"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன்.
முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.
"முள்ளும் மலரும்" நாவலை நான் படித்த போது கதாபுருஷன் "காளி" வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை" இப்படியாக இருந்த மகேந்திரனுக்கு அவரின் குடும்ப நண்பர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியாரின் அறிமுகம் மூலம் இந்தக் கதையையே தன் முதல் திரைப்படமாக உருவாக்க ஆரம்பித்தார்.
கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சியில் அண்ணன் காளி (ரஜினி) பெருமை பிடிபடாது தன் தங்கையை (ஷோபா) வை அழைத்துக் கொண்டு வந்து மணமகன் (சரத்பாபு) முன்னே வந்து" இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கலை" என்று சொல்வார். இந்தக் காட்சி படமாக்கும் போது சரத்பாபுவை காணவில்லையாம். தேடிப்பிடித்துக் கூட்டி வந்தால் "அதெப்படி இப்பவும் இந்த ஆள் இப்பவும் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லலாம்" என்று சொன்னாராம். பின்னர் மகேந்திரன் அவருக்கு புரிய வைத்துப் படத்தை எடுத்தாராம்.
படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank chequeகை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.
இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.
இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புக்காகப் பார்த்த போது உண்மையிலேயே ஒரு கோடு போல உள்ள கதையை சுவாரஸ்யமான காட்சி அமைப்புக்களோடும் ரஜினி, ஷோபா, படாபட் போன்றோரின் இயல்பான நடிப்பிலும் கவரவைக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவும் உறுத்தல் இல்லாத பாலுமகேந்திரமாக இருக்கிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான காளி, வள்ளி போன்றவை பின்னாளில் ரஜினியின் படங்களின் தலைப்பாக வந்தமை குறிப்பிடத்தக்கது. படாபட், ஷோபா இருவருமே சில வருஷங்களின் பின் தற்கொலை செய்ததும் நடிப்புலகின் துரதிஷ்டம்.
படத்தின் ஆரம்பத்தில் இளையராஜா படும் "மானினமே" பாடலின் இசையே படத்தில் பெரும்பாலும் பின்னணி இசையாகத் தூவ விடப்பட்டிருக்கிறது. இனி "முள்ளும் மலரும்" இசைத் தொகுப்பை அனுபவியுங்கள்
ஆரம்ப பாடலாக காளி, சகோதரி வள்ளி ஆகியோரின் பாசத்தை காட்டும் "மானினமே" பாடல்
படத்தில் அதிகம் இடம்பிடித்திருக்கும் நெகிழ்வான பின்னணி இசை, இந்த இசை மகேந்திரனின் அடுத்த படைப்பான "உதிரிப்பூக்கள்" படத்தில் வரும் "அழகிய கண்ணே உறவுகள் நீயே" பாடலை நினைவு படுத்துகின்றது.
ஊரில் அடைக்கலமாகும் மங்கா(படாபட்) இற்கு காளியின் தங்கை வள்ளி அடைக்கலம் கொடுத்து விட்டு அண்ணனை சமாளித்தல் மானினமே பாடலின் இசை பயன்படுத்தபட்டிருக்கிறது.
காளி (ரஜினி) கோயிற்குளத்தில் மீன்களுக்கு பொரி போடுதல், பாகுபாடின்றி எல்லோரும் உதவும் காளி என்ற பாத்திரம் என்பதை உவமை பொருந்தக் காட்டும் காட்சி. கிட்டார் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
காளியை (ரஜினி) சீண்டும் இன்ஜினியருக்கு (சரத்பாபு) பாடம் படிப்பிக்க, இழுவை இயந்திரத்தை பாதியில் நிறுத்துக் காட்சி
இன்ஜினியர் பாத்திரம் பாடும் "செந்தாழம் பூவில்"
வேலையில் இருந்து பத்து நாள் இடைமறிப்பு செய்த ஆத்திரத்தில் குடித்து விட்டு காளி பாடும் "ராமன் ஆண்டாலும்"
மங்காவுக்கும் காளிக்கும் திருமணம் நடந்து முடிந்த இரவில் "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு"
வள்ளிக்கு என்ஜினியர் மேல் வரும் காதல் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை"
காளியின் முரட்டுப் பிடிவாதம், ஆத்திரம், பாசப்போராட்டம், இயலாமை எல்லாம் கலக்க இசை ஆர்ப்பரிப்பில் படத்தின் இறுதிக் காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
கலக்கல் தொகுப்பு தல.. நன்றி!
