவின் குரலை முன்னுறுத்தி வந்த அருமையான பாடல்கள் கொண்ட படம் இல்லையா

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை, தல கோபி ;)

G.Ragavan said...

வணக்கம் பிரபா.

இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாடல்கள் ஒன்றா இரண்டா?

பம்பம்பாப பம்பபமா துள்ளும் கால்கள் எங்குமுண்டா என்று தொடங்கி எத்தனை பாடல்கள்.

அதிலும் அதிகம் கேட்டிராத பாடல்களைத் தந்தமைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது போல ஒரு இசையமைப்பாளர் என்னதான் உயிரைக் கொடுத்தாலும் இயக்குனர் மனது வைத்தால் படத்தோடு பாட்டுகளும் காணாம போய்விடும். அந்த முத்துக்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் பெரியவர்.

புன்னகையில் மின்சாரம் எனக்கு விருப்பப் பாடல். என்ன இசை. என்ன குரல். அடடா! அதையும் போட்டிருக்கலாமே.

இதுதான் இதுக்குத்தான் நாட்டுக்கோழி பாஸ்தா. கங்கையமரன் மட்டுமே இப்பிடியும் எழுத முடியும். சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என்றும் எழுத முடியும்.

வஞ்சிக்கொடி பாட்டும் சூப்பர். மற்ற பாடல்களை இப்பொழுதுதான் முதன்முறையாகக் கேட்கிறேன்.

கானா பிரபா said...

Denzil said...

இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்துவம்னா அது ராஜாதான். 80-90களில் எல்லா இசைக்குழுவிலும் ஒரு ராஜா குரல் அவசியம் இருப்பாங்க.//

சரியாகச் சொன்னீர்கள் நண்பா

yarl said...

அவர் பாடிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் "விழியில் விழுந்து" என்ற பாடல் மிகவும் உருக்கமனதும் ஒருவராலும் மறக்கவும் இயலாது.//

வாங்கோ மங்கை அக்கா, அந்தப் பாடல்கள் இன்னொரு பதிவிலும் வர இருக்கு

G.Ragavan said...


இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாடல்கள் ஒன்றா இரண்டா?//

வாங்க ராகவன்

ராஜாவின் பாடல்களில் முக்குளித்து எடுத்ததில் இவை மட்டும் இப்போது ;)

Anonymous said...

அம்மா பாடல்களில் அவர் குரல் அட்டாகாசம்...

Thiagarajahsivanesan said...

Mutthana. Padalgal. Barathan Pa papal migavm pirogue kanam

மாணவன் said...

அருமையான தொகுப்பு

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாணக்கியன் said...

பல பாடல்கள் எனக்குப் புதியவை! பகிர்தலுக்கு நன்றி!. ‘ஊருறங்கும் நேரத்தில் ஓசையில்லா சாமத்தில்’ என்றொரு பாட்டு உண்டு. கேட்டுப் பாருங்கள்! அற்புதமாக இருக்கும்..

R.Gopi said...

அருமையான பதிவு...

இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் சில துளிகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்..

ராஜா ராஜா தான்...

இனிமையான ட்யூன், கூடவே அட்டகாசமான ம்யூசிக் கம்போசிங், இது தானே இளையாராஜா ஸ்பெஷாலிட்டி?