Pages

Saturday, January 9, 2010

"பார்த்ததும் கரைந்தேனடா" - கேட்டதில் இனித்தது

கடந்த வாரம் இசைத்தட்டு விற்கும் கடைக்குள் நுழைகின்றேன், "பார்த்ததும் கரைந்தேனடா..காதலில் உறைந்தேனடா" என்று சித்ராவின் குரல் ஸ்பீக்கர் வழியாக வந்து செவி வழி போய் நெஞ்சில் கலக்கின்றது. அந்தப் பாடல் ஒலித்து ஓயும் வரை கடையில் சீடிக்களை மேய்வது போல பாவ்லா காட்டி விட்டு, முடிந்த கணம் பாடல் இசைத்தட்டை வாங்கிக் காரில் போட்டுக் கொண்டே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கின்றேன்.

"பார்த்ததும் கரைந்தேனடா" என்ற அந்தப் பாடல் யாதுமாகி என்ற திரைப்படத்திற்காக ஜேம்ஸ் வசந்தனின் இசையில் சித்ராவோடு, விஜய் ஜேசுதாஸ் இணைந்து பாடியது. புதிதாக வரும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டோ, திரையில் பார்த்தோ தான் மனதுக்கு நெருக்கமாக வைக்க முடிகின்றது. ஆனால் கேட்ட கணத்தில் இப்படி உடனேயே ஊடுருவும் பாடல்களில் சென்னை 28 இல் வந்த "யாரோ யாருக்குள் இங்கு யாரோ" பாடல் வரிசையில் இந்தப் பாடலும் சேர்ந்து விட்டது. என்ன காரணம் என்று பார்த்தால் உடனேயே தீர்மானமாகச் சொல்லக் கூடியது இந்தப் பாடல்களில் அந்நியமில்லாத எண்பதுகளில் வந்த பாடல்களின் வாடை என்று தான் தெரிகின்றது.

இன்று ஒரு படத்திலேயே பட்டியல் போட்டுப் பார்க்கக் கூடிய அளவுக்குப் பாடகர்களின் எண்ணிக்கை வந்த பின்னர் சித்ரா போன்ற பழைய குரல்களை எப்போதாவது தான் புதுப்பாடல்களில் கேட்க முடிகின்றது. அதுவும் "பார்த்ததும் கரைந்தேனடா" என்ற இந்தப் பாடலில் எண்பதுகளிலே கோர்த்த மெட்டுப் போன்ற வகையறாவுக்குச் சித்ராவின் குரல் எடுப்பாகப் பொருந்துகின்றது. கூடவே விஜய் ஜேசுதாசுக்குப் பதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஜேம்ஸ் வசந்தனிடம் மெல்லிசையாகக் கொடுக்கக் கூடிய பாடல்கள் இன்னும் நிறைய தன் நெஞ்சிருப்பில் வைத்திருப்பார் போல. ஹாரிஸ் ஜெயராஜ் அரைத்த மாவையே அரைத்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்தாலும், ஜேம்ஸ் வசந்தன் கவனிக்கப்படத்தக்க அளவில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சுப்ரமணியபுரம், பசங்க வரிசையில் "யாதுமாகி" பாடலும் சேர்ந்து கொள்கிறது. மனுஷருக்கு இளையராஜா காலத்தில் இருந்து விடுபடமுடியாத ஆசை இருப்பதை இங்கே நான் பகிரும் பாடலே சாட்சியமாக அமைகின்றது.

சமீபகாலமாக அதிகம் காதல் பாடல்களில் பயன்படுத்தப்படாத தபேலா வாத்தியத் துள்ளலும் எடுப்பாக இந்த எண்பதுகள் மெட்டை அலங்கரித்து மெருகூட்டுகின்றது. உதாரணமாக "கேட்கும் போது இல்லை என்று ஏங்க வைக்கிறாய்" என்று விஜய் ஜேசுதாஸ் முடிக்க நினைக்க வந்து ஒட்டிக் கொள்ளும் தபேலாவின் தாளக்கட்டு அருமை.
ஆனால் என்ன, பாடல் ஆரம்பிக்கும் விதமும், இடையிசையில் பாவித்திருக்கும் நவீன வாத்தியக்கருவிகள் பாடலின் ஓட்டத்துக்கு அந்நியமாக இருக்கின்றன. இருந்தாலும்

பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
கேட்டுக் கொண்டே இருப்பேனடா...11 comments:

தர்ஷன் said...