நல்லதொரு இசை பகிர்வு.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
முள்ளும் மலரும் மிகவும் அருமையான படம். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்த படங்களிலேயே இந்த படம் தான் என்னை மிகவும் கவர்ந்த படம்.
உங்களுக்கு சிரமமில்லை என்றால் மானினமே பாடலை என் இணைய முகவரிக்கு எம்பி3 வடிவை அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்
dul_fiqar@yahoo.com.sg
வருகைக்கு நன்றி தமிழ்ஸ் ;)
இதுக்கு நீங்க மொத்தப் படத்தையும் கொடுத்திருக்கலாம் :)
முள்ளும் மலரும் ராஜாவுக்கு ரொம்ப வேலை கொடுத்த படம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ’தமிழ் சினிமாவிலே முதன்முறையா பின்னணி இசை ஒரு படத்துக்கு உயிர் கொடுக்கமுடியும்ன்னு நிரூபிச்சது’ - இப்படி மகேந்திரன் ஒரு பேட்டியிலே சொல்லியிருந்தார்.
அந்தப் பேட்டி(MP3)யைத் தேடிகிட்டிருக்கேன், இன்னும் கிடைக்கலை. இப்போதைக்கு அவர் சொன்னதில நினைவில் உள்ளது சில:
* ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஓர் இசை - minithemeமாதிரி
* திரைக்கதையில இரண்டு பாத்திரங்கள் சந்திச்சுக்கும்போது, அந்தந்த மினி தீம் இசைகள் கலந்து வரும், சும்மா ஒட்டுப்போட்டதுமாதிரி இல்லாம சந்தோஷம், துக்கம்ன்னு அந்தக் காட்சியின் உணர்வுகளோட சேர்ந்து வித்தியாசமா ஒலிக்கும்
* தியேட்டருக்கு வெளிய இருந்து கேட்கிறவங்களுக்கு, இந்த இசையே பாதி கதையைச் சொல்லிடும், ‘இங்கே இவன் இவளை மீட் பண்றான், கோவப்படறான்’ங்கற லெவலுக்குச் சொல்லிடமுடியும்
- என். சொக்கன்,
பெங்களூர்.
துபாய் ராஜா said...
நல்லதொரு இசை பகிர்வு.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ராஜா உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
முள்ளும் மலரும் திரைப்படம் ஒரு காவியம். ஓவியத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் வண்ணத்துளி பொருத்தமாக அமைந்து ஓவியத்தைச் சிறப்பிப்பது போல... இந்தக் காவியத்தில் பங்காற்றிய ஒவ்வொருவரும் தத்தமது திறமையைச் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றார்கள் என்பது உண்மை.
எழுபதுகளின் இறுதியில் தமிழ்த்திரைப்பட மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இரண்டாவது படம் என்று சொல்லலாம். (பதினாறு வயதினிலே முதல் படம்).
இரண்டு படங்களிலும் இளையராஜா இசை. கவியரசரின் வரிகள். சிறந்த பாடகர்கள். விளைவு? கேட்கத்திகட்டாத கானங்கள்.
