Pages

Saturday, November 7, 2009

சுரேஷ் சக்ரவர்த்தி ஒலிப்பேட்டி

"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.


காலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.

தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்



பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.

நடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.

00000000000000000000000000000000000000000000000000000

அப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. "நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ" அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.


பிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண


000000000000000000000000000000000000000000000000000000000000



தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.
பாலசந்தர் ஆபீஸ் போனேன்.
தொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு "சொர்ணரேகை"ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000



சன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,

சிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக நான் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.

துபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் "நீயே பண்ணுப்பா"ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.
முதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.

அமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய "பதி சபாபதி" நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.

நான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000


பிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.

0000000000000000000000000000000000000000000000000000000

உத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000000

தனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.

00000000000000000000000000000000000000000000000000000000

பி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.

12 comments:

ஆயில்யன் said...

முழுவதும் கேட்டு முடித்தப்போது மிகுந்த சுவாரஸ்யம் அளித்த பேட்டியாகவே எனக்கு தோன்றியது! ப்ரெண்ட்லி அப்ரோச்சான அவரது பதில்களும் பாலச்சந்தர் பற்றி அவரது பகிர்வுகளும் மிக அருமை!

அவரது பேட்டியினை முடிந்து தொடர்ந்து வந்த பெண்மணியின் கேள்வியில் - அத்தனை பிரபலங்களுக்கிடையில் தன் திரை வாழ்வினை விட்டு விலகி ஆஸியில் இருப்பது மிகுந்த நெகிழ்ச்சியினை அளிப்பதாக கூறிய அதே மனநிலைதான் எனக்கும்!

வாழ்த்துக்கள் சுரேஷ் சக்ரவர்த்தி

வாழ்த்துக்கள் கானா பிரபா :)

வடுவூர் குமார் said...

மறந்து போய்விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு கலைஞரை ஞாபகப்படுத்தி அவரை பேட்டி கண்டு இங்கு ஏற்றியதற்கு மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் said...

இப்பொழுது கேட்க சுட்டி இருக்கிறதா?

கானா பிரபா said...

இலவசக்கொத்தனார் said...

இப்பொழுது கேட்க சுட்டி இருக்கிறதா?//


கொத்தனாரே

சுட்டி இணைப்பில் கொடுத்திருக்கின்றேன்

Anonymous said...

Interesting , Thanks for sharing. Continue your loving work.

Maki.
Houston-TX -USA

சந்தனமுல்லை said...

அதிராம்பட்டினம் சொக்கு??

சுவாரசியம் கானாஸ்...தங்களின் சேவை தொடரட்டும்!

RAMYA said...

நான் அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியை பற்றி நினைப்பது உண்டு. எங்கே காணாமல் போய்ட்டாரேன்னு.

இன்றுதான் உங்களின் லிங்க் கிடைத்தது. படித்தேன் பேட்டி மனதிற்கு நிறைவாக இருந்து.

சுரேஷ்! உங்களுடன் பேசியது போன்று ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. நீங்கள் எல்லா வளங்களுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.

காண பிரபா பகிர்வுக்கு மிக்க நன்றி!!

வாழ்த்துக்கள் கானா பிரபா :)

கோபிநாத் said...

நன்றி தல..;)

கானா பிரபா said...

ஆயில்யன்

வானொலிப் பேட்டியை நேரடியாகக் கேட்டதோடு கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி

வடுவூர் குமார், Maki, சந்தனமுல்லை, ரம்யா, மற்றும் தல கோபி

சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களின் பேட்டியைக் கேட்டு உங்கள் கருத்திட்டமைக்கு நன்றி

☼ வெயிலான் said...

மிகச்சுவாரசியமான நேர்காணல் பிரபு!

கானா பிரபா said...

மிக்க நன்றி வெயிலான் நண்பா

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ் சக்கரவர்த்தி!

நன்றி கானாஸ்!