Pages

Friday, February 27, 2009

அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்


என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா மறைந்து இன்னும் ஒரு நாள் எச்சத்தில் இருக்கும் ஓராண்டில் அவர் நினைவாக, சுஜாதா குறித்த மீள் பதிவுடன் அவர் தந்த ஒலிப்பேட்டியையும் தருகின்றேன். நாளை வானொலியில் சிறப்பு அஞ்சலிப் பகிர்வையும் கொடுக்கவிருக்கின்றேன்.


எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, "ஆ" என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்", எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்" என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் " நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க" என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக.......
6 comments:

தமிழ் பிரியன் said...

நல்ல பேட்டி! இறுதியில் ஈழம் குறித்து குறியது நிதர்சமனமான உண்மை.. :(

கானா பிரபா said...

மிக்க நன்றி தமிழ்பிரியன், அவர் இறந்தது கூட ஒரு கனவாக இருக்கின்றது.

அருண்மொழிவர்மன் said...

எனது அனுபவத்தில் ஒரு இழப்பின்போது முற்றிலும் செயலிழந்துபோனது போல உணர்ந்தது சுஜாதாவின் பிரிவின்போதுதான். அந்த இரவு முழுதும் அவரது புத்தகங்களை எனது சொந்த தொகுப்புகளி இருந்து மாறி மாறி வாசித்தேன். எதையும் முழுக்க வாசிக்க விடாமல் அழுது அழுதூவாசித்த அந்த இரவு.........
sujatha i love you forever

சுரேஷ் said...

"போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக......."

நெஞ்சை தொட்டுட்டிங்க பிரபா

இப்போ தான் தலைவரோட "மேலும் ஒரு குற்றம்" குறு நாவல் படிக்கலாம்னு எடுத்தேன்.
சரி எதுக்கும் பிரபா வை பார்த்துட்டு படிக்கலாமேன்னு உட்கார்ந்தேன்.
இன்ப அதிர்ச்சியாக தலைவர பத்தின பதிவு.

அவர் இறந்து ஒரு வருடம் ஆகப்போகுதுங்கர செய்தியே நீங்க சொல்லி தான் நியாபகம் வருது . இன்னும் அவர் என்னுடனே தான் வாழ்கிறார் பிரபா.
பதிவிற்கு மிக்க நன்றி பிரபா.

கானா பிரபா said...

//அருண்மொழிவர்மன் said...

எனது அனுபவத்தில் ஒரு இழப்பின்போது முற்றிலும் செயலிழந்துபோனது போல உணர்ந்தது சுஜாதாவின் பிரிவின்போதுதான். //

வணக்கம் அருண்மொழிவர்மன்

உங்கள் நிலையில் தான் என் நிலையும், தன் எழுத்தின் மூலம் எம்மையெல்லாம் ஆட்கொண்டு விட்டார் அவர்.

கானா பிரபா said...

// சுரேஷ் said...

அவர் இறந்து ஒரு வருடம் ஆகப்போகுதுங்கர செய்தியே நீங்க சொல்லி தான் நியாபகம் வருது . //

வாங்க சுரேஷ்

ஒரு வருஷம் என்ன நாம் வாழும் காலம் வரை இவர் நினைப்பை பிரிக்க முடியாது இல்லையா? ஆண்டவனுக்கு ஏன் இந்த கஞ்சத்தனம், இன்னும் குறைஞ்சது பத்தாண்டுகளாவது அவரை வாழ வச்சிருக்கலாம்.