ஆனால் இரண்டு படங்களுக்கும் ஒரு வேறுபாடு..... அல்லது முன்னேற்றம் என்று சொல்லலாம். வந்த புதிதில் இளையராஜாவின் பாடல்கள் புதுமையான மெட்டுகளோடு வந்தாலும்....பின்னணி இசை பொருத்தமாக இருந்தாலும் அது மெல்லிசை மன்னரின் தொடர்ச்சியாக இருந்தது. அன்னக்கிளி, பத்ரகாளி, இன்னும் சிலபல படங்களைக் கண்டிப்பாகச் சொல்லலாம்.
16 வயதினிலே படத்தில் ஒரு தெளிவான வேறுபாடு தெரியத் தொடங்கியது. ஆனால் அந்த சிறப்பான வேறுபாடு தன்னை முழுமையாகப் பரிணமித்துக்கொண்ட படம் முள்ளும் மலரும். காட்சிகளும் நடிப்பும் கருத்தாழத்தோடு இருந்து விட்டபிறகு.... பின்னணி இசை தன்னுடைய சிறப்பை வெளிக்காட்டியே ஆகவேண்டும் அல்லவா. அதுவும் இளையராஜா போன்ற இசைக்கலைஞர்களிடம்.
நல்லதொரு இசைத்தொகுப்பைக் கொடுத்தமைக்கு இளையராஜாவிற்கும், அதைக் கொண்டு வந்து கொடுத்த பிரபாவிற்கும்.. அதற்காக எல்லா வகையிலும் தொடர்புள்ள அனைவருக்கும் நன்றி பல.
படிக்கவும்
கேட்கவும்
சுவையாக தொகுத்திருக்கிறீர்கள்.
நன்றிகள் பல...,
comments பார்க்கும்போது...,
பதிவின் தொடர்ச்சியாக தெரிகிறது.
(உபயம் சொக்கன் & ஜி.ரா )
thanks
Super, Kana praba..kalakiteenga..
முதலில் மனமார்ந்த நன்றிகள் தல ;))
படத்தை பத்தி நான் சொல்வதை விட தல சொக்கரும் ஜிராவும் சொல்லிட்டாங்க.
\\கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் \\
அதே கமல் தான் படம் பாதியில் நின்ற போது உதவியும் செய்தராம்.
சூப்பர்ஸ்டார் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படங்களில் மிக முக்கிய படம் இந்த படம். அந்த காளி காதப்பத்திரத்தில் அவரை தவிர வேற யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்துயிருப்பார். வசனம் வெளிப்படும் போது அவர் செய்யும் ஸ்டைல் இருக்கு பாருங்க..அட அட பின்னியிருப்பாரு மனுஷன்.
கண்ணு கண்ணீரை வச்சிக்கிட்டு சரத்பாவுக்கிட்ட பேசும் போது அந்த வசனங்களும் எத்தனை காலங்களையும் கடந்து நிற்க்கும்.
\\"செந்தாழம் பூவில்"\\
இந்த பாடல் ஒளிப்பதிவை இன்று இருக்கும் ஒளிப்பதிவர்கள் அனைவரும் பாராட்டும் ஒன்று. அருமையான பாடல் அதை காட்சிபடுத்திய விதமும் அருமையாக இருக்கும்.
\\இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.\\
எந்த காட்சியை சொல்லவது எதை விடுவது என்று யோசிக்க வைக்கும் உழைப்பு இசைஞானியின் உழைப்பு. எனக்கு மிக மிக மிக கவர்ந்த பின்னனி இசைகளில் ஒன்று இந்த படத்தில் வரும் அந்த கடைசி இசை தான்.
எடுத்த வளர்ந்த தங்கை அண்ணன் சொல்லை அவனை கடந்து போறா....அவளுக்குள்ள அண்ணனையும் விட முடியமால் காதலையும் விட முடியமால் ஒரு போராட்டம் நடக்கும் பாருங்க....அந்ந போராட்டத்தை அந்த நடிகை என்ன தான் நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தாலும். அதை தன்னோட இசை மூலமாக ஊர் முழுக்க தெரியும் படி செய்துயிருப்பாரு ராஜா.