நாணயம் படத்தில் நான் போகிறேன் மேலே மேலே பாடல் கேட்டீர்களா
டைம் படத்தில் "நிறம் பிரித்துப் பார்த்தேன்" பாடல் கேட்கும் போதும் எனக்கு எண்பதுகளின் பாடல் கேட்ட உணர்வு வரும்.

Pragash said...

உண்மைதான் பிரபா.இன்று வருகின்ற பாடல் எனப்படுகின்ற இரைச்சல் குப்பைகளுக்கிடையில் எப்போதாவதுதான் இப்படி அத்தி பூத்தது போல சில பாடல்கள் வருகின்றன. ஆனாலும் தாங்கள் குறிப்பிட்டது போல விஜய் ஜேசுதாசின் குரல் மட்டும் தான் அறவே ஒட்டவில்லை.

thamizhparavai said...

தலை எனக்கும் பிடித்த பாடல் இது... கொஞ்சம் பழைய வாடை, கொஞ்சம் ஹிந்தி சாயல் அடித்தாலும் கூட....

கோபிநாத் said...

பகிர்வுக்கு நன்றி தல....இறக்கி கேட்டு விடுகிறேன். கோவா கேட்டிங்களா!??

ஆமா பழைய டெம்லேட் என்ன ஆச்சு???

Anonymous said...

கேட்டுருவோம்:)

hayyram said...

gud. song nalla irukku.

regards
ram

www.hayyram.blogspot.com

ஆயில்யன் said...

//இந்தப் பாடல்களில் அந்நியமில்லாத எண்பதுகளில் வந்த பாடல்களின் வாடை என்று தான் தெரிகின்றது.
//

ஹம்ம்ம்ம் ! நல்லா இருக்கு பாடல் !

Thamiz Priyan said...

பாஸ்.. இது மேகமாய் வந்து போகிறாய் மெட்டை காப்பி அடிச்ச மாதிரி இருக்கு.. ;-)

M.Rishan Shareef said...

கேட்டதும் கரைந்தேனே நான் :)

எனது இரசனையை நன்றாகப் புரிந்து
வைத்திருக்கிறீர்கள். :)

நல்லதொரு மெல்லிசை. இழையோடும் சித்ராவின் குரல் என்றும் மாறாத அற்புதம். விஜய்யின் குரல் பொருந்தவில்லை.

தர்ஷன் சொல்வது போல "நிறம் பிரித்துப் பார்த்தேன்" சுஜாதாவின் பாடல்கூட அருமையான இசையைக் கொண்டது.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

கானா பிரபா said...

தர்ஷன்

நிறம் பிரித்துப் பார்த்தேன் கலக்கலாக வந்த பாட்டு, நாணயம் பாட்டில் எஸ்.பி.பியும் சித்ராவும் சேர்ந்தது வெகு சிறப்பு

பிரகாஷ்

இரண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை ;)

தமிழ்ப்பறவை

அந்த ஹிந்தி வாடை இசையில் இருப்பதாகப் படுகிறது

தல கோபி

கோவா அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ;) பழைய டெம்ப்ளேட்டை காக்கா கொண்டு போயிடுச்சு தல ;)

சின்ன அம்மிணி

இப்போ கேட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்

வருகைக்கு நன்றி ஹே ராம்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஆயில்ஸ்

தமிழ்ப்பிரியன்

;-) மேகமாய் மெட்டோடு நெருங்கித் தான் வருது

ரிஷான்

;) கேட்டாச்சா