அப்படியே மெல்ல மெல்ல எழுந்து காதலா அண்ணனா இப்படி போராட்டம் பண்ணி கடைசில அண்ணனோட மார்புல வந்து விழுகிற வரைக்கும் அந்த இசை வரும்....அட்டகாசம் செய்திருப்பாரு ராஜா ;)
இன்றைக்கும் எத்தனை இயக்குனார்கள் முயன்றாலும் இப்படி ஒரு கவியத்தை படைக்க முடியாது. அதான் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் வெற்றி ;)
அருமையான தொரு படைப்பை தந்தமைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் தல ;)
nagoreismail said...
முள்ளும் மலரும் மிகவும் அருமையான படம். ].//'
வருகைக்கு நன்றி நண்பரே
// nchokkan said...
முள்ளும் மலரும் ராஜாவுக்கு ரொம்ப வேலை கொடுத்த படம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். //
வாங்க சொக்கரே, அந்த எம்பி3 ஐ எப்படியாவது எம்பி எடுக்கணும் நீங்க ;) நீங்கள் குறிப்பிட்டது போல பாத்திரங்களுக்கான தனித்துவமான இசையோடு, படத்தின் இறுதிக்காட்சியில் வாத்தியங்களின் ஆர்ப்பரிப்பு அபாரம்.
நன்றி காபி அண்ணாச்சி, அழகான இசைத் தொகுப்புக்கு!
செந்தாழம் பூவில் பாட்டு ஒரு அழகிய தென் துருவம்-ன்னா,
நித்தம் நித்தம் நெல்லிச் சோறு இன்னொரு கிக்கான வட துருவம்!
இரு துருவங்களையும் இசையால் இணைத்த அற்புதமான படம் முள்ளும் மலரும்!
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இன்னும் நிறைய படங்கள் செய்திருக்க வேண்டும்! அப்படி மட்டும் நடந்திருந்தால் தமிழ் சினிமா இன்னொரு பரிமாணத்தையும் வெற்றியும் பார்த்திருக்கும்!
ஷோபாவைப் பற்றி என்ன சொல்ல? அற்புதமாக செதுக்கப்பட்டு வந்த சிலை! கண்ணைச் செதுக்கும் போது உளி குத்தி விட்டதோ? :(
இளையராஜா தானே இசையைத் தருவது ஒரு சிறப்பு-ன்னா, அவரு கிட்ட இசையைத் தெறமையா வாங்குறது இன்னொரு சிறப்பு! மகேந்திரன் அப்பவே அதைக் கச்சிதமாப் பண்ணி இருக்காரு போல!
அன்னக்கிளியும் கிராமிய மெட்டு தான்! ஆனால் நித்தம் நித்தம் நெல்லிச் சோறு கேளுங்க! வெறுமனே கிராமியம்-ன்னு சொல்லீற முடியாது! குத்துப் பாட்டின் சாயல் கூட இருக்கும்! :)
முள்ளும் மலரும் கிராமியத்தையும் தாண்டி மெலடியில், புதிய புதிய மெட்டுகளோடு, ராஜாவுக்கு ஒரு பல்முனைப் பரிமாணத்தை ஏற்படுத்திக் கொடுத்துச்சி!
@சொக்கன்
//தியேட்டருக்கு வெளிய இருந்து கேட்கிறவங்களுக்கு, இந்த இசையே பாதி கதையைச் சொல்லிடும், ‘இங்கே இவன் இவளை மீட் பண்றான், கோவப்படறான்’ங்கற லெவலுக்குச் சொல்லிடமுடியும்//
சூப்பரு! நான் இந்தப் படத்தை இப்பல்லாம் ஓட்டினா பார்க்காமலேயே என்ன பண்ணுவேனோ, அதை அப்படியே சொல்லிட்டீக! :)
//பின்னணி இசை, இந்த இசை மகேந்திரனின் அடுத்த படைப்பான "உதிரிப்பூக்கள்" படத்தில் வரும் "அழகிய கண்ணே உறவுகள் நீயே" பாடலை நினைவு படுத்துகின்றது//
ஹைய்யோ! இத அடிக்கடி நண்பர்கள் கிட்ட பேசும் போதெல்லாம் சொல்லுவேன்! ஹம் பண்ணிக் காட்டினாலும் ஒருத்தனும் நம்ப மாட்டானுங்க! ராஜா இசை என்பதால் நானாக் கற்பனை பண்ணிக்கறேன்-ன்னு ஓட்டுவானுங்க! :)
இப்போ நீங்க இதைச் சொல்லும் போது...தேன் வந்து பாயுது காதினிலே! காபி அண்ணாச்சி வாழ்க! :)
சாரு நிவேதிதாக்கு இந்த லின்க் அனுப்புங்கப்பா யாராச்சும் ;) இதையும் குப்பைன்னு சொல்லுவார்
G.Ragavan said...
முள்ளும் மலரும் திரைப்படம் ஒரு காவியம்.//
வாங்க ராகவன், பின்னூட்டத்தில் ஓர் அழகிய மதிப்பீடே வழங்கிட்டீங்க மிக்க நன்றி
கலைக்கோவன் said...
படிக்கவும்
கேட்கவும்
சுவையாக தொகுத்திருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி நண்பா
//Subbaraman said...
Super, Kana praba..kalakiteenga..//
வருகைக்கு நன்றி நண்பரே
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....
ஐயா மன்னிச்சிடுங்க, தப்பாச் சொல்லிட்டேன்.
இப்பதான் நினைவு வருது - மகேந்திரன் சொன்ன அந்த வரிகள் / பாராட்டு எல்லாமே, ‘உதிரிப் பூக்கள்’ BGMபற்றினது, தவறுதலா முள்ளும் மலரும்ன்னு நினைச்சு இங்கே பதிவு செஞ்சுட்டேன், ரொம்ப ஸாரி ...
- என். சொக்கன்,
பெங்களூர்.
// கோபிநாத் said...
எந்த காட்சியை சொல்லவது எதை விடுவது என்று யோசிக்க வைக்கும் உழைப்பு இசைஞானியின் உழைப்பு. எனக்கு மிக மிக மிக கவர்ந்த பின்னனி இசைகளில் ஒன்று இந்த படத்தில் வரும் அந்த கடைசி இசை தான். //
வாங்க தல, உங்களைப் போன்ற தீவிர ரசிகர்களுக்கு இவை பெரும் விருந்தாக இருக்கும் என்பதால் தான் தருகின்றேன் மிக்க நன்றி
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நன்றி காபி அண்ணாச்சி, அழகான இசைத் தொகுப்புக்கு!//
வாங்க ரவிஷங்கர் தல, உங்க பாணியில் முள்ளும் மலரும் பார்வை அருமையா சொல்லியிருக்கீங்க, பதிவை போட்டு நல்ல பின்னூட்டங்களை எடுத்திட்டேனே ;)
சப்ராஸ் அபூ பக்கர் said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....//
உங்களுக்கும் இனிய வாழ்த்துககள் நண்பரே
//nchokkan said...
‘உதிரிப் பூக்கள்’ BGMபற்றினது, தவறுதலா முள்ளும் மலரும்ன்னு நினைச்சு இங்கே பதிவு செஞ்சுட்டேன், .//
அதெல்லாம் பிரச்சனை இல்ல பாஸ், உதிரிப்பூக்கள் போடும் போது உங்க பின்னூட்டத்தை ஒட்டி விடுகிறேன் ;)
நண்பர் கானா பிரபா
தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்
அற்புதமான இசை பகிர்வு.
எப்படிங்க தோனுச்சு?குரு
கலக்கல்,மாநினனமே பாடல் முதன் முதாலாய் கேட்கிறேன்.
எப்படி நன்றி சொல்வது?
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நித்தம் நித்தம் , செந்தாழம் ,ராமன் ஆண்டாலும் எப்போதும் என் பேவரிட்.
படம் எங்கு படமாக்கினார்கள்?
அந்த வின்ச் வண்டி இன்னும் புழக்கத்தில் உள்ளதா?
நாம் தான் எவ்வளவு நல்ல நடிகரை வீணடித்திருக்கிறோம்?
இயக்குனர் மகேந்திரன் அற்புத இயக்குனர்.
நீங்களும் சொன்னீர்கள்...இன்று கண்ணபிரானும் சொல்லி இருக்கிறார். வேறு சிலரும் சொல்லி இருக்கின்றனர். ஒரு இசையமைப்பாளனிடம் இருப்பதை வெளிக்கொணரும் ஆற்றல் இயக்குநரிடம் இல்லையேல் நல்ல இசையை கேட்க முடியாது. பிரபல இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் பாடல்கள் நன்றாக இருப்பதன் காரணம் இதுதான். அப்படி அமைந்துவிட்டால் அதுவே படத்தின் வெற்றிக்கு அடிகோலிவிடும்.
அருமையான ஒரு பதிவும் தொகுப்பும். தொடரட்டும் வாழ்த்துக்கள்.
தாமதமான ஒரு பின்னூட்டம். தமிழ்த்திரையுலகின் அற்புதப் படைப்புக்களிலொன்று முள்ளும் மலரும். படத்தின் பெயரே சிலேடையாய் கதைக்குப் பொருத்தமாய் இருபொருள் தருகின்றது. அப்போதெல்லாம் யாழ்நகரில் ஓடியபின் பெரும்பாலும் பருத்தித்துறையில் சென்றல், புலோலி சினிமா, நெல்லியடியில் மஹாத்மா,லக்ஷ்மி தியேட்டர்களுக்குத்தான் படங்கள் வருவது வழமை. லக்ஷ்மி தியேட்டரில் முள்ளும் மலரும் பார்த்துவிட்டுப் பயங்கரக் கடுப்பில் இருந்தேன். ஒரேயொரு சண்டைக்காட்சி. அதையும் குளோஸ் அப்பில் காட்டவில்லை. ரஜனி படமென்று நம்பிப் போனால் இப்படி ஏமாற்றிவிட்டார்களேயென்று சரியான கோபம்.'94/'95இல் நாடோடிக்கொண்டிருந்த காலத்திற்றான் படத்தை இரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
//தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான...//
படைப்பாளியின் தன்மானத்தினை விட்டுக்கொடுக்காத/அடகு வைக்காத.... என்றும் சேர்த்துக்கொள்ளலாம்.
படம் தொடர்பான தகவல்களுக்கும் நன்றி பிரபா.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
எப்படி நன்றி சொல்வது?
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நித்தம் நித்தம் ,//
காலம் கடந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா, அந்த விஞ்ச் வண்டி இப்போது உபயோகத்தில் இருக்கா என்று தெரியவில்லை. ரஜினி, மகேந்திரன் இருவருக்குமே இந்தப் படம் ஒரு மைல் கல் இல்லையா.
கதியால் said...
நீங்களும் சொன்னீர்கள்...இன்று கண்ணபிரானும் சொல்லி இருக்கிறார். வேறு சிலரும் சொல்லி இருக்கின்றனர். //
உண்மைதான் நண்பா, ஒரு ரசனை உள்ள இயக்குனர் தான் சாமர்த்தியமாக வேலை வாங்கும் திறனைப் பெற்றிருப்பார்.
கரவெட்டியான் said...
தாமதமான ஒரு பின்னூட்டம். தமிழ்த்திரையுலகின் அற்புதப் படைப்புக்களிலொன்று முள்ளும் மலரும்.//
ஆகா, இளவயசில் இந்தப் படத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லையா ;) அருமையான நனவிடை தோய்தலை பின்னூட்டத்தில் கண்டேன்.
can't i download the files
Post a Comment